கட்சி தொடங்கிய கோவை ரஜினி ரசிகர்கள் - கொடியும் அறிமுகம்
கோவை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி தொடங்க வேண்டும் என பல காலமாக கோரியும், ரஜினியிடமிருந்து பெருத்த அமைதியே பதிலாக வந்து கொண்டிருக்கும் நிலையில் கோவை மாவட்ட ரஜினி ரசிகர்கள் அதிரடியாக ஒரு கட்சியை தொடங்கியுள்ளனர். தேசிய திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் கட்சிக்கென கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர். ஆனால் தனது ஒவ்வொரு படத்திலும் அதுகுறித்து பூடக வசனங்களை வைத்து வரும் ரஜினி, இதுவரை வருவேன் என்று உறுதியாக சொல்லவில்லை.ஆனால் ரஜினிக்குப் பின்னர் சூப்பர் ஸ்டார்களான சிரஞ்சீவியும், விஜயகாந்த்தும், சரத்குமாரும், ஏன் கார்த்திக்கும் கூட அரசியலில் புகுந்து கலக்கிக் கொண்டிருப்பதால், இனியும் பொறுக்க முடியாது என்ற நிலைக்கு ரஜினி ரசிகர்கள் வந்து விட்டனர்.சமீபத்தில் ரஜினியின் செயலாளர் சத்திய நாராயணாவையும் அவர்கள் முற்றுகையிட்டு பரபரப்பைக் கூட்டினர்.ரசிர்களிடமிருந்து கிளம்பியுள்ள இந்த புதிய அழுத்தத்தால், வரும் 15ம் தேதி ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினி சந்திப்பதற்காக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இந்நிலையில் கோவை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஒன்று திரண்டு புதிய கட்சி, கொடியை தேர்வு செய்து அறிவித்து பரபரப்பு சூட்டை கிளப்பி விட்டுள்ளனர்.தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் என்று கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளனர். கட்சிக் கொடி சிவப்பு, நடுவில் வெள்ளை, கீழே கருப்பு என்ற மூவண்ணமும், நடுவில் வெள்ளை நிறத்தில் ரஜினி உருவம் பொறித்த நட்சத்திரமும் போட்டு வடிவமைத்துள்ளனர்.ஒரு படி மேலாக, கட்சி பெயரை பதிவு செய்வதற்கான முயற்சியிலும் அவர்கள் இறங்கியுள்ளனர். பெரிய அளவிலான விளம்பர போர்டுகளை கோவை முழுவதும் ஆங்காங்கே வைத்துள்ளனர்.இதுகுறித்து தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா, துணைச் செயலாளர் அபு ஆகியோர் கூறுகையில், ரஜினி அரசியலுக்கு வருவார் என காத்திருந்து ஏமாந்துவிட்டோம். ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தோர் புதிய கட்சிகளுக்கு சென்றுவிட்டனர். எனவே நாங்களாகவே புதிய கட்சியை தொடங்கி விட்டோம்.அடுத்த வாரத்தில் தலைவர் எங்களை சந்திக்கும்போது கட்சித் தொடங்குவதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிடும்படி வலியுறுத்துவோம். மறுத்தால் அனைத்து மாவட்ட ரசிகர்களும் ஒன்றுகூடி தொடர் உண்ணாவிரத நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.மேலும் இதுதொடர்பாக நடந்த கூட்டத்தில், உடனடியாக நடிப்பை விட்டு விட்டு அரசியலில் தீவிரமாக ரஜினி ஈடுபட வேண்டும் என்று கோரி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.கடந்த வாரமே சிரஞ்சீவியின் பிரஜாராஜ்ஜியம் என்ற பெயரையொட்டி, ரஜினி ராஜ்ஜியம் என்ற பெயரில் ரஜினி ரசிகர்கள் கோவை முழுவதும் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.கோவையிலிருந்து கிளம்பியுள்ள இந்த புதிய புயல், தமிழகம் முழுவதையும் கலக்கி, போயஸ் தோட்டத்தில் (ரஜினி வீடு அங்குதான் உள்ளது) கரையைக் கடக்குமா அல்லது கோவையோடு நின்று போகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment