பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்துவிட்டார்கள் ரஜினி ரசிகர்கள். இடம்- கோபாலபுரம்! கோஷம்- 'தலைவா... அரசியலுக்கு வா!!'
கோபாலபுரத்தில் அமைந்திருக்கும் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சத்யநாராயணாவின் வீட்டிற்கு முன்பாக குவிந்த ரஜினி ரசிகர்கள் 'தலைவா, அரசியலுக்கு வா' என்று கோஷம் எழுப்ப, அதிர்ந்து போன சத்யநாராயணா வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தார். அங்கே திரளான ரஜினி ரசிகர்கள். 'தலைவர் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? நாங்க நேரடியாகவே கேட்டு விடுகிறோம். அவரை நாங்க சந்திக்க ஒரு வழி ஏற்படுத்திக் கொடுங்க...' இதுதான் அங்கே திரண்டிருந்த ரசிகர்களின் ஒரே கோரிக்கை. அவர்களை சமாதானப்படுத்திய சத்யநாராயணா, அக்டோபர் முதல் வாரத்தில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டாராம்.
இந்த முறை ஏதாவது உறுதியான பதிலை சொல்லாமல் நகர முடியாது என்ற நிலை ரஜினிக்கு. என்ன செய்யப் போகிறார் சூப்பர் ஸ்டார்? தமிழகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இன்னொரு செய்தியும் காற்று வாக்கில் வந்து கவனத்தை கலைத்துவிட்டு போகிறது. அது..? ரிஷிகேஷ் பகுதியில் பெரிய இடம் வாங்கிப் போட்டிருக்கிறாராம் ரஜினி. அங்கு பெரிய ஆசிரமம் கட்டுவது அவரது எதிர்கால திட்டம் என்கிறார்கள்.
இந்த நேரத்தில் ஒரு சின்ன பிளாஷ்பேக் நினைவுக்கு வருகிறது. 80 களில் நடந்த சம்பவம் இது. சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள ஒரு ஆன்மீக இயக்கத்தின் மீது அளவு கடந்த பற்று ஏற்பட்டுவிட்டது ரஜினிக்கு. நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அந்த இயக்கத்திலேயே சேர்ந்துவிட முடிவு செய்துவிட்டார். என்ன நடந்தது தெரியுமா? ஏராளமான ரசிகர்கள் திரண்டு போய் அந்த ஆன்மீக இயக்கம் இயங்கி வரும் இடத்தில் கற்களை வீசினார்கள். சிதறி ஓடியது சாமியார் கும்பல்! மறுநாள் ஆசிரமத்திற்கு வந்த ரஜினியை கையெடுத்து கும்பிட்டு சினிமாவுக்கே அனுப்பி வைத்தது அந்த ஆன்மீக அமைப்பு.
அந்தளவுக்கு வெறி கொண்ட ரசிகர்கள் இப்போது இல்லை. இருந்தாலும், ரிஷிகேஷ் வரைக்கும் போவார்களா என்பதுதான் பெரும் கேள்வி.
No comments:
Post a Comment