4 மணி நேரத்தில் ரூ 50 லட்சம்-டிக்கெட் விற்பனையில் எந்திரன் சாதனை!


திரையுலகம் இதுவரை காணாத பெரும் வசூல் சாதனையைச் செய்து வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம். இந்த சாதனைகளை முறியடிக்க இனியொரு படத்தை ரஜினியைத் தவிர வேறு யாராலும் தரமுடியுமா என்ற கேள்விதான் இன்று கோடம்பாக்கத்தில் பிரதானமாக எழுந்து நிற்கிறது. டிக்கெட் விற்பனையில்தான் இந்தப் புதிய சாதனை.

சென்னை அபிராமி மெகா மாலில் 20 நிமிடங்களில் 8 நாட்களுக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. நான்கு மணி நேரத்தில் ரூ 50 லட்சத்தை எந்திரன் வசூல் செய்திருப்பதாகவும், இது இந்தியத் திரையுலகில் முன்னெப்போதும் நிகழாத பெரும் சாதனை என்றும் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மற்ற திரையரங்குகளில் முன்பதிவு துவங்கிய ஒரு மணிநேரத்தில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கியது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவிலிருந்தே ரசிகர்கள் [^] திரண்டு வந்து இரவு முழுக்க விழித்திருந்து காலை ஒன்பது மணிக்கு முன்பதிவு தொடங்கியதும் டிக்கெட் வாங்கிச் சென்ற காட்சியை பல தியேட்டர்களில் காண முடிந்தது.

"நிறைய தியேட்டர்களில் திரையிடுவதால் ரசிகர்கள் நெருக்கடி இருக்காது என்று நினைத்தோம். மாறாக அதிகாலையிலேயே கூட்டம் திரண்டுவிட்டது. கேட்டுக்கு வெளியில் ஏராளமான ரசிகர்கள் நிற்பதால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுவதாக போலீசார் கூறியதும், கதவை திறந்து வளாகத்தின் உள்ளே அனுமதித்தோம். கவுன்டர்கள் திறக்கும்வரை ரசிகர்கள் அமைதியாக காத்திருந்ததை பாராட்டாமல் இருக்க முடியாது" என ஒரு தியேட்டர் காம்ப்ளக்ஸ் நிர்வாகி குறிப்பிட்டார்.

சத்யம் காம்ப்ளக்சில் மாணவ மாணவிகள், ஐ.டி துறை இளைஞர்கள் அதிகமாகக் காணப்பட்டனர். அருகில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள எஸ்கேப் சினிமாவின் அனைத்து கவுண்டர்களிலும் எந்திரன் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதால் வெறும் 10 நிமிடத்தில் ஒரு வாரத்துக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்றுவிட்டன. இதனால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

உதயம், காசி தியேட்டரில் இளம் ரசிகர்கள் கும்பல் கும்பலாக நின்று கோஷமிட்டபடி காத்திருந்தனர். இங்கு அதிகாலை 3 மணியிலிருந்தே கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் வரத் துவங்கியது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பலர் ரசிகர் மன்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.

40 வருடங்களில் காணாத சாதனை!

கமலா தியேட்டர் அதிபர் சிதம்பரத்தின் மகன் கணேஷ் கூறுகையில், 'முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இரண்டு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன. ஆன்லைனில் அதிக ரசிகர்கள் வந்ததால், சர்வர் ஹேங்காகி விட்டது. 40 வருடத்தில் இப்படியொரு வரவேற்பை எந்த படத்துக்கும் பார்த்ததில்லை' என்றார்.

கமலா மட்டுமல்ல, அபிராமி உள்ளிட்ட பல திரையரங்குகளின் இணையதளங்கள் நேற்று முழுக்க முடங்கிப்போயின.

சத்யம் தியேட்டர் காம்ப்ளக்ஸ் துணை தலைவர் முனி கண்ணையா, 'சென்னை மற்றும் புறநகர்களில் 70க்கு மேற்பட்ட தியேட்டர்களில் 'எந்திரன்' திரையிடப்படும் நிலையில் இவ்வளவு பெரிய கூட்டத்தை முன்பதிவில் எதிர்பார்க்கவில்லை. ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது,' என்றார்.

கோவை கங்கா, யமுனா தியேட்டர்களில் காலை 6.30க்கு ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். தொடர்ந்து கூட்டம் அதிகரித்ததால், 8 மணிக்கே வினியோகம் துவங்கியது. ஒரு மணி நேரத்தில் 1 வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுவிட்டன.

மதுரை, திருச்சி [^], திருநெல்வேலி [^], சேலம் உட்பட முக்கிய நகரங்கள் அனைத்திலும் இதே போன்ற உற்சாகத்துடன் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்தனர்.

வேலூர், திருப்பத்தூரில் புதிய சாதனை:

வேலூர் மற்றும் திருப்பத்தூர் நகரங்களில் பொதுவாக எந்தப் படத்துக்கும் முன்பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் படத்துக்கான டிக்கெட்டுகள் அடுத்த 8 நாட்களுக்கு ரிசர்வ் செய்தயப்பட்டுள்ளது புதிய வரலாறு என்கிறார்கள். திருப்பத்தூர் மீனாட்சி திரையரங்கில் ஏராளமான ரசிகர்கள் கூடி, டிக்கெட்டுக்குக் காத்திருந்தனர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...