“ரஜினி என் தெய்வம்!” கொண்டாடும் விந்தை ரசிகர்..!!




(முன் குறிப்பு: ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பும், அவர் அரசியலுக்கு வருவார் என்று நம்பும் அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய ஒரு பதிவு இது.)
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்க்காக சமூக நலப்பணிகள், பிரார்த்தனைகள் செய்யும் ஒரு விந்தை ரசிகரின் கதை இது.
சமீபத்திய நக்கீரன் (அக். 25 ) இதழில் ஒரு விந்தை ரஜினி ரசிகர் பற்றி இருபக்க கட்டுரை வெளியாகியிருக்கிறது. அவசியம் படியுங்கள் சுந்தர் என்று நண்பர் எனக்கு sms அனுப்பியிருந்தார்.
பிரமிப்பு….
படித்துவிட்டு என்னால் பிரமிப்பை அடக்க முடியவில்லை. ரஜினியின் பெயரைச் சொல்லி அவர் விரும்பாதவற்றை எல்லாம் செய்யும் ரசிகர்களுக்கு மத்தியில், இப்படியும் ஒருவரா என்று வியந்தேன். உடனடியாக அவர் நம்பரை எல்.ஐ.சி. ஸ்ரீதர் உதவியுடன் தேடிப் பிடித்து பேசினேன்.
பாலம் அமைப்பை சேர்ந்த நூலகர் கல்யாணசுந்தரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். தனது வருவாய் அனைத்தும் ஏழைகளுக்கு அள்ளிகொடுத்து தனக்கென்று எதுவும் வைத்துகொள்ளத உத்தமர் அவர். (சூப்பர் ஸ்டார் சிறிது காலம் தனது வீட்டில் அவரை விருந்தினராக வைத்திருந்தார்). அவரைப் போன்றே மென்மையான குரல் இந்த ரசிகருக்கும். ஆனால் இவரது பணிகள், அது எழுப்பியிருக்கும் சாதனைகள் ஒரு இரும்புக் கோட்டை.
இவர் வழி…தனி வழி…!!
பெரும்பாலான தீவிர ரசிகர்கள் ரஜினியை தெய்வமாகத்தான் கொண்டாடுகின்றனர். இந்த ரசிகரும் அப்படித்தான்.
“மனித தெய்வம் ரஜினி பொதுநல இயக்கம்” என்ற அமைப்பை நடத்தி வரும் திருப்பூரை சேர்ந்த முருகேசன், ரஜினியை தனது தெய்வம் என்றே கூறிவருகிறார். ஆனால் இவர் பாலாபிஷேகம் செய்வதில்லை, சூடம் கொளுத்துவதில்லை. ஆனால் ரஜினியின் பெயரைச் சொல்லி பல நல்ல காரியங்கள் செய்து வருகிறார்.
வள்ளலே ரசிகனாக
ரியல் எஸ்டேட் துறையில் உள்ள இவர், இதன் மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தையும் ஏழைகளுக்கே - ரஜினி பெயரைச் சொல்லி - அள்ளி கொடுத்துவிடுகிறார். அது தவிர தன் சொந்தப் பணத்துல நூற்றுகணக்கான ஏழைகளுக்கு வீட்டு மனைகள் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல ரஜினியின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ஆயிரம் பேரை திரட்டி ரத்த தானம் செய்வார். அது தவிர பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவச நோட்டு புத்தகங்களை வழங்குகிறார். ஊனமுற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்குகிறார். இது தவிர எங்காவது தீ விபத்து நடந்தால் முதல் ஆளாக ஓடி சென்று நிவாரணங்களை வழங்குவார். ரஜினி பொது நல இயக்கம் என்ற பெயரில் இப்படி இவர் செய்து வரும் அரும்பணிகள் ஏராளம், ஏராளம். பட்டியலிட்டால் நீண்டுகொண்டே போகும்.

ஒரே ஒரு முறை தான்
இப்படி பிறர்க்கு செய்யும் இவர், தன்கென்று எதுவும் வைத்துகொள்வதில்லை. இப்படி 26 வருடங்களாக ரஜினியின் பெயரைச் சொல்லி யாருமே செய்யமுடியாத நல்ல பணிகளை அனாயசமாக செய்யும் இவர், ரஜினியை ஒரே ஒரு முறை தான் நேரில் சந்தித்திருக்கிறாராம். அதுவும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு.
நமக்காக தனி சந்திப்பு உண்டு
படிக்கும் போதே இந்த ரசிகரைப் பற்றி அதிகம் இன்னும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று தோன்றுகிறதல்லவா? நேற்று இரவு அவருடன் பேசினேன். நமது onlyrajini.com வலைத்தளத்துக்காக ஒரு தனி சந்திப்புக்கு ஒப்புக் கொண்டார். தீபாவளி கழிந்து அது நடைபெறும். அப்போது இன்னும் பல விரிவான சுவையான தகவல்களுடன் உங்களை சந்திக்கிறோம் இருவரும்.
“எங்களுடன் வந்துவிடுங்கள்” - பிற கட்சியினரின் தூண்டில்களை புறக்கணித்தார்
இந்த விந்தை ரசிகரைப் பற்றி கேள்விப் பட்ட அரசியல் கட்சியினரும், மற்ற நடிகர்களும் இவரை தங்களது கட்சிக்கும் வரும்படியும், பெரிய பதவியை தருவதாகவும் ஆசைகள் காட்டியும், “நான் எப்பவும் மனித தெய்வம் ரஜினி பக்கம் தான் இருப்பேன்” என்று கூறி அவர்களது தூண்டில்களை புறக்கணித்துவிட்டார்.
இவரைப் பற்றி கேள்விப்பட்ட நடிகர் சரத், தன்னுடன் வந்துவிடும்படி நேரில் சந்தித்து கேட்டார். அப்போது கூட “நான் என்றும் என் தெய்வத்தின் பக்கம்தான்” என்று கூறி மறுத்துவிட்டார். (இது அன்பால சேர்ந்த கூட்டம் சரத் அவர்களே…!!)
எங்கள் தெய்வம் ஆளவேண்டும் என்பதே என் ஆசை
“மத்தவங்களுக்கு எப்படியோ தெரியாது. எனக்கு ரஜினி தான் கடவுள். அவர் பெயரில் சேவைகள் செய்வதைப் பிறவி பயனாக கருதுகிறேன். நான் இவ்வளவு சேவைகள் அவர் பெயரில் செய்வதே அவர் தமிழகத்தை ஆட்சி செய்யவேண்டும் என்பதற்காகத்தான். நான் எந்த கட்சியிலும் சேரமாட்டேன். எந்த அரசியல் தலைவரையும் பின்பற்றமாட்டோம். அவர் காலம் தாழ்த்தாமல் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை. இதற்காக அவரை வற்புறுத்தமாட்டோம். ஆனால் முக்கிய கோவில்களில் வழிபாடு நடத்த இருக்கிறோம்.
எம்மதமும் சம்மதம்
இதற்காக நூறு நூறு பேர் கொண்ட டீமை வைத்து மதுரை மீனாட்சியம்மன், திருவண்ணாமலை அண்ணாமலையார், பழனி முருகன், கும்பகோணம் கும்பேஸ்வரர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் உள்ளிட்ட முககிய கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், ஆராதனைகளும், அன்ன தானமும் செய்ய இருக்கிறோம். அதுமட்டுமல்ல, வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கும், நாகூர் தர்காவுக்கும் செல்வோம். தலைவருக்கு மட்டுமல்ல எங்களுக்கும் எம் மதமும் சம்மதம்தான்.”
“எங்கள் மனித தெய்வத்துக்கு மனமாற்றம் ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான் இந்த பிரார்த்தனை. இதன் பலனாக அவர் அரசியலுக்கு வருவார். அதற்கான சூழல் விரைவில் ஏற்படும் என்று நம்புகிறோம். அவரும் ஆட்சி பீடத்தில் ஏறுவார். மக்களுக்கு நல்லாட்சி தருவார்.” முருகேசன் வார்த்தைகளில் நம்பிக்கை தெரிகிறது.
ரஜினியை சங்கடப்படுத்தும் ரசிகர்கள் எங்கே…இவர் எங்கே…
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காக அவரை சங்கடப்படுத்தும் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் முருகேசன் பாராட்டப்படவேண்டியவர். போஸ்டர்கள், பேனர்கள், தலையங்கங்கள், பகிரங்க கடிதங்கள், மொட்டை கடிதங்கள், நம்மை போன்ற அறிவு ஜீவிகளின் (??!!) விவாதங்கள், கருத்துக்கள் - இவை எதுவும் சாதிக்காததை நிச்சயம் இவர் பிரார்த்தனை சாதிக்கும்.
இவர் இப்படி சொன்னவுடன், என்னால் இயன்ற ஒரு மிகச் சிறிய தொகையை இவரது அரும்பணிகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் அளிப்பதாக வாக்களித்திருக்கிறேன். நான் கொடுக்கும் சிறிய தொகை அவருக்கு தேவையில்லை. அதை அவர் எதிர்ப்பார்ப்பவரும் அல்ல. இருப்பினும் நல்ல முயற்சிக்கு என்னால் இயன்ற ஒரு துளி அர்பணிப்பு.
இவரிடம் பேசிய பிறகு, நான் ஒரு பெரிய ரஜினி ரசிகன், அவருக்காக ஏதோ பெரிதாக செய்துகொண்டிருக்கிறேன் என்று என்னுள் - ஒரு ஓரமாக - சிறிதளவு - இருந்த ஆணவம் சுத்தமாக போயே போய்விட்டது. இவரது சேவைகளுடன் ஒப்பிடும்போது என் பணி ஒரு கால் தூசு என்று புரிந்தது.
“உங்களையும் உங்கள் குடும்பத்தையும் முதலில் நன்றாக கவனித்துகொள்ளுங்கள். அதைத் தான் ரஜினியும் விரும்புவார்” என்று கூறி விடைபெற்றேன்.
இந்த உண்மை ரசிகருக்கு தலைவணங்குவோம்.
குறிப்பு: இவருடன் ஒரு விரிவான நேர்காணல், புகைப்படங்களுடன் விரைவில் நமது வலைத்தளத்தில் வர இருக்கிறது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...