படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டாருக்கு வைக்கப்பட்ட பட்டப் பெயர்! வெளிவராத தகவல்கள்!!

மது தளத்தின் ‘Photo Buzz’ பகுதியை நாம் அப்டேட் செய்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டபடியால், மீண்டும் ஏதாவது அளிக்க முடிவு செய்து, நம்மிடம் இருந்த Nostalgia புகைப்பட தொகுப்பை அலசினோம். அப்போது ஒரு புகைப்படம் நம்மை வெகுவாக ஈர்த்தது.
புகைப்படத்தை பார்த்தவுடன் அதில் இருப்பவர்கள் யாரென்று சட்டென்று புரிந்துவிட்டது. சூப்பர் ஸ்டார் நடுநாயகமாக அமர்ந்திருக்க சத்யஜோதி டி.ஜி.தியாகராஜன், மனோபாலா ஆகியோர் காணப்பட்டனர்.  ‘ஊர்க்காவலன்’ பட சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது மட்டும் புரிந்தது. (ஊர்க்காவலன் படத்தை இயக்கியது மனோபாலா.  இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு : சந்திரமுகியில் பேய் ஓட்டும் சாமியாராக வந்து ஓட்டமெடுப்பாரே அவர் தான்!).
அப்புகைப்படம் எடுக்கப்பட்ட சூழ்நிலை, அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் சுவாரஸ்யம் ஆகியவற்றை திரு.மனோபாலா அவர்களிடமே பேசி நம் தளத்தில் அளிக்க முடிவு செய்து, மனோபாலா அவர்களை தொடர்பு கொண்டோம். இரண்டு நாட்கள் கழித்து அப்பாயின்ட்மென்ட் கிடைக்கப் பெற்று, அவரது தி.நகர் அலுவலகத்தில் அவரை சந்தித்தோம்.
நம்மை வரவேற்றவர், நாம் காண்பித்த புகைப்படத்தை பார்த்தவுடன் குஷியாகி அதை உடனே, தமது மொபைலில் ஃபோட்டோ எடுத்து தனது ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்துவிட்டார்.
புகைப்படம் எடுக்கப்பட்ட சூழலை பற்றி விவரிக்கையில் : ‘ஊர்க்காவலன்’ பட பூஜையின் போது (1987) எடுத்தது இது. “நீங்க முதன் முதல்ல அபூர்வ ராகங்கள்ள நடிக்கும்போது, என் ரூம்ல இருந்து தான் மேக்கப் போட்டுக்கிட்டு போனீங்க… ஞாபகம் இருக்கான்னு ரஜினி சார் கிட்டே கேட்டேன். அதுக்கு தான் அந்த சிரிப்பு சிரிக்கிறார்.”
“என்னது உங்க ரூம்ல இருந்து போனாரா?” நாம் வியப்புடன் கேட்க, “ஆமாம். அப்போ நான் கே.பி.சாரிடம் இருந்தேன். கே.பி.சார் கிட்டேயிருந்த அனந்து சாரும் நானும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் என்பதால், நானும் அனந்துவும் ஒரே அறையில் தான் தங்கியிருந்தோம். அப்போ ரஜினி, சிரஞ்சீவி இவங்கல்லாம் பிலிம் இன்ச்டிட்ட்யூட்ல படிச்சிக்கிட்டு இருந்தாங்க. அப்போ நான் அவங்களை ஃபோட்டோ எடுத்து பேட்டியெல்லாம் போட்டிருக்கேன். உங்களுக்கு நினைவிருக்கான்னு அவர் கிட்டே கேட்டேன். நினைவுல வெச்சுகிறதுக்குன்னு ஒரு உருவம் இருக்கு. உங்க உருவத்தை எப்படி நினைவுல வெச்சிக்கிறதுன்னு சொல்லி தமாஷ் பண்ணார் ரஜினி. நான் ரொம்ப ஒல்லியா இருப்பேன்.
‘அபூர்வ ராகங்கள்’ படத்துக்கும் ‘ஊர்க்காவலன்’ படத்துக்கும் அனேக ஒற்றுமைகள் இருக்கு. அதை பத்தி எல்லாம் பேசிட்டு இருந்தோம். ‘அபூர்வ ராகங்கள்’ படத்துல
ஒரு சின்ன பொண்ணு வந்து, ரஜினி கொடுக்குற சீட்டை வாங்கிட்டு போய், மேடைல பாடிட்டு இருக்கும் ஸ்ரீவித்யா கிட்டே கொடுக்கும். அந்த பொண்ணு வேற யாருமில்லே…. ‘ஊர்க்காவலன்’ படத்துல வர்ற சித்ரா தான். அதே மாதிரி, ‘அபூர்வ ராகங்கள்’ படத்தோட ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோக்நாத் தான் ‘ஊர்க்காவலன்’ படத்துக்கும் ஒளிப்பதிவு. எனவே, ரஜினி சாருக்கே ஒரு மலரும் நினைவு மாதிரி தான் அந்தப்படம் இருந்தது.
IMG 5664 640x480  Photo Buzz 5: படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டாருக்கு வைக்கப்பட்ட பட்டப் பெயர்! வெளிவராத தகவல்கள்!!
அந்த டயத்துல நான் டைரக்ட் பண்ணி வெளியான ‘சிறைப் பறவை’ சூப்பர் ஹிட் ஆச்சு. குத்தாலத்துலே அடுத்த பட டிஸ்கஷன்லே இருக்கும்போது, சத்யா மூவீஸ் ஆபீஸ்லேயிருந்து ஃபோன் வந்துச்சு. அடுத்த படம் டைரக்ட் பண்ண கூப்பிட்டாங்க. ரஜினி சாரோட படம்னு எனக்கு தெரியாது.
ரொம்ப ஆர்வமா போனேன். அப்புறம் தான் தெரிஞ்சுது ரஜினி சார் படம்னு. அந்த நேரம் பார்த்து பூம்புகார் ப்ரொடக்ஷன்ஸோட ‘பாலைவன ரோஜாக்கள்’ படத்தையும் டைரக்ட் பண்ணும் வாய்ப்பு வந்துச்சு. முரசொலி செல்வம் தான் சொன்னாரு, “பரவாயில்லே… நீங்க சத்யா மூவீசுக்கே படம் பண்ணுங்க. ரஜினி சாரை டைரக்ட் பண்ற சான்ஸ் ரொம்ப அபூர்வம்”ன்னு. அதுக்கப்புறம் ‘பாலைவன ரோஜாக்கள்’ படத்தை மணிவண்ணன் டைரக்ட் பண்ணினார். நான் ‘ஊர்க்காவலன்’ பண்ணினேன்.
என்னை ஆரம்பத்துலே ரொம்ப பயமுறுத்துனாங்க. ரஜினி சார் படம் பண்ணப்போறே நீ. அவரு ரொம்ப ரிசர்வ்டு டைப் அது இதுன்னு. ஏன்னா… நாங்கல்லாம் ரொம்ப ஜாலியா படம் பண்ற ஆளுங்க. கேலியும் கலாட்டாவுமா எங்க யூனிட் இருக்கும். அந்த வொர்க்கையே ஜாலியா பண்ற க்ரூப் நாங்க. அதுனால் நான் கூட கொஞ்சம் பயந்தேன். ரெண்டு நாள் போச்சு. எனக்கு பொறுமை போய்டிச்சு. நான் ராதிகா கிட்டே சொன்னேன். ‘ராதிகா நம்ம பட ஷூட்டிங் மாதிரியே இல்லே. நீ எதாச்சும் பண்ணினா தான் உண்டு’ அப்படின்னேன். அப்புறம் நாங்க எங்க கலாட்டாவை ராதிகாவோட சேர்ந்து ஆரம்பிச்சோம். நாங்கல்லாம் சேர்ந்து அவருக்கு “சி.சி.” ன்னு பேரு வெச்சோம். “சி.சி.” ன்னா ‘சிந்தனை சிற்பின்’னு அர்த்தம். ஏன்னா எப்பவுமே ஏதாவது சிந்தனையில இருப்பாரு அவரு. எதையாவது அவர் மனம் யோசிச்சிக்கிட்டே இருக்கும்.
இதை இப்படி செஞ்சா எப்படி இருக்கும்.. இந்த டயலாக்கை இப்படி சொன்னா எப்படி இருக்கும்… இப்படி அடுத்தவங்க ஒப்பீனியனை கேட்டு தெரிஞ்சிக்குவாறு. அந்த நேசம், மனித நேயம், தொழில்ல இருக்குற ஈடுபாடு இதெல்லாம் சான்சே இல்லே. காலைல 7 மணிக்கு ஷூட்டிங்குக்கு வாங்கன்னா கரெக்டா 6.45 மணிக்கெல்லாம் ரெடியா இருப்பாரு. ஷட்டிங் ஸ்பாட்ல விஷேஷ சௌகரியங்கள் எதையும் எதிர்பார்க்கமாட்டாரு. தூக்கம் வந்தா ஒரு துண்டை விரிச்சிபோட்டு வெறும் தரைல கூட படுத்துக்குவாரு.
நைட் ஷூட்டிங் முடிக்க எவ்வளவு நேரமானாலும் சரி, காலைல ஷாட்டுக்கு கரெக்டா வந்துடுவாரு. இங்க சாரதா ஸ்டூடியோவுல ‘பைக் ஸ்டண்ட்’ எடுத்துகிட்டு இருந்தோம். அதை முடிக்க விடியற்காலை 4.30 மணியாயிடிச்சு. மறுநாள் காலைல 7.30 மணிக்கு மைசூர்ல ஷூட்டிங். சென்னைல இருந்து பிளைட் புடிச்சு பெங்களூர்ல போய் இறங்கினவுடனே, அங்கேயிருந்து மைசூருக்கு கார்ல போகும்போது அந்த இடைவெளில கார்லேயே தூங்குவாரு. அது தான் அவரோட தூக்கம். அங்கே போனா, ‘இன்னைக்கு நல்ல நாள். ஒத்திவைக்காம இன்னைக்கே மைசூர் ஷெட்யூலை ஸ்டார்ட் பண்ணிடலாம்’ அப்படின்னு சொன்னாங்க. அதுனால மைசூர் போய் சேர்ந்தவுடனே ஷூட்டிங் ஆரம்பிச்சிட்டோம்.
Oorkavalan Launch J 640x422  Photo Buzz 5: படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டாருக்கு வைக்கப்பட்ட பட்டப் பெயர்! வெளிவராத தகவல்கள்!!
அதேபோல அந்த படத்தை பொறுத்தவரை முதல்ல எடுத்த சீனே ஸாங் சீக்வென்ஸ் தான். “வந்து வாழ்த்து சொல்லணும் ஊரு சனம்” அப்படின்னு “மாசி மாசம் தான் கெட்டி மேள தாளம்  தான்” ன்ற ஸாங்கை எடுத்தோம். செண்டிமெண்ட்டா முதல் வரியே சூப்பரா அமைஞ்சது ரஜினி சாருக்கு ரொம்ப பிடிச்சி போச்சு.
“மொத்தம் 50 நாள் கால்ஷீட் கொடுத்தார். 4 நாளுக்கு முன்னதாகவே ஷூட்டிங்கை முடிச்சிட்டேன். அதாவது 46 நாள்ல.” என்று மனோபாலா சொன்னபோது பெருமூச்சு விட்டேன்.
(அப்போதெல்லாம் தலைவர் மொத்தம் ரெண்டு மாசம் தான் கால்ஷீட் கொடுப்பாரு. ஒரு படம் நடிச்சி முடிக்கும்போது அதுத்த படம் ரிலீசுக்கு ரெடியாயிருக்கும். ‘ஊர்க்காவலன்’ ரிலீசான பின்னாடியே ஒரே மாசத்துல ‘மனிதன்’ வந்துடிச்சு.)
மாறிய ஹேர் ஸ்டைல்

அப்புறம் ஒரு முக்கியமான விபரம் குறித்து அவரிடம் கேட்டோம். தலைவரின் ஹேர் ஸ்டைல் பற்றி தான் அது. அதுவரை பக்கவாட்டில் ஹேர் ஸ்டைல் வைத்திருந்த சூப்பர் ஸ்டார், ‘ஊர்க்காவலன்’ படத்துக்கு பிறகு தான் நடுவே தூக்கி வார ஆரம்பித்தார். (இதற்க்கு முன்பு வந்த படம் ‘வேலைக்காரன்’) அது பற்றி கேட்டபோது, “அது நானும் ராதிகாவும் கொடுத்த ஐடியா. “சார் கொஞ்சம் டிஃபரன்ட்டா இருக்கும். ட்ரை பண்ணலாமே” ன்னு சொன்னோம். பிற்பாடு அதுவே நல்லா செட்டாயிடிச்சு.”
மத்தபடி எல்லோர் கிட்டேயும் அன்பாயிருப்பாரு. வீட்டை பத்தி விசாரிப்பாரு. நாம வந்தா எழுந்திரிச்சி நின்னு மரியாதை கொடுப்பாரு. இன்றைக்கும் அதே அன்பை என்கிட்டே காட்டுறாரு. எங்கள் ரஜினி என்றுமே எங்கள் ரஜினி தான். (சற்று அழுத்தம் கொடுத்து சொல்கிறார்…) சும்மா கொடுத்திடுவாங்களா மக்கள் ‘சூப்பர் ஸ்டார்’ என்கிற அந்தஸ்தை. அதுவும் தமிழக மக்கள் ரொம்ப விபரமானவங்க.

இப்போ கூட எங்கே பார்த்தாலும் அவரை பற்றி அவர் வொர்க் பண்ற படத்தை பத்தி,  மக்கள் என்ன பேசிக்கிறாங்கன்னு கேட்டு தெரிஞ்சிக்குவார். தன்னை அப்டேட் செய்துகொள்வதில் தயக்கமே காட்டமாட்டார். அவுருடைய வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம்.
தலைவரைப் பற்றிய இது போன்ற செய்திகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் இந்த எளிய முயற்சிக்கு துணை நின்றமைக்கு திரு.மனோபாலாவுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...