கோடம்பாக்கம் டூ ராமேஸ்வரம்

ராமேஸ்வரத்தில் நின்று கொண்டு குரல் கொடுத்தால் பக்கத்திலிருக்கிற இலங்கைக்கு கேட்கும். தனி மனிதன் குரல் கொடுத்தால் இது சாத்தியமில்லை. ஆனால், ஒட்டு மொத்த திரையுலகமே திரண்டு நின்று குரல் கொடுத்தால்?
இலங்கையில் நடைபெற்று வரும் இனப் படுகொலைக்கு பலமுறை கண்டனம் தெரிவித்திருக்கிறது தமிழ் திரையுலகம். கருப்பு பேட்ஜ் அணிந்து கண்ணீர் வடித்திருக்கிறது. காது மடல்களே கிழிந்து போகிற அளவுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறது. எதற்கும் அசைந்து கொடுக்காத இலங்கை அரசின் மீது, தனது கோபத்தை காட்ட, இதோ... ராமேஸ்வரத்திற்கே செல்ல தீர்மானித்திருக்கிறது திரையுலகம்.
ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு கொடுத்து வரும் ராணுவ உதவிகளை மத்திய அரசு நிறுத்த வேண்டும். உணவு, உடை மற்றும் மருத்துவ உதவிகளை பாதிகப்பட்ட ஈழ தமிழர்களுக்கு மத்திய அரசு நேரடியாக வழங்கி உதவ வேண்டும். முதல் கட்டமாக தமிழர் பகுதியில் குண்டு வீசுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இப்படி பல்வேறு முக்கிய கோரிக்கைகளோடு ராமேஸ்வரம் செல்லவிருக்கும் நமது திரையுலகத்தினர், தனது உரத்த குரலை டெல்லிக்கும் கேட்க செய்வார்கள்.
இனிமேலும் தாக்குதல்கள் தொடர்ந்தால் “ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு எத்தனை கிலோ மீட்டர்?” என்று கேட்கவும் தயங்க மாட்டார்கள் இவர்கள். ஏனென்றால் இந்த வீரம் ‘ஸ்டார்ட், கேமிரா, ஆக்ஷன்’ சொல்லி வந்ததில்லை!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...