கமல் நிஜ சகலகலாவல்லவன்-ரஜினி


கமல்ஹாசன் ஒரு நிஜமான சகலகலாவல்லவன், சூப்பர் ஸ்டார் என்று பாராட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.நடிப்பில் பொன் விழா கண்டுள்ள கமல்ஹாசனுக்கு விஜய் டிவி பாராட்டு விழா எடுத்தது. சென்னையில் நடந்த இந்த விழாவில் தென்னிந்தியத் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த் , மம்முட்டி, மோகன்லால், வெங்கடேஷ் உள்ளிட்ட திரையுலகமே திரண்டு வந்து பாராட்டியது.விழாவில், ரஜினி காந்த் பேசுகையில், கமலைப் பற்றி பேச வேண்டுமானால் 2 நாள் வேண்டும். 1975களில் அவர் சூப்பர் ஸ்டாராக இருந்த காலங்களில்தான் நான் தமிழ் சினிமாவிற்குள் வந்தேன். நாங்கள் இணைந்தும் படங்களில் நடித்து கொண்டிருந்த காலம் அது.இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் என்னை நடிக்க சிபாரிசு செய்தவரே கமல்தான். அவர் நினைத்திருந்தால் என்னை நடிக்க விடாமல் செய்திருக்க முடியும்.நினைத்தாலே இனிக்கும் படம்தான் நாங்கள் இணைந்து நடித்த கடைசி படம். அப்போது கமல் என்னிடம் சொன்னார். ரஜினி நாம் இனிமேல் இணைந்து நடிக்க வேண்டாம். அப்படி நடித்தால் புகழ் பெயர் வாங்க முடியாது. நீங்கள் உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். தமிழ் சினிமா உலகில் ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறி என்னை உற்சாக மூட்டினார். இது மட்டுமல்ல நாம் பிரிந்தாலும் என் படங்களில் உள்ள கலைஞர்களை நீங்கள் பயன்படுத்துங்கள். உங்கள் படங்களில் உள்ளவர்களை நான் பயன்படுத்துகிறேன் என்று கூறினார். சிரஞ்சீவி, அமிதாப், மம்முட்டி, மோகன்லால் எல்லோரும் நினைக்கலாம் கமல் என்ற சூப்பர் ஸ்டார் இருக்கும்போது ரஜினி எப்படி இவ்வளவு பெரிய ஹீரோவானான். நான் கமல் நடிப்பை பார்த்துதான் இந்த அளவுக்கு முன்னேறி உள்ளேன். குருநாதர் பாலச்சந்தர் எங்கள் 2 பேரையும் வைத்து இயக்கினார். அப்போது சூட்டிங்கில் கமல் நடித்து கொண்டிருப்பார். நான் அவர் நடிப்பை பார்க்காமல் சிகரெட் பிடிக்க வெளியே சென்றுவிடுவேன். குருநாதர் என்னை தேடுவார். நான் வந்தவுடன் எங்கடா போனே தம் அடிக்கவா? ஏன்டா. கமல் நடிப்பை பாருடா நடிப்பை கத்துக்கோடா என்று கூறுவார்.அதன் பிறகு கமல் நடிக்கும்போது அவரது நடிப்பை கவனித்தேன். தம் அடிக்க போகவே மாட்டேன். கமல் பாதை வேற மாதிரி. அதை நான் பின்பற்றாமல் எனக்கு வேற ரூட் ஒன்றை போட்டேன் கொஞ்சம் புத்தியை யூஸ் பண்ணினேன்.நான் நடித்துக் கொண்டிருக்கும் ரோபோ..எந்திரன் படம் கமல் நடிக்க வேண்டிய படம். அவருக்குதான் ஷங்கர் ரெடி பண்ணினார். ஆனால் சில கால தாமதத்தால் இப்போது மாறி போய் உள்ளது. ஷங்கர் ரோபோ பற்றி என்னிடம் கதையை சொல்லும்போது நான் நடிக்கமாட்டேன். இது கமலுக்காக தயார் செய்த கதை. அதில் என்னை கொண்டு வரமுடியாது என்றேன். ஆனால் ஷங்கர் சார் இது உங்களுக்காக வேறு மாதிரி செய்துள்ளேன்.கமல் உண்மையான சகலகலா வல்லவன். கலையரசி தாய், என்னை, மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி , வெங்கடேஷ் ஆகியோரை கைகளால் பிடித்து கொண்டுள்ளார். ஆனால் கமலை மட்டும் மார்போடு அனைத்து பாதுகாத்து உள்ளார். ஏன் இப்படி செய்கிறீர்கள், என்று நாங்களும் நடிகர்கள்தானே என்று கலையரசியிடம் கேட்டேன்.அதற்கு அவர் சொன்னார், நீ சினிமாவிற்கு வரவேண்டும் என்று இந்த ஜென்மத்தில்தான் ஆசைபடுகிறாய். ஆனால் கமல் 10 ஜென்மத்திற்கு முன்பே இருந்து ஆசைப்பட்டு கொண்டிருக்கிறார் என்றார் ரஜினி.


ரஜினி நிஜமாவே சூப்பர் ஸ்டார்...


கமல்ஹாசன் பேசுகையில், நான் இந்த விழா சின்னதாக நடக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இது இவ்வளவு மிகப்பெரிய விழாவாக நடக்கிறது. நான் இந்த அளவுக்கு வந்தேன் என்பதற்கு நீங்கள் என்மீது வைத்துள்ள அன்புதான்.அன்பால்தான் முன்னேறி உள்ளேன். நான் சினிமாவிற்கு வரும்போது நிறைய கனவுகளோடு வந்தேன். ஆனால் அது ஒன்று கூட நிறைவேறவில்லை. என்னால் நிறைவேற்ற முடியவில்லை.50 வருடம் சாதித்துள்ளேன் என்று கூறுகிறீர்கள் அதற்கு அன்புதான் காரணம். ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார். அவர் தன்னை தாழ்த்தி என்னை உயர்த்தியுள்ளார். அவர் உண்மையான சூப்பர் ஸ்டார்தான். எனக்கும் அவருக்கும் இடையே உள்ள நட்பு ஆழமானது. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நட்பு இல்லை, அதையும் தாண்டியது.எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. நாத்திகன் என்று கூறுகிறார்கள். அந்த வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை. பகுத்தறிவாளன் என்று கூற வேண்டும். என் மகள் எனக்காக தினமும் கடவுளிடம் வேண்டுகிறார். ஆனால் அவரின் அன்பை நேசிக்கிறேன் என்றார்.


எனக்கும் போட்டி-மம்முட்டி:


நடிகர் மம்முட்டி பேசுகையில், கமல் மலையாளத்தில்தான் கதாநாயகனாக அறிமுகமானார் என்பதை நினைக்கும்போது எனக்கு பெருமையாக உள்ளது. அவர் 50 வருட கலை சேவகர், அவருக்கும் எனக்கும் இப்போது போட்டி நடந்து கொண்டிருக்கிறது.அவரும் 3 தேசிய விருது வாங்கியுள்ளார். நானும் வாங்கியுள்ளேன். அடுத்த விருது யார் வாங்கப் போகிறார்கள் என எங்களுக்குள் போட்டி என்றார்.நடிகர் மோகன்லால் பேசுகையில், இப்போது உள்ள இளம் நடிகர்கள் கமல் போல் நடித்து பேர் புகழ் பெறலாம். ஆனால் கமலாகவே மாற முடியாது. கமல் என்றைக்கும் கமல்தான் என்றார்.தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் பேசுகையில், நான் சென்னை டான் போஸ்கோ பள்ளியில்தான் படித்தேன். லயோலா கல்லூரியில்தான் படித்தேன். அப்போது கமல் படம் என்றால் தியேட்டரில் விசில் அடித்து ஆடி கொண்டிருப்பேன்.இந்தியன் 10 தடவை, குணா 20 தடவை என அவரின் படங்களை பலமுறை பார்த்துள்ளேன். பார்த்து கொண்டிருக்கிறேன் என்றார்.


கடவுளுக்கு கமல் மீது நம்பிக்கை-இளையராஜா:


இசைஞானி இளையராஜா பேசுகையில், இது குடும்ப விழா. நேற்று சரஸ்வதிக்கு பூஜை இன்று அவரது மகனுக்கு பூஜை. அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் கடவுள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்றார். விழாவில் பிரபு தேவா தனது தந்தை சுந்தரத்துடன் இணைந்து கமல் பட பாடலுக்கு நடனம் ஆடினார். மேலும் நடிகைகள் சானா கான், ருக்மணி, ஷோபனா ஆகியோரும் கமல்ஹாசன் பட பாடல்களுக்கு நடனம் ஆடினர்.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...