கவிஞர் வைரமுத்துவின் ‘ஆயிரம் பாடல்கள்’ நூல் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு கருணாநிதியும், ‘திரையுலக முதல்வர்’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பங்கேற்றனர்.
நூலை முதல்வர் கருணாநிதி வெளியிட, ‘திரையுலக முதல்வர்’ ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் ரஜினியின் பேச்சு மிகச் சிறப்பாக அமைந்தது. தனது நெருங்கிய நண்பரான வைரமுத்துவைப் பற்றி பேசுகையில், “30 ஆண்டு நட்பு. ஆயிரம் பாடல்கள்… இந்த சமயத்தில் எதைப் பேசுவது எதை விடுவது என்று தெரியவில்லை. இந்த விழாவில், ஐந்து நிமிடம்தான் பேச வேண்டும் என்றார்கள். நிறைய பேச வேண்டும் என்றால், கொஞ்சம் சிந்தித்தால் போதும். கொஞ்சம் பேச வேண்டும் என்றால்தான் நிறைய சிந்திக்க வேண்டும்!
என்னுடைய கடந்த காலங்களிலும் எதிர்காலத்திலும் என் மீது அக்கறை கொண்டவர் கவிஞர் வைரமுத்து.
அவர் எழுதிய வார்த்தைகள் எனக்கே உற்சாகத்தை கொடுக்கும். பல சிந்திக்க வைத்த எண்ணங்களை எழுதியவர் வைரமுத்து.
அன்பு, காதல், பாசம், துக்கம், நாத்திகம், ஆத்திகம் என எல்லா உணர்வுகளிலும் பயணிப்பவர்கள் கவிஞர்கள். எல்லாவற்றையும் பற்றி சிந்திக்கிறார்கள். அது பெரிய விஷயம். தொடர்ந்து நிறைய பாடல்களை அவர் எழுத வேண்டும். எட்டு எட்டா மனித வாழ்வைப் பிரித்து எனக்கு பாட்டெழுதியவர், எட்டாம் எட்டுக்குமேல இருந்தா நிம்மதி இல்லே- என்று குறிப்பிட்டிருந்தார். நான் சொல்கிறேன்… 16 எட்டு இருந்தாலும் எழுதாமல் இருந்தால் அவருக்கு நிம்மதியில்லை,” என்றார்.
படையப்பா படத்தில் ‘என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழல்லவா.. என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா!’ என்ற வரிகளை எழுதி தன்னை சிந்திக்க வைத்தவர் வைரமுத்து என்பதையும் ரஜினி குறிப்பிட்டார்.
வழக்கம் போல வேட்டி சட்டையில் வருவார் என்று பார்த்தால், இந்த நிகழ்ச்சிக்கு பேண்ட் – சர்ட்டில் மிகக் கேஷுவலாக வந்திருந்தார் ரஜினி.
புகைப்படக்காரர்களுக்கென்றே சிறிது நேரம் ஒதுக்கி அவர்கள் விரும்பியபடி புகைப்படங்களை எடுத்துக் கொள்ள வைத்தார் ரஜினி. அவர்களும் சலிக்காமல் எடுத்துத் தள்ளினர்.
இயக்குநர்கள் கே பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், இசையமைப்பாளர்கள் எம்எஸ் விஸ்வநாதன், ஏ ஆர் ரஹ்மான், நடிகர் கமல்ஹாஸன், பாடலாசிரியர் வாலி என பலரும் வந்திருந்து வாழ்த்தினர்.
No comments:
Post a Comment