மாற்றமும் ஏமாற்றமும் - நமக்காகத்தான்!!


இந்த பதிவை படிப்பவர்கள் நான் ரஜினி கட்சி ஆரம்பிக்க வில்லை என்ற கடுப்பில் இதை எழுதியதாகவோ அல்லது விஜயகாந்தின் மீதுள்ள பொறாமையின் காரணமாகவோ இதை எழுதியதாகவோ நினைக்க வேண்டாம்.
இந்திய நாட்டில் தொடங்கப் பட்டிருக்கும் அத்தனை கட்சிகளையும் அலசும் ஒரு விமர்சகனாகவும் அன்றாடம் நாட்டு நடப்புக்களை பார்த்து மாறிக்கொண்டிருக்கும் மனநிலை கொண்ட ஒரு சராசரி வாக்காளனின் எண்ணமாகவும் இதை எடுத்துக்கொள்ளும்படி கேட்டுகொள்கிறேன்.
நம் வலைத்தளத்திற்கு இந்த விஷயத்தில் நேரடியாக தொடர்பு இல்லையென்றாலும், இன்றைய சூழ்நிலையில் இந்த பதிவை அளிப்பது அவசியம் என்று தோன்றியதால்தான் இந்த பதிவு.
இன்று அந்த நடிகரின் கட்சி மாநாடு சென்னையில் நடைபெறுகிறது.
எங்கு பார்த்தாலும் அந்த நடிகர் இரு கையை நீட்டி நம்மை வரவேற்பது போன்ற பேனர்கள், போஸ்டர்கள். ஜெ.வின் வளர்ப்பு மகன் திருமணத்துக்கு பிறகு சென்னை இந்த அளவு இப்போது தான் அமளி துமளி படுகிறது. எங்கு பார்க்கினும் வாழைமரங்கள், தோரணங்கள், டிஜிட்டல் பேனர்கள், அலங்காரங்கள்.
நாளிதழ்களில், வாரப் பத்திரிக்கைகளில் திரும்பிய பக்கமெல்லாம் லட்சக் கணக்கில் செலவு செய்து தரப்பட்டுள்ள விளம்பரங்கள். அந்த எலும்பு துண்டுகளுக்காகவும் வேறு சில எதிர்பார்ப்புகளோடும் அந்த நடிகரை புகழ்ந்து சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகள் எழுப்பும் கட்டுரைகள், கடிதங்கள்…
நம் ரசிகர்கள் சிலர் இவற்றை பார்த்து தங்களது ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டனர். நான் அவர்களிடம் சொன்னேன்: “எனக்கும் முதலில் உங்களைப் போல் ஆதங்கமாகவும், பிரமிப்பாகவும் தான் இருந்தது. ஆனால் இப்போது சலிப்பும் வெறுப்பும் தான் ஏற்படுகிறது. எனக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும்தான். அந்த நடிகர் தனக்கு இருக்கும் பெயரை தானாகவே அழித்துகொண்டிருக்கிறார். அவருக்கு எதிரி அவர்தான். அதனால் இது குறித்து நாம் ஆதங்கப் படவோ அல்லது பொறாமைப்படவோ எதுவுமில்லை. நடக்கும் கூத்துக்களை வேடிக்கை வேண்டுமானால் பார்க்கலாம்,” என்றேன்.
காரணம் அனைத்தும் ஓவர்டோஸாக போய் மக்களுக்கு இப்போது மிஞ்சுவது எரிச்சல் மட்டுமே. மின் தட்டுப்பட்டால் மக்கள் அவதிப்படும் இந்த சூழ்நிலையில் விளக்கொளியில் இவர்கள் மாநாட்டு திடல் மின்னுவது மக்களை இன்னும் கோபத்தில் தள்ளும். (ஜெனரேட்டர்கள் மூலமாகத்தான் என்றாலும் பசியோடிருப்பவன் முன் அறுசுவை உணவு உண்பதைப் போல் தான் இதுவும்).
மேலும் வெற்று படாடோபங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதில் கழகங்களையே தூக்கி சாப்பிடுவது போல் இவர்கள் செய்யும் பந்தா வரைமுறை தாண்டி போய்விட்டது.
இந்த படாடோபங்களால் மாற்றம் தேடி சென்ற மக்களுக்கு இப்போது மிஞ்சுவது ஏமாற்றமே. மேலும் குடும்ப அரசியலை கிண்டலடித்துவருகிறார் இவர். ஆனால் இவரது கட்சியின் விளம்பரங்களில் இவரைவிட இவரது மனைவிக்கும், மைத்துனனுக்கும் அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கழங்கள் மட்டுமே இதுவரை செய்து வந்த நாளிதழ்களில் கொடுக்கப்படும் - ‘பில்ட் அப்’ - விளம்பரங்களிலும் இவர்கள் அவர்களை ஓவர்டேக் செய்துவிட்டனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக இவரது ஆணவம் தோய்ந்த பேச்சை யாருமே ரசிக்கவில்லை என்பது கண்கூடு.
இன்னும் என்னால் ஏராளமாக இது போல் கூறமுடியும்.
இவைகள் இன்றி அவரால் நீடிக்க இயலுமா?
சரி..மக்களுக்கு பிடிக்காத இவற்றையெல்லாம் நிறுத்திவிடலாம் என்று அவர்கள் நினைத்து நிறுத்தினால் என்னாகும்? தண்ணீராலேயே உயிர் வாழும் மீன், அந்த தண்ணீரை விட்டு வெளியில் வந்தால் என்னாகுமோ அது தான் அந்த நடிகருக்கும் ஆகும். வெற்று படாடோபங்களால் முன்னுக்கு வந்த அந்த நடிகர், அவரை அடையாளம் காட்ட அவை இல்லையெனில் அதன் மூலமே காணாமல் போய்விடுவார். இத்தகு விளம்பரங்கள் இன்றி அந்த நடிகர் தனது கட்சி இருப்பதை மக்களுக்கு மன்றத்தில் காட்ட மிகவும் போராட வேண்டியிருக்கும்.
இதைத்தான் கண்ணதாசன் பிரபல பாடல் வரிகளில் கூறியிருப்பார், “விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்கை நிரந்தரமாகாது…தம்பி…நிரந்தரமாகாது..” என்று!!
மேலும் அந்த நடிகர் ஒன்றும் ரஜினி அல்லவே. விளம்பரங்கள் இன்றி உட்கார்ந்த இடத்திலேயே மக்களை சுண்டி இழுக்க!!
அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு
காரணங்கள் இல்லாமால் காரியங்கள் நடப்பதில்லை. பிரபஞ்சத்தில் அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு.
“கண்ணா, இப்படியெல்லாம் தான் ஒரு கட்சியை நடத்த கூடாது… பாத்து பாடம் படிச்சிக்க.. அதுக்குதான் இந்த ஆளை உனக்கு முன்னே நான் இறக்கி விட்டேன். எல்லாம் உன் நன்மைக்கு தான்,” என்று ஆண்டவன் இந்த கூத்துக்களை யாருக்கோ சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுக்கிறான் என்று மட்டும் எனக்கு புரிந்தது.
உங்களுக்கு புரிகிறதா?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...