போனதே தெரியவில்லை, அதற்குள் அமெரிக்காவிலிருந்து ரிட்டன் ஆகிவிட்டார் ரஜினி. இந்த அவசரத்திற்கு காரணம், குசேலன்! இப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், மறுபடியும் ஒரு பாபாவா? என்று அதிர்ச்சியடைந்ததுடன், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்தார்கள்.
படத்தை மொத்தமாக வாங்கிய நிறுவனமும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தது. இந்த இருவருக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல்களை சரிபடுத்த நினைத்த சூப்பர் ஸ்டார், அடுத்த வினாடியே ஃபிளைட் பிடித்து சென்னையில் லேண்ட் ஆகியிருக்கிறார். வந்த வேகத்திலேயே பேச்சு வார்த்தைகள் ஜரூராக நடந்தேற, ரஜினி தரப்பிலிருந்து சுமார் பத்து கோடி விநியோகஸ்தர்களுக்காக திருப்பி வழங்கப்படுகிறதாம்.
'சந்திரமுகியில் சம்பாதித்தவர்கள்தானே, அப்போது கிடைத்த லாபத்திலிருந்து உங்களுக்கு கொடுத்தார்களா?' என்று ரஜினிக்கு ஓதினாராம் ஒரு முக்கிய பிரமுகர். அதுமட்டுமல்லாமல், 'இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் எம்.ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி அடிப்படையில்தான் வாங்கியிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது எதற்காக பணத்தை திருப்பி தரவேண்டும்?' என்றாராம் அவர். ஆனாலும் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ரஜினி, தனது எண்ணத்திலிருந்து பின்வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இப்படத்திற்காக சுமார் 20 கோடி வரை சம்பளமாக எடுத்துக் கொண்ட ரஜினி, அப்படத்தில் நடித்ததற்கான சரியான சம்பளத்தை எடுத்துக் கொண்டு அதிகப்படியாக வாங்கிய தொகையை திரும்ப ஒப்படைக்கிறார். அவ்வளவுதானே? என்று எதிர்மறை கருத்துகளையும் விதைக்கிறார்கள் இதே கோலிவுட்டில்.
எப்படியோ, பிரச்சனை தீர்ந்தால் சரி
-ஆர்.எஸ்.
No comments:
Post a Comment