துக்ளக்கின் ‘முதல்வர்’ செண்டிமென்ட்டும், ரஜினியின் கட்டுரையும

நம்மில் பலருக்கு கீழ்கண்ட சந்தேகங்கள் அடிக்கடி தோன்றுவது உண்டு:
விடை சிலருக்கு தெரிந்திருக்கலாம். சிலருக்கு தெரியாம லிருக்கலாம். தெரிந்து கொள்ள இதோ ஒரு வாய்ப்பு.நெருக்கடியான காலகட்டங்களில் சூப்பர் ஸ்டாரின் மனநிலை எப்படியிருக்கும்?தமக்கு ஏற்படும் கடும் சோதனையை பற்றி அவர் என்ன நினைப்பார்?அதே போல மிகப் பெரிய வெற்றிகளை அவர் குவிக்கும்போதும் அவர் மன நிலை எப்படி இருக்கும்?புகழுரைகள கேட்க நேரிடும்போது அதை எப்படி அவர் எடுத்துகொள்கிறார் ?வாழ்க்கையில் நாம் படும் கஷ்டங்களைப் பற்றி அவர் பார்வை என்ன?பணக் கஷ்டத்தை மீறி ஏதாவது கஷ்டம் உண்டா?
இவ்வாறு எனக்குள் அடிக்கடி கேட்டுக்கொள்வதுண்டு. அதற்கான விடையை இதோ சூப்பர் ஸ்டாரே தருகிறார்.
அது மட்டுமா…இறைவனை யாருக்கு பிடிக்காது?சுகமும் துக்கமும் வாழ்க்கையில் மாறி மாறி வருவது ஏன்?“வந்தாரை வாழவைக்கும் தமிழகம்” என்று ஏன் கூறுகிறார்கள்?தமிழர்கள் யாருக்கு தங்கள் இதயத்தில் இடம் கொடுப்பார்கள்?
இது போன்ற கேள்விகளுக்கும் தலைவர் சும்மா ‘நச்’ ‘நச்’ என்று ஒரு கட்டுரையில் பதிலளித்திருக்கிறார்.
எங்கே… எப்படி?
1996 ஆம் ஆண்டு துவக்கத்தில் - துக்ளக் இதழில் - “அந்த ஐந்து விழாக்கள்” என்னும் தலைப்பில் ரஜினி ஒரு தொடர்கட்டுரை எழுதினார்.
சராசரி மனிதனுக்கு ஏற்படும் கஷ்டங்கள் குறித்த அவரது பார்வை மிகவும் அற்புதம். தவிர மனிதனுக்கு பணக் கஷ்டத்தை விட அதிக வேதனை தரக்கூடியது எதுவென்றும் பட்டியலிட்டிருக்கிறார். பிரச்னைகளை பற்றி மட்டும் அலசாமல் அதற்க்கு தீர்வு சொல்லும் பண்பும் ரஜினிக்கு இருக்கிறது என்று நான் முன்பே சுட்டிக் காட்டியிருந்தேன். இதோ இந்த கட்டுரையிலும் நம் பிரச்னைகளை எப்படி நாம் தீர்த்துகொள்வது என்று கூறியிருக்கிறார். அன்றாடம் ஆயிரத்தெட்டு பிரச்னைகளில் சிக்கித்தவிப்பவர்களுக்கு மிக நல்லதொரு வழியை காட்டியிருக்கிறார் என் குரு ரஜினிகாந்த் அவர்கள். (படியுங்கள்… நீங்களும் அவரை இப்போதே குருவாக ஏற்றுகொள்வீர்கள்).
எனக்கிருக்கும் வியப்பெல்லாம் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு இத்தகைய ஒரு முதிர்ச்சி இருந்ததென்றால் இப்போது அவர் எத்துனை பக்குவப்பட்டிருப்பார் என்று எண்ணும்போது உண்மையில் என்னால் வியப்பை அடக்கமுடியவில்லை.
தலைவா, நீ அரியனை ஏற தாமதிக்கும் ஒவ்வொரு கணமும், இந்த நாட்டு மக்களுக்கு பேரிழப்பு….!!
துக்ளக்கும் தமிழக முதல்வர்களும்
சரி, இந்த தொடர் துக்ளக்கில் ஆரம்பித்த வரலாறு உங்களுக்கு தெரியுமா?
துக்ளக்கிற்கு ஒரு சிறப்பு உண்டு. துக்ளக்கில் தொடர் எழுதுபவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுவிடுவார்கள். அப்படி ஒரு ராசி அந்த பத்திரிக்கைக்கு உண்டு.
துக்ளக்கில் தொடர் எழுதி அதற்க்கு பிறகு தமிழக முதல்வரானவர்கள் இருவர்: ஒருவர் எம்.ஜி.ஆர், மற்றொருவர் ஜெயலலிதா. சூப்பர் ஸ்டார் விஷயத்தில் இந்த செண்டிமெண்ட் கொஞ்சம் தாமதமாகிறது என்று நினைக்கிறேன். அவ்வளவுதான்.
இந்த தொடரை சூப்பர் ஸ்டார் தாமாகவே மனமுவந்து எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்க்கு காரணம் முதல்வராகும் ஆசை அல்ல. சோ மீது அவர் கொண்ட பிரியம்.
சோவை நச்சரித்த அவரது ஊழியர்கள்
1995-1996 காலகட்டங்களில் தி.மு.க. - த.மா.கா. கூட்டணியை உருவாக்கி தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களுள் சோவும் ஒருவர். ஏற்கனவே அவர் ரஜினிக்கு நெருங்கிய நண்பர்தான் என்றாலும், அந்த சூழ்நிலையில் ரஜினியை அடிக்கடி சந்திக்கும் பொன்னான வாய்ப்பை அவர் பெற்றார். ஆகையால் முன்னெப்போதையும்விட அவர்களது நட்பு ஆழமாக மாறியது. இந்த சூழ்நிலையில் சோவை அவரது அலுவலக ஊழியர்கள் “நீங்கள் என் ரஜினியிடம் உங்கள் நட்பை பயன்படுத்தி நம் இதழுக்கு கட்டுரை எழுதித்தருமாறு கேட்கக்கூடாது?” என்று நெருக்க ஆரம்பித்தனர். ஆனால் சோவோ, “எனக்கு அவரிடம் உள்ள நட்பை இப்படி சுயநலத்துக்காக பயன்படுத்த நான் விரும்பவில்லை. அவராக கேட்கட்டும் பார்க்கலாம்,” என்று கூறி சமாளித்துவந்தார்.
சோவிடம் ரஜினி கேட்ட வாய்ப்பு
இதற்க்கிடையே ரஜினியாகவே சோவிடம் ஒரு நாள், “என்னிடம் கட்டுரை எழுதித்தருமாறு கேட்கவே மாட்டீர்களா?” என்று கேட்டுவிட்டார். சூப்பர் ஸ்டார் இப்படி சோவிடம் கேட்கும் சமய்த்தில் அவருக்கு இந்த துக்ளக் செண்டிமெண்ட் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
“உங்களிடம் நான் கொண்டுள்ள நட்பை இந்த விடத்தில் பயன்படுத்திக்கொள்ள நான் விரும்பவில்லை. நீங்களாகவே கேட்டால் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். வேறொன்றுமில்லை. தாராளமாக எழுதிக்கொடுங்கள்” என்று சோ கூற, சூப்பர் ஸ்டார் இப்படியாக தொடர் எழுதலானார்.
அந்த தொடரின் ஒரு பாகம் தான் இது. வாழ்க்கை, தனது வெற்றி, தோல்வி, இவற்றை பற்றிய தனது கண்ணோட்டங்களை அதில் சூப்பர் ஸ்டார் சுவைபட கூறியிருந்தார். தவிர தனக்கும் ஜெவுக்கும் மோதல் ஏற்பட்ட முழு காரணங்களையும் சூழ்நிலைகளையும் அதில் விளக்கியிருந்தார். கிட்டத்தட்ட மூன்று மாதத்திற்கு அந்த கட்டுரை தொடர்ந்தது. அந்த கட்டுரையை அப்படியே எடுத்து நாளிதழ்கள் சுவையான் தலைப்புகளிட்டு வெளியிட்டு வந்தன.
கட்டுரை குறித்து சோ எழுதிய முன்னுரையில், “மக்களுக்கு பயன் தரும் கட்டுரைகள் ஜனரஞ்சகமாக இருப்பதில்லை. ஜனரஞ்சகமாக இருக்கும் கட்டுரைகள் மக்களுக்கு பயன் தருவதில்லை. ஆனால் ரஜினி எழுதும் இந்த தொடர் நிச்சயம் ஜனரஞ்சகமாக இருக்கும், உங்களுக்கும் பயன் தரும் விதத்திலும் இருக்கும்!” என்று கூறியிருந்தார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...