'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்துக்கு இன்று 61வயது பிறக்கிறது. இதையொட்டி உலகெங்கும் உள்ள ரஜினி ரசிகர்கள் அவரது பிறந்த நாளை தடபுடலாக கொண்டாடினர்.
சூப்பர் ஸ்டார், ஸ்டைல் மன்னன் உள்ளிட்ட பல்வேறு அன்புப் பெயர்களைச் சூட்டி ரசிகர்களால் மதிக்கப்படும், பாசம் காட்டப்படும் இந்தியத் திரையுலகின் முன்னணி ஸ்டார்களில் ஒருவரான நடிகர் ரஜினிகாந்த்துக்கு இன்று 61வது பிறந்த நாளாகும்.
இதையொட்டி சில நாட்களுக்கு முன்பு அவருக்கு அவரது பிள்ளைகள், குடும்பத்தினர் சேர்ந்து மணிவிழாவை கோலாகலமாக நடத்தி அழகு பார்த்தனர்.
இந்த நிலையில் இன்று ரஜினியின் பிறந்த நாளை உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.
இந்த ஆண்டு தனது ரசிகர்களுக்குப் பிறந்த நாள் பரிசாக மிகப் பெரிய கிப்ட்டாக எந்திரன் படத்தைக் கொடுத்து குஷிப்படுத்தி விட்டார் ரஜினி. இதனால் இந்த ஆண்டு பிறந்த நாள் வழக்கத்தை விட அதிக குஷியாகியிருக்கிறது ரஜினி ரசிகர்களுக்கு.
ரத்ததானம், அன்னதானம், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தங்களது தலைவரின் பிறந்த நாளை ரஜினி ரசிகர்கள் பிரமாண்டமாக கொண்டாடினர்.
பிறந்த நாள் காணும் ரஜினிகாந்த்துக்கு அரசியல் தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள், திரையுலகினர் உள்பட பல்வேறு தரப்பினரும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
கருணாநிதி வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த்துக்கு முதல்வர் கருணாநிதி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மணிவிழா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் கருணாநிதி, ரஜினிகாந்த்தை இன்று (12.12.2010) தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருக்குத் தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார் என்று கூறப்பட்டிருந்தது.
61 கோவில்களில் சிறப்புப் பூஜை
ரஜினி பிறந்த நாளையொட்டி 61 கோவில்களில் அவரது ரசிகர்கள் வழிபாடுகளை நடத்தினர்.
சைதாப்பேட்டை இறங்காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் இ.ராம்தாஸ், ஆர்.சூர்யா கே.ரவி ஆகியோர் இதில் பங்கேற்று 61 ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கினர். 1000 பேருக்கு உணவும் வழங்கப்பட்டது. பழக்கடை பி.பன்னீர் செல்வம், பி.செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.
தாம்பரத்தில் தாம்பரம் ரஜினி கேசவன் தலைமையில் 12 கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அன்னதானமும் வழங்கப்பட்டது.
சூளைமேடு பஜனை கோவிலில் அண்ணாநகர் பகுதி சார்பில் ரவிச்சந்திரன், வீரா சம்பத், மோகன், வீரச்சுடர் ரவி ஆகியோர் சிறப்பு பூஜை நடத்தி சர்க்கரை பொங்கல் வழங்கினர்.
தியாகராயநகர் ராகவேந்திரா கோவிலில் தி.நகர் எஸ். பழனி தலைமையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இ.ராம்தாஸ், சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் கோட்டூர் என்.மாரி தலைமையில் இலவச உணவும், டி.பி.சத்திரம் காலனியில் அண்ணா நகர் எம்.செல்வமணி தலைமையில் அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரும்பாக்கம் எம்.வி.பூமிநாதன், ஆர். ரஜினி ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்ணாநகரில் ரஜினி டில்லி தலைமையில் உணவு வழங்கப்பட்டது. மகாகவி பாரதிநகரில் சந்தானம் தலைமையில் உணவு வழங்கப்பட்டது.
English summary
Super Star Rajinikanth turns 61 today. Rajini"s fans celebrate thier star"s birthday all over the world in a grand manner. Various actitivies including prayers in temples, welfare assistances to poor and need are planned by fans. Political leaders, film fraternity and personalities from all walks of life wished the Super Star.
No comments:
Post a Comment