ரஜினியின் வாழ்க்கை வரலாறு இப்போது ஆடியோ வடிவில் வெளிவருகிறது. லஹரி நிறுவனம் இந்த ஆடியோவை வெளியிடுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன் 'ரஜனி' (Rajani - Vikshiptha, Vishishta, Vichitra) எனத் தலைப்பில் மகேஷ் தேவஷெட்டி என்ற பத்திரிகையாளர் ஒரு புத்தகம் எழுதினார். கன்னட மொழியில் அமைந்த இந்த புத்தகமே இப்போது ஆடியோவாக வருகிறது. இதுகுறித்து லஹரி நிறுவன நிர்வாகி துளசி ராம் வேலு கூறுகையில், "ரஜினி சார் பற்றி மகேஷ் எழுதிய புத்தகத்தை அப்படியே ஆடியோவாக மாற்றுவது ஒரு சவாலான காரியமாகத்தான் இருந்தது. காரணம் இந்த கான்செப்ட் இதற்கு முன் நாங்கள் செய்திராத புதிய முயற்சி. ஆனால் மிகப் பெரிய திட்டமிடலோடு இந்த ஆடியோ புத்தகப் பணியை முடித்துவிட்டோம். இதுவரை வேறு எந்த ஆடியோ நிறுவனமும் இந்தியாவில் இதைச் செய்ததில்லை. இதற்கு முன், தனக்குப் பிடித்த ஒரு தலைவர் அல்லது நடிகர் குறித்த தமது கருத்துக்களை ஆடியோவில் பதிவு செய்து சிலர் வெளியிட்டுள்ளனர். ஆனால் அதற்கும் இப்போது நாங்கள் செய்துள்ள முயற்சிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. புத்தகத்தின் சுவாரஸ்யம் ஆடியோவில் கேட்கும்போதும் இருக்க வேண்டும். புத்தகத்தின் எந்தப் பகுதியும் விடுபடாத அளவுக்கும் தயாரிக்க வேண்டும். இன்னொன்று ரஜினி என்ற பன்முக மனிதருக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு அனைவருக்கும் தெரியும். சின்ன தவறு நேர்ந்தாலும் அதன் விளைவு எப்படியிருக்கும் எனப் புரிந்து இந்த முயற்சியில் ஈடுபட்டோம். ரஜினி பற்றிய புத்தகத்தைப் படிக்காதவர்களுக்கு இந்த சிடி மற்றும் காஸெட் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். ரஜினி வரலாற்றை ஆடியோ புத்தகமாக வெளியிடுவதில் எங்களுக்குக் கிடைத்த வெற்றி, இதைப் போன்ற மேலும் பல முயற்சிகளில் இறங்கத் தூண்டுதலாக உள்ளது..." என்றார்.
No comments:
Post a Comment