
எல்லாரும் தங்கள் பங்கி்ற்கு செய்தாயிற்று
கிட்ட தட்ட அனைத்து பத்திரிக்கைகளும் கவர் ஸ்டோரி, விவாத மேடை, மொட்டை கடிதம், பகிரங்க கடிதம் உள்ளிட்ட அனைத்தையும் எழுதி தீர்த்துவிட்டன.
ரசிகர்களும் அவர்கள் பங்கிற்கு நோட்டீஸ், துண்டு பிரசுரங்கள், கோரிக்கை மனுக்கள் உள்ளிட்ட பலவற்றை ரஜினிக்கு அனுப்பி தீர்த்துவிட்டனர்.
ப்ளாக் மற்றும் வெப் சைட் நடத்துபவர்கள் தங்கள் பங்கிற்கு ரஜினிக்கு ஆலோசனைகள் அள்ளி வழங்கிவிட்டனர்.
(The above pic is very high resolution. Just CLICK to Zoom)
தற்காலிக வெற்றியில் திளைத்துகொண்டிருக்கும் வயிற்றெரிச்சல் கும்பல் குசேலன் தோல்விக்கான காரணங்களையும் வசூல் குறித்த புள்ளிவிவரங்களையும் வெளியிட்டு அதை தினம் தினம் படித்து அல்ப சந்தோஷப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
திரையுலகில் உள்ள சிலர்/பலர் தங்கள் கவலைகளை தற்காலிகமாக மறந்துவிட்டு குசேலன் சர்ச்சை குறித்து நிம்மதி பெருமூச்சு விட்டுகொண்டிருக்கின்றனர்.
ஒவ்வொரு முறையும் ரஜினியை சோதனைக்காலம் சூழும்போதும் தங்கள் பங்கிற்கு அவரை தாக்கி அறிக்கைவிட்டு குளிர்காயும் அரசியல்வாதிகள் மட்டும் இம்முறை விட்டுவிட்டனர். (தங்கள் எதிரி அவர் அல்ல என்று நினைத்தார்களோ என்னவோ?)
ஆனால் மகா அழுத்தக்காரரப்பா நம்ம ஆள். ஏதாவது ஒன்றுக்காவது - வெளிப்படையாக ஒரு சின்ன ரியாக்க்ஷனாவது - காட்ட வேண்டுமே…? ஹூ…ஹூம்…!!
சூப்பர் ஸ்டார் மனம் திறக்க வேண்டும்…
நம் வலைத்தளத்தில் கமெண்ட் செய்பவர்கள் உள்ளிட்ட மற்றும் நான் சந்திக்கும் பிற நண்பர்கள், சூப்பர் ஸ்டார் - இந்த சூழ்நிலையில் - ‘வருத்தம்‘ சர்ச்சை மற்றும் குசேலன் வியாபாரம் குறித்து மனம் திறந்து - நடந்தது என்ன என்று ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் சொல்லவேண்டும் என்றும், கண்டிப்பாக சொல்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். மற்றும் பலர் சூப்பர் ஸ்டாரின் உரையை இது சம்பந்தமாக கேட்பதற்கு ஒவ்வொரு நொடியும் காத்திருப்பதாக தெரிவித்தனர்.
ஆனால் அவர் மௌனம் கலைப்பாரா?
அவரை நன்கு அறிந்தவர்கள் மற்றும் அவர் நடவடிக்கைகளை இது போன்ற சூழ்நிலைகளில் பல காலம் கூர்ந்து கவனித்தவர்கள் கூறுவதாவது, “வருத்தம் குறித்த சர்ச்சையில் ரஜினி மேலும் விளக்கமளிப்பார் என்று ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் கிட்டத்தட்ட மறக்கபட்டுவரும் அந்த நிகழ்வை மறுபடியும் பேசி ரஜினி நினைவூட்டமாட்டார். அப்படி ‘வருத்தம்‘ சர்ச்சையை பற்றி அவர் வெளிப்படையாக பேசினால், மக்களுக்கு விளக்கிகூறினால், அரசியலில் உள்ள மூத்த தலைவர் ஓருவருக்கும், திரையுலகில் அவர் மிகவும் மதிப்பு வைத்துள்ள ஒருவருக்கும் தான் சங்கடங்கள் நேரும். அது அவருக்கு நன்கு தெரியும். ஏனெனில் வருத்தம் சர்ச்சையில் ஒருவருக்கு நேரடியாகவும் இன்னொருவருக்கு மறைமுகமாகவும் தொடர்பு உண்டு.”
மனம் திறந்து பேசுவதில் உள்ள சிக்கல்
காவிரி உண்ணாவிரத அறிவிப்பின்போது கொதித்தெழுந்து ஆவேசத்துடன் அவர் ஆற்றிய உரை போன்று இப்பொழுதும் ஆற்றமுடியும். ஆனால் அப்படி உரையாற்றினால் ஹொகேனக்கல் பிரச்னையில்ன் தமிழக மக்களுக்கு உண்மையிலேயே துரோகம் செய்தது யார் என்று அவர் கூறவேண்டியிருக்கும். அதே போன்று வருத்தம் சர்ச்சையில் நடந்தது என்ன என்று அவர் உள்ளபடி கூறினால் திரையுலக முக்கியஸ்தர் ஒருவரது மண்டை தான் உருளும். எனவே மேற்கண்ட பிரச்னையில் அவர் தனது தரப்பு நியாங்களை கூற வழியே இல்லை.
ஒரு குடும்பத்து பிரச்னை
அதேபோல், குசேலன் விற்பனை மற்றும் அதன் நஷ்டம் குறித்து வெளிப்படையாக தனது கருத்தை அவர் கூறவும் வாய்ப்பேயில்லை. பத்திரிக்கைகள் அவற்றை முதல் பக்க செய்தியாகிவிட்டபோதும், அவர் அதை தனது கலை குடும்பத்து பிரச்சனையாகவே பார்க்கிறார். நடக்கும் சம்பவங்களை கூர்ந்து பார்த்தால் சாய் மீரா கூட இது குறித்து எதுவும் பகிரங்கமாக பேசவில்லை என்பது புலனாகும்.
ஒரு குடும்பத்துள் நடக்கும் இந்த சங்கதிகளை ஒரு சில விஷம சக்திகளின் தூண்டுதலினால் திரையரங்கு உரிமையாளர்கள் பகிரங்கபடுத்திவிட்டனர். சூப்பர் ஸ்டார் யார் என்ன நினைத்தாலும் இது குறித்து பகிரங்கமாக பேசமாட்டார். (பாபா படத்தின்போது கூட நஷ்ட ஈடு வழங்குவதை அவர் வெளிப்படையாக பேசியதில்லை. புள்ளிவிவரங்களை அடுக்கியதில்லை. அது ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் விஷயம் என்று அவர் நினைத்தது தான் காரணம்)
இது போன்ற சூழ்நிலைகளில் அவர் செய்வது என்ன?
இது போன்ற “அவர் கருத்தை” எதிர்பார்க்கும் சூழ்நிலைகளில் அவர் பெரும்பாலும் ஏதாவது நிகழ்ச்சிகளையோ அல்லது மேடைகளையோ பயன்படுத்திகொள்வார். இல்லையெனில் தனது அடுத்த படத்தில் அதற்கான பதிலை வைப்பார். நீண்ட காலமாக ரஜினியிடம் உள்ள வழக்கம் இதுதான்.
கோவை குண்டுவெடிப்பிற்கு பிறகு நடந்த 1998 பாராளுமன்ற தேர்தலில் அவர் ஆதரவு தெரிவித்த தி.மு.க. - தா.மா.கா. கூட்டணி தோல்வியடைந்தபோது ரசிகர்கள் மத்தியில் இதே போன்று ஒரு இறுக்கமான சூழல் நிலவியது. (முதல் தேர்தல் வாய்ஸ் தோல்வியல்லவா!) ஆனால் பல பத்திரிக்கைகள் பலவாறு எழுதியும், சூப்பர் ஸ்டார், தோல்வி குறித்து வாயே திறக்கவில்லை. அவரது பதிலை தெரிந்து கொள்ள அடுத்த ஆண்டு படையப்பா படம் வரும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
அதே சமயம் தன்னை குறித்த விமர்சனங்களுக்கு பதில் கூற நிகழ்ச்சிகளை பயன்படுத்திகொள்வதாக இருந்திருந்தால் சமீபத்தில் மோகன் பாபு பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியையே பயன்படுத்திகொண்டிருந்திருப்பார். ஆனால் இம்முறை அவரிடம் அப்படி ஒரு எண்ணமேயில்லை.
ரசிகர்கள் தான் அவரை குறித்த விமர்சனகளை கண்டு கவலைப்படுவார்களே தவிர தன்னை பற்றிய விமர்சனங்களை கண்டு கவலைப்படும் போக்கு ரஜினியிடம் என்றுமே இருந்ததில்லை.
(”என்னை பற்றிய விமர்சனங்களுக்கு நான் எந்த காலத்திலும் கவலைப்பட்டதே இல்லை.” - 1996 ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு அறிக்கையில் ரஜினி கூறியது.)
அவர் கவனம் தற்போது?
சீக்கிரம் குசேலன் பிரச்னையை தீர்த்துவிட்டு அடுத்த படமான ரோபோவி்ற்கு போவதில்தான் அவர் முழு கவனமும் உள்ளதாக தெரிகிறது. விமர்சனங்களை அவர் பொருட்படுத்தமாட்டார் என்றே தெரிகிறது.
எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுப்பதாக இருந்தால் கூட அது திரைப்படம் சார்ந்ததாகத்தான் இருக்குமே தவிர அவரிடமிருந்து தனிப்பட்ட முறையில் பேட்டியோ, அறிக்கையோ அல்லது உரையோ கிடைக்காது. மேலும் அவர் அது பேசினாலும் செய்தாலும் முன்னெப்போதையும்விட இப்பொழுது அதிகம் சர்ச்சையாக்கபடுவதால் மேற்கூறிய வழிகளை ரஜினி செலக்ட் செய்வதற்கு வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.
எனவே அடுத்த படம் வெளிவரும் வரை காத்திருப்பதை தவிர வழியேஇல்லை. அதே சமயம் இந்த கணிப்புகளையெல்லாம் மீறி அவர் பேசினால் அது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.
இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள், செய்திகளுக்கு பிறகு அவர் குமுதம் குழுமத்திற்கோ அல்லது விகடன் குழுமத்திற்கோ இடையில் பேட்டி கொடுப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
சரி இதற்க்கு என்ன தான் தீர்வு?
என் அறிவிற்கு எட்டியதை கூறுகிறேன். இந்த கருத்து அனைவரிடமும் பரவினால் நன்று.
அதாவது இதற்குமுன் காவிரி பிரச்சனை எழுந்தபோது, இதே போல் ஒரு சூழ்நிலையை சந்தித்தார் ரஜினி. அப்பொழது உண்ணாவிரதம் இருந்து மக்கள் தன் பக்கம் என்பதை நிரூபித்தார். அதுவரை அவரைப்பற்றி தாறுமாறாக எழுதிவந்த பத்திரிக்கைகள் அதற்குபிறகு “மக்கள் எவ்வழியோ, பத்திரிக்கைகள் அவ்வழி” என்னும் முதுமொழிக்கேற்ப ரஜினியை ஆதரிக்க துவங்கின.
ஒரே வழி: மக்களை சந்திப்பது தான்
சமீபத்தில் நடந்த ஹொகேனக்கல் உண்ணா விரதத்து பேச்சின்போது கூடமக்கள் தன் பக்கம் என்று உணர்த்தினார் ரஜினி. வருத்தம் சர்ச்சை அதை தலைகீழாக்கி விட்ட நிலையில் அவர் மக்களை சந்திப்பது தான் இழந்துவிட்டதாக கூறப்படும் செல்வாக்கை மீட்க ஒரே வழி!
சும்மா தமிழகம் முழுதும் ஒரு சுற்றுபயணம் செய்தால் போதும். சுற்றுபயணம் செய்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள ரசிகர்களை சந்திப்பது, மன்றத்து பிரமுகர்களின் இல்லத்து திருமணங்களில் கலந்துகொள்வது போன்ற நிகழ்ச்சிகளே போதும். சுருங்கக்கூறினால் ரசிகர்களிடமும் மக்களிடமும் அவர் நெருங்கி வரவேண்டும். மைக்கை பிடித்து மக்கள் பிரச்னைகள் சிலவற்றை பட்டியலிட்டு தனது கவலைகளை அவர் பகிர்ந்து கொண்டால் கூடுதல் நலம். அவர் ஒரு அடி மக்களை நோக்கி எடுத்து வைத்தால் மக்கள் அவரை நோக்கி பத்து அடி எடுத்து வைப்பார்கள்.
அவருக்கு திரளும் மக்கள் சக்தி ஒன்றே பத்திரிக்கைகளின் வாயை மூடும் உலை மூடி.
(என்ன, ரஜினிக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது என்று கூறுவார்கள். பரவாயில்லை. எதையெல்லாமோ எழுதி்விட்டார்கள். இதை எழுதுவதால் என்னவாகப்போகிறது?)
இது போன்று ‘இமேஜ் மீட்பு’ நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் அவர் நேரடியாக தனது அடுத்த படத்தை வெளியிடுவது மிக மிக ஆபத்து. இதற்க்கு முன்பு இருந்த சூழல் தற்போது இல்லை.
நண்பர்கள் தயவு செய்து புரிந்துகொள்ளவேண்டும். நான் அவர் அரசியக்கு வரவேண்டும் என்று சொல்லவில்லை. மக்களை சந்திக்கவேண்டும் என்று தான் சொல்கிறேன்.
இதுவரை இந்த முப்பதாண்டுகளில் சென்னையை விட்டு தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு ஒன்றிரண்டு முறைகள் மட்டுமே ரஜினி வந்துள்ளார். அவர் சென்னையை விட்டு நகராமலே இந்தளவு மக்கள் செல்வாக்கை பெற்றிருக்கிறார். அவர் மக்களை சந்திக்க துவங்கினால் எப்படியிருக்கும்? என்னவாகும் தமிழக அரசியல்?
இப்போது புரிகிறதா அரசியல் கட்சிகள்/பத்திரிக்கைகள் ரஜினியை மட்டும் ஏன் இப்படி குறி வைக்கின்றன என்று?
“தனது பலம் தானறியாத ரஜினி இதையெல்லாம் செய்வாரா?”
உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அது தான் எனக்கும் தோன்றுகிறது.
என்ன செய்வது? இறைவனை வேண்டுவதை தவிர வேறு வழி இல்லை!!