சூப்பர் ஸ்டாரின் தற்போதைய அறிக்கைக்கு நம் ரசிகர்கள் மதியில் ஒரு “Mixed Response” தென்படுகிறது.
அவரை நன்கு புரிந்துகொண்டவர்கள் அறிக்கையையும் புரிந்துகொண்டார்கள்.
அவரை புரிந்து கொள்ளாதவர்களுக்கு தான் அறிக்கையும் புரியவில்லை. இது தான் உண்மை.
அறிக்கை தொடர்பாக நான் வெளியிட்ட செய்திகளுக்கு நிறைய அற்புதமான “Comments” வந்தன. அவற்றில் நண்பர் ஈ.ரா. அனுப்பிய இது ஒரு ‘ஸ்டார் கமெண்ட்’ என்று சொல்வேன். அறிக்கையை புரியாமல் சூப்பர் ஸ்டார் மேல் அதிருப்தியில் இருப்பவர்களுக்கு தான் இந்த பதிவே. நண்பர் ஈ.ரா அவர்கள் நான் கேட்டுகொண்டதர்க்கிணங்க, இதை சில திருத்தங்களுடன் தந்திருக்கிறார்.
தலைவரின் அறிக்கையால் சமாதானம் அடையாதவர்கள் இதை ஒரு முறை படியுங்கள்; என்றும் நினைவில் நிற்கும்!!
- சுந்தர்
…………………………………………………………………………………………………………………
இவரைப் போய் தவறாக நினைக்கலாமா?
அன்பு நண்பர்களே,
இது வரைக்கும் தலைவர் என்னிக்குமே ஒரு குறிப்பிட்ட டைம் பிரேம் கொடுத்து ஜகா வாங்கியதில்லை… ஆனால் இந்த முறை “எந்திரன் முடியும் வரை” என்று முதன் முறையாக ஒரு வாய்தா வாங்கி இருக்கிறார்…. இதில் இருந்து அவருக்கும் கண்டிப்பாக காலத்தின் அருமை தெரிவதும், ரசிகர்களின் வேகத்தை மிக நீண்ட நாட்களுக்குத் தள்ளிப் போட முடியாது என்பதை அவர் முழுவதும் உணர்ந்திருப்பதும் நன்கு புலனாகிறது…..
உண்மையிலேயே நாடு நல்லா இருக்கணும், தலைவர் மேல நம்பிக்கை வேணும் அப்படின்னு நினைக்கிறவர்கள் தலைவர் மாதிரியே அவரவர் சக்திக்கு ஏற்ப ஒரு காரியத்தை, சாதிக்கக் கூடிய ஒரு விஷயத்தை டார்கெட்டாக வைத்துக் கொள்ளுங்கள்… தலைவர் சாதிக்கும் நேரத்தில் நீங்களும் ஏதேனும் ஒரு சாதனையை நிகழ்த்தி நெஞ்சை நிமிர்த்திக்க் கொள்ள முயற்சி செய்யுங்களேன்..
குறைந்த பட்சம் நமது நல்ல காரியங்களால் ஒரு பத்து பேராவது நம் மீது நல்ல எண்ணம் கொள்ள உறுதி கொள்வோம்….
“விசிலடிச்சான் குஞ்சுகள், “ஏன்டா இவ்வளவு படிச்சுட்டு இப்படி இருக்க?, சினிமாக்காரன் பின்னாடி சுத்தறியே வெக்கமா இல்ல? ” என்பது போன்ற அறிவு ஜீவிகளின் கேள்விகளுக்கு, நமது நல்ல காரியங்கள் எனும் மௌனக் கேடயத்தை அரணாக்குவோம்…..குத்திக் குத்தி முனை மழுங்கிய வாட்களை அவர்களே கீழே போட்டு விடுவார்கள்..
ஒரு விஷயம்…..
ரஜினி இப்படி அறிக்கை விட்டார் என்று இன்னும் சில வாரங்களுக்கு அவரை பத்திரிகைகளும் டிவிக்களும் நையாண்டி செய்யப் போகின்றன…. போலி ரசிகர்களையும், ரஜினியை உணராத மனிதர்களையும் தூண்டி விட்டு குளிர் காயும் முயற்சிகளும் நடக்கும்… ரஜினி ஏமாற்றி விட்டதாக கதை களை கட்டும். ஆனால் அதே சமயம் ரஜினி எதுவுமே வாய் திறக்காத போது ஏதோ இன்வெஸ்டிகேஷன் புலிகள் போல் மாய்ந்து மாய்ந்து பில்ட் அப் கொடுத்து எழுதி ரசிகர்களை தூண்டிய பத்திரிகைகள் தங்கள் செய்தி அனைத்தும் தவறு என்பதை மறைத்து மொத்த பழியையும் ரஜினி மேல் போடுவார்கள்….
இவர்கள் எப்பொழுதெல்லாம் கவர் ஸ்டோரிகளும் பிறரிடம் கவர் வாங்கின ஸ்டோரிகளும் எழுதுகிறார்களோ அப்போ எல்லாம் ரஜினி ஒரு மறுப்பு அறிக்கை கொடுக்கணும் என்று எதிர்பார்க்கிறார்களா? அடுத்த வாரம் புதன் கிழமை என்ன சாப்பிடுவோம் என்பதே நமக்கு தெரியாத போது என்றோ நடக்கப் போகும் (அல்லது நடக்காமலே கூட) போகும் விஷயத்தை இப்பவே உறுதி செய்ய முடியுமா?
ரஜினி என்றைக்கும் ஒரு வித்தியாசமான மனிதர்….. அவர் யோகி…. புரிந்தவர்களுக்கு அவர் புடம் போட்ட தங்கம்….
உடனடி அரசியல் விரும்பும் ரசிகர்களே,
தயவு செய்து ரஜினியைப் புரிந்து கொள்ளுங்கள்…. தலைவர் என்றைக்குமே நம்மைக் கட்டுப்படுத்தியது இல்லை…. அன்றைக்கு பிஜேபி கூட்டணியை ஆதரித்த போது கூட, இது என் நிலை தான், ரசிகர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்… ஆனால் ரத்தம் வழிய என் ரசிகர்களை தாக்கிய பாமக இடங்களில் மட்டும் அவர்களை கண்டிப்பாக எதிர்ப்போம் என்றார்….
தான் ஒரு ஸ்திரமான முடிவுக்கு வராத போது, தன் தொண்டர்களுக்கு முழு சுதந்திரத்தையும் தர நினைக்கும் உயர்ந்த மனிதர் அவர்…. தன் சுய லாபங்களுக்காக முட்டாள் முடிவுகளுக்கு, தொண்டர்களைப் பகடைக் காய்களாக ஆக்கும் தலைவர்களையே பார்ப்பவர்களுக்கு ரஜினியின் செயலும், அதிலுள்ள தனி மனித சுதந்திர ஈடுபாடும் புரிய நியாயம் இல்லை….
இவர் ஒரு வித்யாசமான தலைவர்….இவர் விரும்புவது வித்யாசமான அமைப்பு… அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்…
நாம் நம்மைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு கட்சி, ரசிகன், தொண்டன், அமைப்பு எல்லாவற்றிற்கும் நம்மை அறியாமலேயே பிற இத்துப் போனவர்களை உதாரணமாகக் கொள்கிறோம்…. அங்குதான் பிரச்சினையே… ரஜினியுடன் கம்பேரிசன் பண்ணிப் பார்க்க இங்கு யாரும் இல்லை… அதனால் தான் அவர் ஏமாளியாகவும் கோமாளியாகவும் சித்தரிக்கப் படுகிறார். … ஆனால் என்றைக்கும் அவர் அடி மனதில் சத்தியமும் நேர்மையும் விழித்துக்கொண்டே இருக்கின்றன…..
பாலகுமாரன் ஒரு நாவலில் எழுதியிருப்பார்…. ராஜ ராஜ சோழன் பெரிய கோயிலை கட்டும்போது சிற்பிகள் கேட்டார்களாம், ” ஐயா, இந்த கோயில் காலத்தை கடந்து தங்கள் பேரைச் சொல்ல வேண்டுமே, நாங்கள் அதற்காக எங்கள் முழு திறமையையும் அதீத உழைப்பையும் செய்யட்டுமா ?” என்று… அதற்கு அவன், ” அப்படி எல்லாம் ஒன்றும் வேண்டாம்…. இது கடவுளுக்கு செய்யும் வேலை, அந்த வேலையை சத்தியத்துடன் செய்யுங்கள், சத்தியம் மட்டுமே என்றைக்கும் காலத்தைத் தாண்டி நிலைத்து நிற்கும்” என்றானாம்..
அதே போல்தான், ரஜினியின் நிலையும்…நிகழ் காலத்தில் செய்யும் காரியத்தை சத்தியத்துடன் செய்தால் எதிர்காலத்தில் அது நிச்சயம் நிலைத்து நிற்கும். மனதில் வைராக்கியமும், சமநிலையும், சத்தியமும் ஏற்பட்டு விட்டால்தான் அவர் மனதில் எழும் ஓர் உன்னத நிலையை உணர முடியும்.. ஒரு கட்சியோ, பதவியோ அது கண்டிப்பாக இப்பொழுதே வேண்டும் என்று தனக்கோ தன்னை சார்ந்தவர்களுக்கோ அளவு கடந்த ஆசை ஏற்படும்போது, அல்லது, ஏற்படுத்தப் படும்போது, இல்லை, இப்போ இது கூடாது… .. இந்த ஆர்வம் மட்டுப் படவேண்டும்… உணர்ச்சிகளை கடந்த நிலையில் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்த வேண்டும்.. தேடல் இந்த வழியில் அறிபறியில் நடக்கக் கூடாது என்று யோசிக்கும் மனிதன் தான் உண்மையான தலைவனாக, வழிகாட்டியாக வர முடியும் என்பதை அவர் உணர்ந்திருப்பதே அவர் செயல்களில் இருந்து நன்கு தெரிகிறது…தனக்கு வேண்டியதோ அல்லது தான் விரும்பியதோ அது நல்ல விஷயமாகவே இருந்தாலும் கிடைக்கவில்லை என்பதற்காக கொடுக்காதவன் மீது கொண்ட மதிப்பு குறையக் கூடாது…அப்படி குறைந்தால் குறைபாடு நம்மிடம் தான்…. “நீ மிட்டாய் தரலேன்னா உன்கூட டூ என்று சொல்லும் சிறு பிள்ளைத்தனம்தானே ?”ஆகவே, மற்ற நடிகர்களோடும், சராசரி தலைவர்களோடும் ஒப்பிட்டு இது போல் இல்லையே, அவர் போல் இல்லையே என்றெல்லாம் புழுங்கினால் நஷ்டம் நம் மனதுக்கும் உடலுக்கும் தான்….
அவருக்கு தெரியும்… காலம் எப்போது என்று…..
இந்த வரிகளைப் பாருங்கள்…
“ஒரு விதைக்குள்ள அடைபட்ட ஆல மரம் கண்விழிக்கும் அது வரை பொறு மனமே…”
- நாம் இங்கே உள்ளே புதைந்திருக்கும் விதை, இப்போ வந்தால் தான் வளரும், இல்லையேல் வளரவே முடியாது என்று நாமாகவே நினைத்துக் கொண்டு, கையில் ஒரு சிறு வாளியில் தண்ணீரோடு நின்று கொண்டிருக்கிறோம்… ஒன்றை மறந்து விட்டோம்… அந்த விதை தெய்வத்தால் தூவப்பட்டது என்பதை…. அதற்கு பெருமழை தானாகவே கிடைக்கும்…. விருட்சமாய் வளரும்… கவலைப் படாதீர்கள்…. சிறு ஆடுகள் மேய்ந்து களைத்து ஓய்ந்த பின், நிழல் தரும் பெரும்குடையாகவும் அரணாகவும் அந்த விருட்சம் தானே மேலே எழும்பும்…..
அவர் வழி என்றும் தனி வழி தான்……
வாழ்க ரஜினி இன்னும் பல்லாண்டு……..
அன்புடன்,
ஈ. ரா
http://www.aakkal.blogspot.com/
No comments:
Post a Comment