‘மாறுவேடத்தில் நகர்வலம்’ - கதைக் களத்தில் கல்கியும் நிஜ களத்தில் ரஜினியும்!!
சூப்பர் ஸ்டாருக்கு மாறுவேஷத்தில் சுற்றுப் பயணம் செய்வதில் உள்ள ஆர்வம் பற்றி பிரபல இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் சமீபத்தில் விகடனில் கூறியிருந்தார். சும்மா மேம்போக்காக சொல்லாமல் ஆணியடித்தார்போல சில விஷயங்களை அதில் அவர் கூறியிருந்தார். சூப்பர் ஸ்டாரின் மாறுவேட ஆச்சரியங்கள் பற்றி ரசிகர்கள் பேசிக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இந்த பதிவை அளிப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால் இப்போது அதை தருகிறேன்.
தலைவர் பெரும்பாலும் மக்களின் பல்ஸ் தெரிந்துகொள்ளவும், தனது தனிமையை பாதுகாத்துகொள்ளவும், ஒரு பிரச்னையைப் பற்றியோ அல்லது தன்னைப் பற்றியோ பிறரின் உண்மையான அபிப்ராயங்களை தெரிந்துகொள்ளவும் தான் மாறுவேடங்களை விரும்பி அணிகிறார்.
பெங்களூர் சென்றால் பெரும்பாலும் மாறுவேடம் தான். ஏன், மணிவண்ணன் சொன்னது போல சென்னையிலேயே பல இடங்களில் மாறுவேடத்தில் சுற்றியிருக்கிறார்.
பல அரசியல் கூட்டங்களுக்கு மாறுவேடங்களில் சென்றிருக்கிறார் (செய்தி: டாக்டர். காயத்ரி ஸ்ரீகாந்த்)
திருமங்கலம் இடைத் தேர்தலை மாறுவேடத்தில் சென்று கண்காணித்திருக்கிறார். (செய்தி: தினமலர்)
மாறுவேடம் தரிப்பது என்பது நாட்டை ஆளும் மன்னனுக்குரிய முக்கிய குணங்களில் ஒன்று. அதன் மூலம் ஏற்படும் நன்மைகள் ஏராளம். மன்னர்கள் தமது குடிகளின் குறை நிறைகளை தெரிந்துகொள்ள மாறுவேடத்தில் நகர்வலம் வருவது தொன்றுதொட்டு வந்த ஒரு வழக்கம். ராஜ ராஜ சோழன் முதல் அசோக சக்கரவர்த்தி வரை பல மன்னர்கள் மாறுவேடத்தை புனைந்து மக்கள் குறைகளை கேட்டரிந்தவர்களே. அவ்வளவு ஏன்… முகலாய மாமன்னர் அக்பர் மற்றும் கிருஷ்ணா தேவராயர் ஆகியயோர் மாறுவேடங்கள் புனைவதில் கெட்டிக்காரர்கள். சத்ரபதி சிவாஜியின் மாறுவேட திறன் பற்றி நாளெல்லாம் கூறிக்கொண்டே போகலாம்.
அமரர் கல்கி தமது ‘பார்த்திபன் கனவு’ நூலில் நாட்டை ஆளும் மன்னன் மாறுவேடத்தை புனைவதன் அவசியத்தை நரசிம்மவர்ம சக்கரவர்த்தியின் வாயிலாகவே அழகாக விளக்குகிறார். காவியத்தில் இடம்பெறும் முக்கிய பாத்திரமான நரசிம்மவர்ம சக்கரவர்த்தி அடிக்கடி மாறுவேடத்தில் தோன்றுவார். அது குறித்து அவரது மகள் எழுப்பும் கேள்வியும், அதற்க்கு நரசிம்மவர்மன் கூறும் பதிலையும் பாருங்கள்.
மன்னனுக்கு மாறுவேடம் அவசியமா?
//அத்தியாயம் 9 - விபத்தின் காரணம்
சக்கரவர்த்தியைக் குந்தவி வியப்புடன் நோக்கினாள். அவளுடைய மைதீட்டிய பெரிய கண்கள் அதிசயத்தினால் விரிந்து மலர்ந்தன. “இது என்ன அப்பா, இது? கூத்தாடிகள் அல்லவா வேஷம் போட்டுக் கொள்வார்கள்? இராஜாக்களுக்கு எதற்காக வேஷம் போடும் வித்தை தெரிய வேண்டும்” என்று கேட்டாள். “ஒரு தேசத்தைப் பரிபாலிப்பவனுக்குப் பல கலைகளும் தெரிந்திருக்க வேண்டும் குழந்தாய், முக்கியமாக வேஷம் போட்டுக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் பிரஜைகளின் மனோபாவங்களை அவ்வப்போது தெரிந்துகொள்ள முடியும். இன்னும் சத்துருக்களைப் பற்றிய இரகசியங்களையும் தெரிந்து கொள்ளலாம். நாட்டில் குற்றங்கள் நடக்காமல் தடுக்கலாம்….” என்று சக்கரவர்த்தி சொல்லி வருகையில் குந்தவி குறுக்கிட்டாள். “இப்போது எந்தக் குற்றத்தைத் தடுப்பதற்காக இந்த வேஷம் போட்டுக் கொண்டீர்கள்? நான் ஏதாவது குற்றம் செய்யப் போவதாகச் சந்தேகமா?” என்று சொல்லி முல்லை மலர்வதுபோல் பல்வரிசை தெரியும்படி நகைத்தாள்.//
நண்பர்களுடனோ, தனியாகவோ வெளியே செல்லும்பொழுது தனக்கிருக்கும் புகழ் வெளிச்சம் தனது சுதந்திரத்தை எள்ளளவும் பாதித்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் சூப்பர் ஸ்டார் புனைந்த மாறுவேடம் காலப்போக்கில் எப்படி ஒரு நாடாளும் அரசனக்குரிய தகுதிகளுள் ஒன்றாக அமைந்துவிட்டது பார்த்தீர்களா?
[END]
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment