ஜப்பான் ரசிகர்களுக்கு டீ! உள்ளுர் ரஜினி ரசிகர்கள் எரிச்சல்

ரஜினி தும்மனாலே அதை ஸ்கேன் செய்து பார்க்கும் வழக்கம் உள்ள ரசிகர்கள், பட்டவர்த்தனமாக ஒரு கருத்தை சொன்னால் சும்மாவா விடுவார்கள்? குசேலன் படத்தில் ஆர்.சுந்தர்ராஜனுடைய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் ரஜினி, தான் சினிமாவில் பேசிய அரசியல் வசனங்கள் தனது கருத்தல்ல என்றும் டயலாக் ரைட்டர் எழுதிக் கொடுத்ததைதான் பேசினேன் என்றும் கூறுவார். இதுதான் ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, நான் அரசியலுக்கு வந்தா என்ன? வராட்டி உங்களுக்கு என்ன? உங்க வேலையை பாருங்க என்பார் கோபத்தோடு. இத்தனை காலம் ரஜினியின் பெருமுச்சை கூட இசையாக நினைத்து வந்த ரசிகர்கள், இந்த பதிலை கேட்டு வேதனைப்பட்டார்கள்.
மேற்படி வசனத்தை படத்திலிருந்து நீக்கும்படி ரஜினிக்கு தந்திகள் அனுப்பியும், கடிதங்கள் எழுதியும் தங்களது எதிர்ப்பை காட்ட, அதிர்ச்சியுற்ற ரஜினி, அந்த வசனங்களை நீக்கும்படி பி.வாசுவுக்கு உத்தரவிட்டிருக்கிறார். உடனடியாக வசனங்களும் நீக்கப்பட்டுவிட்டது.
இதே போல இன்னொரு விஷயமும் ரசிகர்களை காயப்படுத்தியிருக்கிறதாம். படத்தில் ரசிகர்கள் வெயிலில் நின்று ரஜினியை பார்க்க தவம் கிடக்கும்போது, அவர்களுக்கு தூரத்தில் இருந்தே கையை காட்டும் ரஜினி, ஜப்பான் ரசிகர்களை மட்டும் உள்ளே அழைத்து அவர்களுக்கு ஜப்பான் டீ கொடுத்து உபசரிக்கிற காட்சியும் அவர்களை வேதனைக்குள்ளாக்கி இருக்கிறதாம். கொடி, பேனர், கட்-அவுட்களை ஜப்பான் ரசிகர்களா வைக்கிறார்கள்? நாங்கள்தானே வைக்கிறோம். அவர்களுக்கு டீ, எங்களுக்கு போலீஸ் லட்'டீ'யா? என்கிறார்களாம் வேதனையோடு.
இந்த காட்சியையும் கட் பண்ணலாமா என்று யோசித்து வருகிறாராம் ரஜினி. இப்படியே போனால் டைட்டில்தான் மிஞ்சும் போலிருக்கிறது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...