
ரஜினியின் எந்திரன் படம் முடிந்துவிட்டது. ரிலீஸுக்கான பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன.இன்னொரு பக்கம், அவரது புதுப்படம் என்னவென்பது குறித்து ஆளுக்கொரு யூகங்களை அடித்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எந்திரனில் தனது பணிகள் அனைத்தையும் முடித்துவிட்ட ரஜினி, அடுத்து எந்திரன் ரிலீஸ், இமயமலைப் பயணம் என்று பிஸியாவதற்குள், அவரிடம் ஒரு முக்கிய அப்பாயிண்ட்மெண்டுக்காக ரசிகர் மன்றப் பிரமுகர்கள் நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர். அரசியல் பிரவேசம் குறித்த ரஜினியின் இறுதியான முடிவைத் தெரிந்து கொள்வதற்காகவே இந்த நச்சரிப்பும். சில ஆண்டுகளுக்கு முன் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, எந்திரன் படத்தை முடித்த பிறகு ரசிகர்களுடன் பேசுவதாக அறிவித்தி்ருந்தார். முன்பு வாக்களித்தபடி, ரஜினியும் ரசிகர்களுடன் அரசியல் பிரவேசம் குறித்துப் பேச முடிவெடுத்துள்ளார். விரைவில் சந்திப்புக்கான தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.1995ல் பாட்ஷா பட விழாவில் ரஜினி கொளுத்திப் போட்ட அரசியல் குண்டு இன்னும் வெடித்தபாடில்லை. இடைப்பட்ட இந்த ஆண்டுகளில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்து வந்த ரசிகர்கள் பலர் தங்களுக்கு வசதியான கட்சிகளில் சேர்ந்துகொண்டனர். மிச்சமிருக்கும் தொண்டர்கள், இந்த முறை கடைசியாக ரஜினியின் முடிவைத் தெரிந்து கொண்டு, தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் காத்திருக்கிறார்கள்.ரஜினியின் அரசியல் வெடி இனியும் வெடிக்குமா... அதற்கேற்ற சூழலும் அவசியமும் இப்போதும் உள்ளதா என்பது அநேகமாக இந்த ஆண்டு இறுதிக்குள் தெரிந்துவிடும்.
No comments:
Post a Comment