ரோபோவுக்கு முன்பு ரஜினி படம்?
திரியை கிள்ளாமலே தீ வைப்பதில் நம்ம ஆட்கள் கில்லாடிகளாச்சே! கோடம்பாக்கத்தை கொஞ்ச நாட்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது இந்த செய்தி. குசேலன் படத்தின் நஷ்டத்தை சமாளிக்க, இலவசமாக ஒரு படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் ரஜினி. இன்னும் இரண்டே மாதங்களில் துவங்கப்பட இருக்கும் இப்படத்தை இயக்கவிருப்பது ஏ.ஆர்.முருகதாஸ். இப்படி கூசாமல் கொளுத்திப் போடும் மேற்படி ஆசாமிகள், அதை உண்மை என்று நம்ப வைக்க 'பெட' கட்டக்கூட தயாராக இருக்கிறார்கள்! இந்த வேடிக்கை விநோத செய்திக்கு பின்னால் இருப்பது உண்மையா? அல்லது கருப்பாக பல்லிளிக்கும் பொய்யா? குசேலன் படத்தில் தனக்கு கெஸ்ட் ரோல்தான் என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார் ரஜினி. அதன்பின்பும் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளே போன ரசிகர்கள், ரஜினியின் ஒன்றிரண்டு டயலாக்குகள் தம்மை புண்படுத்துவதாக நினைத்து பொங்கி எழுந்தார்கள். இந்த நேரத்தில் ரஜினியின் கர்நாடகா மன்னிப்பும் ரசிகர்களை உசுப்பிவிட, வரலாறு காணாத அளவுக்கு அவரது ரசிகர்களே கவலைப்பட்டார்கள். இந்த டயலாக், கர்நாடக பேச்சு இவை இரண்டும் ரஜினியின் தனிப்பட்ட கருத்தாகவே அமைந்ததுதான் சிக்கலுக்கு காரணம். கதையோடு ஒட்டிய வசனங்களும், காட்சிகளும் பிரச்சனை எழுப்பியிருந்தால், இயக்குனரின் பக்கம் கையை காட்டிவிட்டு ஒதுங்கியிருக்க முடியும். ஆனால், தேடிப்போய் வாங்கிய சாபம் ஆகிவிட்டது இந்த விவகாரம்! அதனால்தான் இந்த நஷ்டத்தை சரி கட்டுவதில் ரஜினியின் பங்கு கட்டாயம் ஆகியிருக்கிறது. தங்களுக்காக ஒரு படத்தில் நடித்துத் தரும்படி ரஜினியை விநியோகஸ்தர்கள் வற்புறுத்தி வருவது மட்டும் உண்மை. முருகதாஸ் சமாச்சாரமெல்லாம் உடான்ஸ் என்கிறார்கள். ரஜினி விஷயத்தில் எதுவும் நடக்கலாம். அல்லது நடக்காமலும் போகலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment