எந்திரனில் 'எலெக்ட்ரானிக் கொசு'-ஷங்கர் சொன்ன சுவாரஸ்ய தகவல்
ரஜினியின் எந்திரன் வெளியாகும் இந்த ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு இரட்டை தீபாவளியாக அமையப் போகிறது என்றார் இயக்குநர் ஷங்கர்.
எந்திரன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஷங்கர் பேசியது:
எந்திரன் ட்ரெய்லரில் சில ஹைலைட்டான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதைவிட பல மடங்கு காட்சிகள் படத்தில் இருக்கும். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு சிம்பொனி, எலக்ட்ரானிக்ஸ், இந்தியன் ஸ்டைல் என மூன்று விதமாக இசையமைத்திருக்கிறார்.
ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி, நாவல் எழுதுபவர்கள் காட்சியின் சூழ்நிலையை வார்த்தையில் வர்ணிப்பதைபோல அழகாக இந்த படத்தை தனது சவுண்டால் வர்ணித்துள்ளார். ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ரஜினியை இதுவரை இல்லாத அளவுக்கு அழகாக காட்டியிருக்கிறார்.
ஹாலிவுட்டை மிஞ்சும் வகையில் ஆர்ட் டைரக்டர் சாபுசிரில் இரு ரோபோக்களை உருவாக்கியுள்ளார்.
இந்த படத்தில் ஒரு எலெக்ட்ரானிக் கொசு நடித்திருக்கிறது. அதற்கு எழுத்தாளர் சுஜாதா 'ரங்குஸ்கி' என்று பெயர் வைத்திருக்கிறார். சின்ன வயதில் அவரை அவரது நண்பர்கள் அப்படி அழைப்பார்களாம்.
ஒரு ஸ்கிரிப்ட் எழுதுகிற அளவுக்கு பா.விஜய் பாடலை எழுதிக் கொடுத்தார். அதுதான் 'கிளிமஞ்சாரோ' பாடல். ட்ரெய்லர் உருவாக்க, தனி ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுங்கள் அதை வைத்து நான் உருவாக்குகிறேன் என்று எடிட்டர் ஆண்டனி சொன்னார். அதன்படி பிரமாதமாக உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.
சந்தானமும் கருணாசும் காமெடி செய்திருக்கிறார்கள். கருணாஸ் இயக்குனரின் நடிகர். தனியாக வசனம் பேசாமல் இயக்குனர் சொல்கிற வசனத்தை மட்டும் பேசக் கூடியவர்.
ரஜினி சயின்டிஸ்ட் வேடத்தில் கம்பீரமாக நடித்திருக்கிறார். எந்திர மனிதனாகவும் நடித்திருக்கிறார். மூன்றாவதாக ஒரு சஸ்பென்ஸ் கேரக்டர் இருக்கிறது. கடைசி 45 நிமிடம் கலக்கும்.
இந்த ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு இரண்டு தீபாவளி பண்டிகை. ஒன்று நவம்பரில் வரும் தீபாவளி. மற்றொன்று ரோபோவெளி. 'எந்திரன்' படத்துக்கு பிறகு ரஜினியின் பெயர்கூட எந்திரகாந்த் என்று மாறலாம்.
கலாநிதி மாறன் பெயரில் கலையும் இருக்கிறது நிதியும் இருக்கிறது. கலைக்காக நிதி அளிப்பவர் அவர். மலேசியா விழாவில் ஒளிபரப்பப்பட்ட உரையில் முதல்வர் கலைஞர் என்னை பற்றி சில வரிகள் சொல்லியிருந்தார். அதற்காக இந்த மேடையில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்…," என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment