ரஜினிகாந்த் நடித்த `சிவாஜி' படம், இந்தியில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இதற்காக, சில காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டு, மேலும் 3 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. அதில், ரஜினிகாந்த் கலந்துகொண்டு நடிக்கிறார். ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் டைரக்ஷனில், ஏவி.எம். நிறுவனம் தயாரித்த `சிவாஜி' படம், கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி திரைக்கு வந்தது. சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் 75 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிட பட அதிபர்கள் ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன் ஆகிய இருவரும் முடிவு செய்து இருக்கிறார்கள். இதுபற்றி ஏவி.எம்.நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாபு கூறியதாவது:- சிவாஜி படம் தென்னிந்தியாவைப் போலவே வட இந்தியாவில் மும்பை, டெல்லி போன்ற பெரிய நகரங்களில் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து, இந்த படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிட, ஏவி.எம். நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. இந்தி பதிப்புக்காக, படத்தின் சில காட்சிகள் மாற்றி அமைக்கப்படுகின்றன. இதற்காக, மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. அதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு மூன்று அல்லது நான்கு நாட்கள் நடிப்பார். இந்தி படமாக இருந்தாலும், தனக்காக வேறு ஒருவர் குரல் கொடுப்பதை ரஜினிகாந்த் விரும்ப மாட்டார். எனவே அவரே இந்தியில், `டப்பிங்' பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான இந்தி படங்கள் இரண்டரை மணி நேரம்தான் ஓடும். `சிவாஜி' மூன்று மணி நேர படமாக இருக்கிறது. எனவே படத்தின் நீளத்தை குறைத்து, இரண்டரை மணி நேர படமாக மாற்ற தீர்மானித்து இருக்கிறோம். இந்தி பதிப்புக்கான வசனத்தை ஸ்வானந்த் கிர்கிரே எழுதி வருகிறார். அக்டோபர் மாதத்துக்குள் அவர் வசனத்தை எழுதி முடித்து விடுவார். தீபாவளி கழித்து, இந்தி மொழிமாற்ற படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம். ஒரு மொழிமாற்ற படத்தை பண்டிகை சமயத்தில் திரையிடுவதை நாங்கள் விரும்பவில்லை.'' இவ்வாறு பாபு கூறினார்.
No comments:
Post a Comment