தனது  ஒவ்வொரு படமும் துவங்கும்போதும் முடியும்போதும் சூப்பர் ஸ்டார் ஏழுமலையானை  தரிசனம் செய்து ஆசி பெற்று திரும்புவது வழக்கம்.
  இம்முறை தனது மகளின் திருமணம் மற்றும் எந்திரன் இரண்டு இனிதே நிறைவடைந்ததையொட்டி நேற்றிரவு தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
 சென்னையில்  இருந்து நேற்று மாலை திருமலைக்கு காரில் நடிகர் ரஜினிகாந்த்  தனது  குடும்பத்தினருடன் வந்தார். பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சிறிது  நேரம்  தங்கினார். பின்னர் மனைவி லதா, மகள் சவுந்தர்யா, மருமகன் அஸ்வின்   ராம்குமார் ஆகியோருடன் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
   பின்னர் அங்கிருந்த நிருபர்களிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  கூறியதாவது:
  “எனது மகளின் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தது. அதற்காக  ஏழுமலையானுக்கு நன்றி செலுத்த குடும்பத்துடன் வந்தேன்.
 இம்மாதம்  வெளிவர உள்ள ‘எந்திரன்‘ படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது.  மிகப் பெரிய  பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் குழந்தைகள் முதல்  இளைஞர்கள்,  பெண்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும்  விதத்தில்  அமைந்துள்ளது. ‘எந்திரன்’ மிகப் பெரிய வெற்றியை பெறும் என்பதில்  சந்தேகம்  இல்லை. ‘எந்திரன்’ படம் மாபெரும் வெற்றி பெறவும் ஏழுமலையானை  நான்  வேண்டிக்கொண்டேன்.” இவ்வாறு ரஜினி கூறினார்.
  ரஜினிகாந்தை கண்டதும், ‘சூப்பர் ஸ்டார் வாழ்க’, ‘ரோபோ, ரோபோ’ என ரசிகர்கள்  உற்சாக கோஷம் எழுப்பினர்.
 அவரை சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் வாங்க முயன்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், ரஜினிகாந்த் காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
(Photos courtesy: Dinakaran)
[END]
No comments:
Post a Comment