ரசிகர்களை ஏன் ரஜினி தடுக்கவில்லை?





சூப்பர் ஸ்டாரை நிர்பந்திக்கும் ரசிகர்கள் குறித்து கருத்து கூறும் நண்பர்கள் (துரிதப்படுத்தும் என்பதே சரி), அத்தகைய ரசிகர்களுக்கு எதிராக எவ்வளவு கருத்துக்கள் கூறினாலும் அது சூப்பர் ஸ்டாருக்கு சாதகமாக, அவரின் நிலைப்பாட்டை மேலும் வலுவாக ஆதரிக்கும் வண்ணம், பெருமை சேர்க்கும் வண்ணம் அமைந்துவிடுகின்றன.

ஆனால், ரசிகர்கள் தரப்பு நியாயத்தை நான் ஒரு அளவுக்கு மேல் எடுத்துக் கூற முற்படும்போது அது நாம் மிகவும் நேசிக்கும் நம் தலைவருக்கு எதிராக போய்விடும் அபாயம் இருக்கிறது. இந்த ஒரே காரணத்தினாலேயே நான் அது பற்றிய கேள்விகளுக்கோ அல்லது கமென்ட்டுகளுக்கோ பதில் கூற விரும்புவதில்லை. (அவை என்னை - என் போன்ற கருத்து உடையவர்களை காயப்படுத்தினாலும்.) நம்மை தவறாக நினைத்தாலும் பரவாயில்லை. தலைவரை யாரும் தவறாக நினைத்துவிடக் கூடாதே என்று நாங்கள் நினைப்பதே காரணம். ஏதோ பெரிய தியாகத்தை நாங்கள் செய்துகொண்டிருப்பதாக நினைத்து நான் இதை கூறவில்லை. எங்கள் நிலையை புரிந்துகொள்ளவேண்டும். எங்கள் நோக்கத்தை களங்கப்படுத்தாதிருக்கவேண்டும். அதற்காகத்தான் இந்த விளக்கம்.
ரஜினியை சரியாக கணித்தவர் யார்?
ரஜினியின் நடவடிக்கைகளை அவரது அசைவுகளை எந்த ஒரு பத்திரிக்கையோ ஊடகமோ இது வரை 100% சரியாக கூறியதாக சரித்திரமில்லை. நூற்றுக்கணக்கில் வேலையாட்களும், டஜனுக்கு மேற்ப்பட்ட நிருபர்களும், செய்தியாளர்களும் பணிபுரியும் பத்திரிக்கைகளுக்கே இது சவாலாக இருக்கும் பட்சத்தில் எனது பணிகளுக்கிடையே ஒய்வு நேரத்தில் எந்த வித உதவிகளும், உதவியாளர்களும், இன்றி தலைவர் மேல் ஈடுபாடு உள்ள ஒரே காரணத்தால் செய்து வருகிறேன். (சிலர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால் இதை கூறுகிறேன்.)
நம் நோக்கம், திரித்து கூறப்படாத சரியான தகவல்களை ரசிகர்களுக்கு உரிய நேரத்தில் அளிக்க வேண்டும் என்பதே.
அவர் அரசியல்லுக்கு வரமாட்டேன் என்று கூறினால் என்ன செய்வீர்கள் ? என்று சிலர் கேட்கிறார்கள்.
நாமும் நம் மக்களும் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று நினைத்துக் கொள்வோம் . எங்களுடைய நிர்ப்பந்தம் அன்றுடன் முற்று பெற்று விடும். அதற்க்கு பிறகு இருக்கவே இருக்கு அவருடைய திரையுலக சாதனைகள் மற்றும் அவர் நடிக்கும் படங்கள் பற்றிய செய்திகள். (பொது வாழ்க்கைக்கு வருகிறாரோ இல்லையோ அவர் என்று சந்தோஷமாக புகழுடன் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம் என்று நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். என் இறுதி கருத்தும் அதுதான்.
ஏமாறப்போவது யார்?
அவருடைய அரசியல் பிரவேசத்தின் மூலம் பல்வேறு வகையில் லாபம் பெறத் துடிக்கும் நபர்களோ அல்லது ரசிகர்கள் போர்வையில் உள்ள சுயநலப் பேர்வழிகளோ ஏமாற்றமடையலாம். ஆனால் அவரை அவரது பல்வேறு நற்பன்புகளுக்காக உண்மையாக நேசிப்பவர்களை அது பாதிக்காது.
ரசிகர்களின் போஸ்டர்கள்
ரசிகர்களின் போஸ்டர்கள் குறித்து பதிவுகள் வரும்போது, அவ்வாறு செய்ய வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட ரசிகர்களிடம் கூறும்படியும் அவர்களை அந்த பணத்தை கொண்டு வேறு எதற்க்க்காகவாவது செலவு செய்யுமாறு வலியுறுத்தும்படியும் எனக்கு பின்னூட்டங்கள் வருகிறது.

நடைமுறையில் இது என்னால் மட்டும் சாத்தியமில்லை. எனக்கு தெரிந்த ஒன்றிரண்டு பேர்கள் இவ்வாறு போஸ்டர்கள் அடிக்க எத்தனித்தபோது அதை தடுத்து வேறு வழிகளில் திருப்பியிருக்கிறேன். ஆனால் அனைவரிடமும் இதை என்னால் கூறமுடியாது.
நாம் தற்போது ரசிகர் மன்றம் என்ற அளவில் இருப்பதால் பொதுமக்கள் நாம் எழுப்பும் போஸ்டர்கள் குறித்து தவறாக எடுத்துகொள்வது கிடையாது. (ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்கும், அனுபவித்த கட்சி என்றால் தான் அது தவறாக கொள்ளப்படுகிறது இங்கு). மேலும் போஸ்டர் கலாச்சாரம் தமிழக அரசியல் மற்றும் சினிமாவோடு ஊறிய ஒன்று. போஸ்டர்கள் இல்லையெனில் இவை இரண்டுமே இல்லையெனலாம்.

(திருச்சியில் நம் படம் ரிலீஸ் சமயத்தில் ஒட்டப்படும் பல்வேறு போஸ்டர்களை நீங்கள் பார்க்கவேண்டுமே…கண் கொள்ளா காட்சி அது. அதை பார்த்தால் இவ்வாறு கூறமாட்டீர்கள்.)
சிவாஜி நூறாவது நாள் கொண்டட்டாடத்திலும் பல்வேறு சமயங்களிலும் ரசிகர்கள் எழுப்பும் பேனர் மற்றும் போஸ்டர்களை ஆங்காங்கே இந்த பதிவில் தெளித்திருக்கிறேன். மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்…இப்ப்படி ஒரு போஸ்டரோ அல்லது பேனரோ இல்லாமல் ரஜினி படத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?
ரசிகர்கள் ஏன் போஸ்டர் எழுப்புகின்றனர்?
தலைவரிடம் பேச வாய்ப்பு கிடைக்காத நம் ரசிகர்கள், இப்படி போஸ்டர்கள் மூலம் அவரிடம் பேசுகின்றனர். அதை போய் நாம் தடுத்தால் அவர்கள் என்ன செய்வார்கள்? எனவே, தலைவரை அடிக்கடி சந்தித்து தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பை அவர்கள் பெறும்போது இந்த போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் தானாக குறைந்துவிடும்.
ரசிகர்களை ஏன் ரஜினி தடுக்கவில்லை?
ரசிகர்களின் இந்த போஸ்டர் மற்றும் பேனர்கள் குறித்து ஏன் இதுவரை சூப்பர் ஸ்டார் எந்த வித மறுப்பும் கூறவில்லை? தடையும் போடவில்லை? அவர் நினைத்தால் சீரியஸாக எச்சரித்து ஒரு அறிக்கை வெளியிடலாமே? ஏன் அப்படி செய்யவில்லை? இவற்றையெல்லாம் அவர் விரும்புகிறாரா? நிச்சயமாக இருக்கமுடியாது. பின்னர் ஏன் அவர் தடுக்க முயலவில்லை?
அது அவர்கள் உரிமை மற்றும் மகிழ்ச்சி சம்பந்தப்பட்ட விஷயம் என்று அவர் நினைப்பதால்!! அவரே அப்படி நினைக்கும்போது நான் எப்படி அவற்றை தடுப்பது?
அப்போது எப்பவும் இப்படியே ரசிகர்கள் போஸ்டர் மற்றும் பேனரே வைத்துகொண்டிருக்க வேண்டும் என்று ரஜினி விரும்புகிறாரா? இல்லை. ரசிகர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து தாங்களாக மாறவேண்டும் என்று அவர் நினைக்கிறார். அது தான் உண்மை. அந்த மாற்றமும் தானாகவே நன்கு நடைபெற்று வருகிறது. இது ஒரு ஆரோகியமான முன்னேற்றம். இதை தான் சூப்பர் ஸ்டார் விரும்புகிறார்.
ரசிகர்களை தடுக்க முடியாது
இறுதியாக தங்கள் மகிழ்ச்சிக்காக ரசிகர்கள் செய்யும் இத்தகு செயல்களை தடுக்க முடியாது. காலப்போக்கில் அவர்கள் மாறிவிடுவார்கள். அதுதான் மற்றவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். ஏனெனில் ரசிகர் மன்ற நற்பணிகளுக்கு ரஜினி ரசிகர் மன்றங்கள் தானே முன்னோடி? (இது குறித்த முந்தைய பதிவு ஒன்றில் நான் விரிவாக விளக்கியிருக்கிறேன்.)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...