அரசியல் பிரவேசம் குறித்து இப்போது பேசும் சூழ்நிலை இல்லை-ரஜினிகாந்த்

திருமலை: அரசியல் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அதுகுறித்துப் பேசும் சூழ்நிலை இப்போது இல்லை என நடிகர் [^] ரஜினிகாந்த் [^] தெரிவித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதா மற்றும் மகள் சௌந்தர்யா, மருமகன் அஸ்வின் ஆகியோருடன் கார் மூலம் நேற்று இரவு திருப்பதிக்கு வந்தார்.

திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி, சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் ஏழுமலையான் கோவிலுக்குள் சென்ற அவரை, கோவில் நிர்வாகம் சார்பில் அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் ஆகியோர் வரவேற்றனர்.

வரவேற்பு முடிந்ததும், வி.ஐ.பி. தரிசனம் வழியாக சென்று இரவு சுமார் 9 மணியளவில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருடன் மனைவி, மகள், மருமகன் ஆகியோரும் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

கோவில் வளாகத்தில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் ரஜினிகாந்த்துக்கு லட்டு மற்றும் தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது.

தரிசனம் முடிந்து வெளியில் வந்த ரஜினியை சூழ்ந்து கொண்ட நிருபர்கள், வரவிருக்கும் எந்திரன், அரசியல் பிரவேசம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அவர்களிடம் ரஜினி கூறியதாவது:

எனது மகளின் திருமணம் [^] மிகச் சிறப்பாக நடந்தது. அதற்காக ஏழுமலையானுக்கு நன்றி செலுத்த குடும்பத்துடன் வந்தேன்.

இம்மாதம் வெளிவர உள்ள 'எந்திரன்' படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இத் திரைப்படம் குழந்தைகள் முதல் இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் அமைந்துள்ளது.

'எந்திரன்' மிகப் பெரிய வெற்றியை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. 'எந்திரன்' படம் மாபெரும் வெற்றி பெறவும் ஏழுமலையானை நான் வேண்டிக்கொண்டேன்.

அரசியல் பற்றியெல்லாம் இப்போது எதுவும் பேசும் சூழ்நிலை இல்லை. இப்போதைக்கு அரசியல் மற்றும் எனது அடுத்த படம் பற்றிச் சொல்ல எதுவுமில்லை.

நண்பர் சிரஞ்சீவி மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு வெற்றி மேல் வெற்றி கிட்ட வாழ்த்துக்கள்," என்றார் ரஜினி.

ரஜினியைக் கண்டதும், 'சூப்பர் ஸ்டார் வாழ்க', 'ரோபோ, ரோபோ', 'இனிய எந்திரா' என ரசிகர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர். அவரை சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் வாங்க முயன்றனர். அவரும் முடிந்தவரை சிலருக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். கூட்டம் அலைமோதியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு காரில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...