குசேலன் விமர்சனம் (kuuselan review)


நட்பின் பெருமையை உணர்த்த வந்திருக்கும் ரஜினி படம்.

பால்ய நண்பர்களாக இருந்த இரண்டு பேர், காலச் சுழலில் பிரிகின்றனர். ஒருவர் மலையூர் கிராமத்தில் முடி திருத்தும் கடை நடத்தும் ஏழை பார்பர் பாலு. மற்றொருவர் தமிழகமே கொண்டாடும் 'சூப்பர் ஸ்டார்' நடிகர்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு நண்பர்கள் இருவரும் சந்திக்கின்றனர். அப்போது நண்பர்களின் மனநிலை என்ன என்பது மனதை கனக்க வைக்கும் க்ளைமாக்ஸ்.

வறுமையின் பிடியிலும் தன்மானத்தை இழக்க விரும்பாத பார்பர் பாலுவாக பசுபதி. நம்பி வந்த காதல் மனைவியையும், குழந்தைகளையும் வசதியாக வாழவைக்க முடியவில்லையே என்ற ஏக்கம் !

குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் கூட கட்ட இயலாத நிலை. ஆனாலும் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்ட நண்பனை சந்தித்து உதவி கேட்க தயக்கம்.

லோயர் கிளாஸ் தாழ்வு மனப்பான்மையின் ஹை கிளாஸ் பிரதிபலிப்பு பசுபதியின் நடிப்பு.

படத்திலும் 'சூப்பர் ஸ்டார்' நடிகராக வருகிறார் ரஜினி. அவரைப்பற்றியும், ரசிகர்கள் மத்தியில் அவருக்கு உள்ள செல்வாக்கு பற்றியும் நன்றாக தெரிவித்திருக்கும் இயக்குனர் வாசு, அதை மிக நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நிஜத்தில் ரசிகர்கள் ரஜினியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள், அதற்கு அவர் அளிக்க விரும்பும் பதில்கள் என அனைத்தையுமே குசேலன் மூலம் பரிமாறிக்கொண்டிருக்கிறார் வாசு.

இதன் மூலம், இமயமலை பயணம், கமல் பற்றிய கருத்து, அரசியல் பிரவேசம் போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கிறது ரசிகர்களுக்கு.

தனது கிராமத்துக்கு படப்பிடிப்புக்காக வரும் ரஜினியை பார்க்க ஊரே முண்டியடிக்க, பால்ய நண்பரான பசுபதி மட்டும் அவரை பார்க்க தயங்கி நிற்பதும், பழைய நினைவுகளை மறக்காத ரஜினியின் நட்பை நினைத்து பரசவமாவதும் என முத்திரை பதிக்கிறார் பசுபதி.

வழக்கம் போல் நடிப்பு, ஸ்டைல், யதார்த்தம் என கலக்குகிறார் ரஜினி. படம் தொடங்கி 30 நிமிடங்களுக்கு பிறகு வந்தாலும், கடைசி வரை இடை இடையே வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்.

ஏழை நண்பர் பசுபதியை கட்டியணைத்து உருகும் போது நடிப்பிலும் நான் தான் நிரந்தர 'சூப்பர் ஸ்டார்' என்பதை நிரூபித்திருக்கிறார்.

நயன்தாராவும் நடிகையாகவே வருகிறார். அவர் வந்து போகும் காட்சிகள் எல்லாமே ஜில் என்றாலும், மனதில் ஒட்டாமல் போகிறார்.

குடும்பப் பாங்கான வேடங்களில் ஜொலிப்பது என்றால் எத்தனை இடைவெளி விழுந்தாலும் மீனாவுக்கு நிகர் அவரே. கொஞ்சும் பேச்சும், மயக்கும் சிரிப்பும் இன்னும் அப்படியே இருக்கிறது மீனாவிடம்.

பசுபதிக்கு போட்டியாக சலூன் நடத்தும் கேரக்டரில் வடிவேலு. வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். வலுக்கட்டாயமாக் ஆட்களை கடத்தி வந்து முடி வெட்டும் காட்சிகள் ரசனையான காமெடி.

லிவிங்ஸ்டனும், அவரது அடியாள் சந்தான பாரதியும் கிடைக்கிற இடைவெளியில் காமெடி சரவெடி கொளுத்துகின்றனர். நடிகர் பிரபு பாதுகாப்பு அதிகாரி பாத்திரத்தில் கம்பீரமாக வந்து போகிறார்.

'சினிமா... சினிமா...' பாடலை தவிர வேறு எதுவும் கேட்கிற மாதிரி இல்லாதது வருத்தம். ' வெயிலோடு விளையாடிய' ஜீ.வி. பிரகாஷ் இதிலும் இசையில் இன்னும் நன்றாக விளையாடியிருக்கலாம்.

அரவிந்த கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், கதையோட்டத்தை சிதைக்காத எடிட்டிங்கும் படத்துக்கு ப்ளஸ்.

முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி என்பதால் காட்சிக்கு கூடுதல் அழுத்தம்.

ரஜினி படப்பிடிப்புக்காக பசுபதியின் ஊருக்கு வரும்போது ' அண்ணாமலை-2ம் பாகம்' என்று காட்டுகிறார்கள். மற்றொரு காட்சியில் 'சந்திரமுகியின் 2ம் பாகம்' என்கிறார்கள். இது போன்ற காட்சி பிழைகளை நீக்கியிருக்கலாம்.

ஏழை நண்பன் ஏணியாக இருந்து தனது மற்றொரு நண்பனை உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்வதும், வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு சென்ற நண்பன், ஏழையை கட்டிக்கொண்டு அழுவதும் ஏற்கனவே விக்ரமன் படங்களில் பார்த்ததுதான்.

படத்தின் க்ளைமாக்ஸ் 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்' க்ளைமாக்ஸை ஏனோ நினைவுப்படுத்துகிறது.

என்றாலும் ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் முன்னால் மற்ற குறைகள் எல்லாம் கண்ணுக்கு தட்டுப்படுமா என்ன?

குசேலன், என்றும் குபேரன்!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...