காசி யாத்திரை
'இருப்பா, மணி நாலு ஆகட்டும்...' என்றபடி அந்த டீ ஷர்ட் ஆசாமி கடந்து போனார். கூட இருந்தவரில் ஒருவர் மணி பார்த்தார். இன்னொருவர் நகம் கடித்தார். மூட்டை நிறைய தேங்காய். கட்டுக்கட்டாக சூடம். ஒரு பிளாஸ்டிக் குடத்தில் பால். எல்லாம் ரெடி! ஸ்டார்ட் மியூஜிக்! கேட்டை திறந்து முதல் மாடி ஏறி, போர்டிகோவில் தவழ்ந்து கட்அவுட்டில் ஏறி உச்சத்தில் நின்று இருவர் குரல் கொடுக்க, ஆரம்பமானது திருவிழா...தலைவ்வ்வ்வா!
விடிய விடிய தூங்கவில்லை. துபாய், கத்தார், லண்டன், சிங்கப்பூர், மலேஷியா என வெவ்வேறு இடங்களிலிருந்து வந்த அழைப்புகள், குறுஞ்செய்திகள். நடுவே டிக்கெட் கேட்டு விசாரணைகள். அவசர அவசரமாக குளித்து முடித்து, பிருந்தாவன் நகர் பிள்ளையாருக்கும் ஒரு சலாமிட்டு காசிக்கு வந்து சேரும்போது மணி அதிகாலை மூன்றரை. அதற்குள் அங்கே 200 பேர் குழுமியிருந்தார்கள்.
ஏகப்பட்ட காமிரா. எல்லோரையும் விழுங்கிக்கொண்டிருந்தது. வியர்க்க விறுக்க விறுக்க துப்பட்டாவை இறுக்கிக் கட்டிவிட்டு கூட்டத்திற்குள் புகுந்து மைக்கை நீட்டினார் அந்த டெல்லி சேனலின் இளம் தொகுப்பாளினி. விடிய விடிய தியேட்டர் ரவுண்ட்ஸ் அப்பில் களைத்துப் போயிருந்தார். பளிச் பட்டையும், அதை விட பளிச்சென்று இருந்த ரஜினி உருவம் பொறித்த சந்திரமுகி காலத்து வெள்ளை டீ ஷர்ட்டும் அவரது பார்வையை என் பக்கம் திருப்பியது. சட்டென்று கீழே குனிந்து நகர்ந்து கொண்டேன். வாட் டூ யூ திங்க் அபெவுட் சூப்பர் ஸ்டார் என்று பக்கத்தில் இருந்த ஆசாமியிடம் சம்பாஷனையை ஆரம்பித்தார்.
சிவகாசி சமாச்சாரம் புகையை கிளப்பியது. கல்கி ஆபிஸ் வரை நீண்டிருந்த போக்குவரத்தில் தூக்கமில்லாத கண்களுடன் கண்டக்டர்கள் பஸ்ஸிலிருந்து எட்டிப்பார்த்தார்கள். காவலுக்கு வந்த போலீஸ், டிராபிக் போலீஸாக மாறி நிலைமையை கஷ்டப்பட்டு சமாளித்தது. பய பக்தியுடன் சூடம் காட்டி, தேங்காய் உடைத்து, டெல்லி சானல்களுக்கு முகம் காட்டி ஆராவரத்துடன் உள்ளே வந்தாகிவிட்டது.
வெறும் நல்வரவு ஸ்லைடுக்கே நாலா பக்கமும் கூச்சல். சாட்டிலைட் மூலமாக (?) படம் திரையிடப்படுவதால் ஒன்ஸ்மோர் கிடையாது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று ஒரு ஸ்லைடு காண்பித்தார்கள். 'அடச்சே, நோ ரிப்பீட்டாம்' என்று பக்கத்திலிருந்தவர் நச்சென்று மொழிபெயர்த்தார். சென்ஸார் சர்ட்டிபிகேட் போட்டதும் பின்னாலிருந்து நிறைய பேர் ஓடி வந்து முன்னால் நின்று கொண்டார்கள்.
முன்னால் இரண்டு வரிசை இருந்தாலும் ஏகப்பட்ட தலைகள் தென்பட்டன. வேறு வழியே இல்லை. சீட்டின் மீது ஏறி நின்று கொண்டேன். உற்சாக குரல்கள் காதை கிழித்தன. S... U..... P.... எழுத்துக்கள் வர ஆரம்பிக்க இதயம் எக்குத்தப்பாக எகிற ஆரம்பித்தது.
இடைவேளையில் வெளியே வந்தோம். பொழுது புலர ஆரம்பித்திருந்தது. தியேட்டர் வாசலில் உற்சாகக்குரல்கள் அவ்வப்போது எழுந்து அடங்கிக்கொண்டிருந்தன. மெல்ல நகர்ந்து பால்கனி பக்கம் வந்து நின்றோம். சிவப்பு டிஷர்ட்டில் வியர்வையை துடைத்தபடியே பிரம்ஜி அமரன் இறங்கிவந்தார். கூடவே தாடி சகிதம் ஈரம் படத்து ஹீரோ.
சிம்பு வந்திருப்பதாக யாரோ சொன்னார்கள். டிவி சீரியல் லதா ராவ் கணவருடன் வந்திருந்தார். பெயர் தெரியாத, டிவியில் பார்த்த இன்னும் சில முகங்களும் கண்ணில் தட்டுப்பட்டன. ஆர்குட் ரஜினி ரசிகர்கள் குழுமம், சைதை பகுதி ரசிகர் மன்ற நண்பர்களையும் பார்க்க முடிந்தது.
படம் முடிந்ததும் பின்வரிசையில் இருந்தவர்கள் எழுந்து நின்று கை தட்டினார்கள். நானும் கைதட்டினேன். ஹாலை விட்டு வெளியே வரும்போது மணி சரியாக எட்டு. எந்த உணர்ச்சியும் இல்லாமல் மௌனமாக நடந்து வந்துகொண்டிருந்தோம். சட்டென்று ஏரியாவே பரபரப்பானது. உதவியாளர் சகிதம் விறுவிறுவென்று பல்கனி படிகளில் இறங்கி வந்துகொண்டிருந்தார் டைரக்டர் ஷங்கர்!
விசில் சத்தம் அந்த ஏரியாவையே உலுக்கியது. பார்க்கிங் வரை போனவர்களெல்லாம் திரும்பி ஓடி வந்தார்கள். எங்கும் உற்சாகக்குரல்கள். அப்படியே சுற்றிவளைத்து ஷங்கரை கட்டிப்பிடித்துக்கொண்டார்கள். நானும் ஒரு காங்கிராட்ஸ் சொல்ல முன்னேறி வந்தேன். முடியவில்லை. மயிலாடுதுறை ஸ்டேஷன், சாரங்கபாணி மேம்பாலம், தண்ணீர்குன்னம், கும்பகோணம் கச்சேரி ஏதோதோ ஞாபகம் வந்தன. அப்போதைய ஷங்கர் இன்னும் கண்ணுக்குள் இருக்கிறார். இன்றைய ஷங்கர் எங்கேயோ போய்விட்டார்!
பழைய நினைவுகளில் இருந்து வெளியே வந்து, பைக்கை நகர்த்தினேன். it's an experience என்று சொன்னதன் அர்த்தம் இப்போது புரிந்தது. யாரிடமும் எதுவும் சொல்லத் தோன்றவில்லை. அரைமணி நேர மௌனத்திற்கு பின்னர் நெருங்கிய எழுத்தாளர் கம் ரசிகர் நண்பரிடம் கருத்துக்கேட்கலாம் என்று செல்பேசியில் அழைத்தேன். ஷங்கரும் வந்திருந்ததைச் சொன்னேன். 'யோவ், ரசிகன்னா அவன் ரசிக்ன்யா...ஒவ்வொரு ரஜினி ரசிகனும் அவன் கால்ல விழலாம்.. தப்பேயில்லை' என்றார் திருநெவேலி பாஷையில்.
ஜெ. ராம்கி
Endhiran Experience : காசி யாத்திரை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment