சென்னையில் தமிழக அரசின் புதிய சட்டப்பேரவை வளாகம் மற்றும் தலைமைச் செயலக கட்டடம் திறப்பு விழா, மிகவும் கோலாகலமாகவும் கண்ணியமான முறையிலும் நடந்தது.தமிழக புதிய சட்டசபை - தலைமை செயலக கட்டிடம், சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது.முதல்வர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில், சட்டமன்றம், தலைமை செயலகம் என இரு பிரிவுகளாக இந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதில், சட்டமன்ற வளாகம் பசுமை கட்டிடமாக அமைக்கப்பட்டு உள்ளது.ரூ.450 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சட்டசபை மற்றும் தலைமை செயலக கட்டிட வளாக திறப்பு விழா, சட்டமன்ற வளாகம் அமைந்துள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.
பிரமாண்ட பந்தல்
திறப்பு விழாவையொட்டி, 8 ஆயிரம் பேர் அமரும் வகையில் பெரிய பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தனி விமானம் மூலம் சென்னை வந்தனர்.
கருணாநிதி நேரில் போய் வரவேற்பு
இந்த விழாவின் ஒவ்வொரு அசைவையும் முதல்வர் கருணாநிதியே தீர்மானித்தார். அதிகாலை 5 மணிக்கே திறப்பு விழா அரங்குக்கு வந்தவர் ஒவ்வொரு விஷயத்தையும் அருகிலிருந்து சொல்லிச் சொல்லி செய்ய வைத்தார்.பிற்பகலில் மன்மோகன் சிங்கும் சோனியாவும் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இறங்கியதும் அவர்களை தானே முன்னின்று வரவேற்றார் முதல்வர். பூங்கொத்து அளித்து சால்வை போர்த்தி மரியாதையும் செய்தார்.
காங்கிரஸ் தலைவரை வரவேற்ற பாஜக முதல்வர்
விமான நிலையத்தில் சோனியா காந்தி வந்ததும் அவரை முதல்வர் கருணாநிதி, ஆந்திர முதல்வர் ரோஸய்யா ஆகியோருடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் வரவேற்றது வித்தியாசமாகவும் அரசியல் பண்புக்கு இலக்கணமாகவும் அமைந்தது.எடியூரப்பா பாஜக ஆளும் மாநில முதல்வர், எதிர்கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும், காங்கிரஸ் தலைவர் சோனியாவை வரவேற்க ஆர்வத்தோடு முன்வந்தார். சோனியாவும் மகிழ்வுடன் அவருக்கு வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்தார்.
தமிழகமும் ஆந்திரமும் இணைந்தே இருந்தன! - ரோஸய்யா
விமான நிலையத்தில் ஆந்திர முதல்வர் ரோஸய்யாவுடன் இந்த விழா குறித்து கேள்வி கேட்டனர் நிருபர்கள். அதற்கு அவர், "நாங்கள் அண்ணன் தம்பிகள். இதற்கு முன் மெட்ராஸ் மாகாணமாக தமிழகமும் ஆந்திரமும் இணைந்தே இருந்தன. இப்போது எல்லைகள் பிரிந்திருந்தாலும் இணக்கமாக இணைந்தே செயல்படுகின்றன. இது தொடரும்" என்றார்
வீல்சேருக்கு விடை கொடுத்தார்
நேற்றைய விழாவில் இன்னொரு சிறப்பு, முதல்வர் வீல்சேர் இல்லாமலே திறப்பு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுதான். மன்மோகன் சிங் ரிப்பன் வெட்டிய போதும் சரி, பின்னர் அவர்களை பேட்டரி காரில் அழைத்துச் சென்ற போதும் சரி, தனது வயது மற்றும் உடல்நிலையை மீறிய உற்சாகத்துடன் அவர் காணப்பட்டார். விழா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் குறித்த அறிவிப்பு ஒலித்த போது, தன்னிச்சையாக அவர் எழுந்து நிற்க முயன்றது, பார்வையாளர்களையும் சோனியாவையும் கண்கலங்க வைப்பதாக இருந்தது. மேடையில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி பொன்னாடை அணிவித்தார். மன்மோகன்சிங், தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து பொன்னாடையை பெற்றுக்கொண்டார். கருணாநிதிக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் பொன்னாடை அணிவித்தார்.
ரஜினி - கமல் ஆப்ஸென்ட்!
இந்த விழாவில் கட்டாயம் எதிர்பார்க்கப்பட்ட கலைத்துறை பிரமுகர்கள் ரஜினி யும் கமலும் கடைசி வரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீப கால விழா சர்ச்சைகள் காரணமாக இருவரும் இந்த விழாவை தவிர்த்திருக்கக் கூடும் என்று கூறப்பட்டது.ஆனால் இளம் நடிகர்களில் அஜீத்தும் விஜய்யும் தவறாமல் ஆஜராகியிருந்தனர். நடிகர்கள் பெரும்பாலும் ஆஜராகிவிட்டிருந்தனர். சினிமாக்காரர்களுக்கென்று தனி பகுதியே ஒதுக்கியிருந்தார் முதல்வர்.
ரூ 24 கோடியில் பெரும் பாதுகாப்பு .. போக்குவரத்து ஸ்தம்பிப்பு
இந்த விழாவுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அண்ணா சாலை முழுக்க 5000 போலீசார் குவிக்கப்பட்டனர். பிரதமர் அண்ணாசாலையில் வரும்போது மாலை 4 மணிக்கு மேல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போலீசார் முன்கூட்டியே போக்குவரத்து நிறுத்தம் பற்றி அறிவிப்பு வெளியிட்டனர்.அண்ணாசாலையே பலத்த பாதுகாப்பு அரணோடு காணப்பட்டது. ஒவ்வொரு சிக்னல் சந்திப்பிலும் 2 உதவி கமிஷனர்கள் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அண்ணாசாலையில் வழிநெடுக உள்ள அனைத்து உயரமான கட்டிடங்களிலும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். நிகழ்ச்சி நடந்த சட்டசபை வளாகத்தை சுற்றிலும் 2,500 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அந்த பகுதியில் உள்ள கடைகளும் பாதுகாப்பு கருதி அடைக்கப்பட்டிருந்தன.புதிய சட்டசபை வளாகத்தின் எதிரில் உள்ள பறக்கும் ரெயில் தண்டவாள பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சி நடக்கும்போது பறக்கும் ரெயிலும் நிறுத்தப்பட்டது. முக்கிய சாலைகளில் இதனால் போக்குவரத்து நெரிசல் மிகக் கடுமையாக இருந்தது. குறிப்பாக நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களில் அண்ணா சாலையின் ஒரு பக்கம் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.
No comments:
Post a Comment