அனைத்து மொழிகளிலும் பிளாக்பஸ்டர் என அறிவிக்கப்பட்ட முதல் இந்தியப் படம், எந்திரன்!

ந்திய திரையுலகம் காணாத பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் – தி ரோபோ.

ஒரே நேரத்தில் உலகம் முழுக்க தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான இந்தப் படம், முதல் நாளே ப்ளாக்பஸ்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரையுலக சரித்திரத்தில் இதுவரை எந்தப் படமும் செய்யாத சாதனை இது.

வட இந்தியாவில் ஹரியானா மாநிலம் குர்காவ்ன் தொடங்கி, தென் பகுதியான குமரிமுனை வரை திரையிட்ட அத்தனை மாநிலங்களிலும் எந்திரன் பட வசூல் மிரள வைத்துள்ளது. முதல் நாள் முதல் காட்சி என்பது பொதுவாக காலை 10 மணிக்குதான் தொடங்கும். ஆனால் ரஜினியின் இந்தப் படத்துக்கு அதிகாலை 1 மணிக்கே தொடங்கிவிட்டது முதல்நாள் முதல் காட்சி. வில்லிவாக்கம் ஏஜிஎஸ், கானாத்தூர் மாயாஜால், டெல்லி பிவிஆர் உள்ளிட்ட சில திரையரங்குகள் தொடர்ந்து 24 மணிநேரம் காட்சிகளை திரையிட்டது இதுவரை கேட்டும் பார்த்துமிராத அதிசயம்.

இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, முதல் நாள் முடிவில் எந்திரன் படத்தின் உலகளாவிய வசூல் ரூ 205 கோடி (படத்தின் பட்ஜெட் ரூ 162 கோடி)!

தெலுங்கில் ரோபோ வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாக படம் குறித்து மோசமான செய்திகளைப் பரப்பியது ஒரு தெலுங்கு இணையதளம். ஆனால் என்ன அதிசயம் பாருங்கள்… அடுத்த 2 மணி நேரத்துக்குள் அந்த செய்தியை அவர்கள் நீக்க வேண்டிய கட்டாயம் வந்தது. நேற்று அதே இணையதளம், ‘Robo’ Mania Rocking the World!!! என்ற தலைப்பில் ஒரு செய்தியையும்,

“Robo’ Review: A Right Movie For All Human Beings” – ரோபோ சூப்பர் ஹிட் என்றும், கட்டாயம் பார்த்தே தீர வேண்டிய படம் என்றும் பெரிய விமர்சனத்தையும் எழுதியது.

அதுதான் ரஜினி மேஜிக்!

ரூ 33 கோடிக்கு விற்கப்பட்ட ரோபோ, ஆந்திரப் பிரதேசமெங்கும் 700 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தனைக்கும் ரோபோ ஒரு நேரடி தெலுங்குப் படமல்ல. டப்பிங்தான். தெலுங்கில் நேரடியாகத் தயாரிக்கப்பட்ட ஒரு படத்துக்குக் கூட இந்த விலை கொடுக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான். இந்தப் படம் வெளியாவதையொட்டி, வேறு புதிய படங்களே வெளியாகமாமல் பார்த்துக் கொண்டனர் ஆந்திர விநியோகஸ்தர்கள்.

ஆந்திராவின் தென் பகுதி மற்றும் கடலோர மாவட்டங்களில் மட்டுமல்ல, வட ஆந்திரத்திலும் வெளியாகியுள்ள ரோபோ பெரும் வசூல் சாதனைப் படைத்துள்ளது.

படம் வெளியான முதல் தினமே ‘ரோபோ சூப்பர் ஹிட்’ என்று தலைப்பிட்டு செய்திகள் வெளியிட்டுவிட்டன தெலுங்குப் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள்.


ஹைதராபாத் -1

5-க்கு 4.5 ஸ்டார்கள் கொடுத்து இந்தப் படத்தை புகழ்ந்துள்ளன தெலுங்கு இணையதளங்கள். பிரபல இணைய தளமான தெலுங்குசினிமா.காம், “Rajnikanth is simply superb and the audiences have to admit that if not for Rajni, the theatres would be vacant. His composure, diction, style, each and every department that treated him is excellent. Undoubtedly, the Rajni as Robot is going to be immortal for the next several generations…” என்று குறிப்பிட்டுள்ளது.

ஹைதராபாத் நகரில் உள்ள அனைத்து ஒற்றைத் திரை அரங்குகளிலும் (Single screen theaters), 10-ம் தேதிக்குப் பிறகுதான் டிக்கெட்டுகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மல்டிப்ளெக்ஸ்களில் 7-ம் தேதி வரை டிக்கெட் இல்லை!

தெலுங்கு சினிமா பாக்ஸ் ஆபீஸில் புதிய சரித்திரம் படைத்துள்ளது ரஜினியின் ரோபோ என்பதே ஒருமித்த கருத்தாக மீடியாவில் எதிரொலிக்கிறது. படத்தை வாங்கிய சுரேந்திரா கூறுகையில், “மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சூப்பர் ஸ்டாரை நாங்கள் முழுமையாக நம்பினோம். அவருடன் ஷங்கர், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய் போன்ற அருமையான கலைஞர்கள் கூட்டு சேர்ந்தது படத்தை எங்கோ சிகரத்துக்குக் கொண்டுபோய் விட்டது. தெலுங்கு சினிமாவில் இந்த சாதனையை இப்போதைக்கு யாராலும் மிஞ்ச முடியாது. மீண்டும் ரஜினி படம் வந்தால்தான் உண்டு” என்கிறார்.

ஹைதராபாத் -2

தென்னிந்தியாவில் கேரளாவில் 128 திரையரங்குகளில் எந்திரன் வெளியாகியுள்ளது. மம்முட்டி, மோகன்லால் படங்கள் கூட 100 திரையரங்குகளைத் தொட்டதில்லை. அனைத்து திரையரங்குகளிலும் 100 சதவீத ரசிகர்களுடன் முதல்நாள் காட்சிகள் களைகட்டின. கேரளாவின் எந்த பெரிய நடிகர் படமும் முதல் நாளில் அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடியதில்லை.

கர்நாடகாவிலும் பெங்களூரிலும் பட்டையைக் கிளப்புகிறது படம். அங்குள்ள கட்டுப்பாடுகள் காரணமாக அதிக திரையரங்குகளில் வெளியிட முடியவில்லையே என்ற ஒரு குறைதான்!

இந்தியில் என்ன நிலை?

வட இந்தியாவில் மொத்தம் 1000 திரையரங்குகளில் ரோபோ வெளியாகி உள்ளது. ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்காளம், அஸாம் போன்ற மிகவும் உள்ளார்ந்த மாநிலங்களில் கூட ரோபோவை வெளியிட்டுள்ளனர். பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் ரோபோ மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

மும்பையில் எந்திரன் மற்றும் ரோபோ இரண்டுமே வெளியாகின. மும்பை அரோரா திரையரங்கம் ரோபோவுக்காகவே புதுப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் உதயம், காசி திரையரங்குகளில் எப்படி ரசிகர்கள் முதல்நாள் முதல் காட்சியை பாலாபிஷேகம், கற்பூர ஆரத்தி, பட்டாசு வெடி முழக்கத்துடன் கொண்டாடுவார்களோ, அதே நிலைதான் அரோரா முன்பும். படப்பெட்டியை கோயிலில் வைத்து பூஜை செய்து, ரதத்தில் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். இதை வீடியோவாக்க குவிந்துவிட்டன வட இந்திய சானல்கள்.

மல்டிப்ளெக்ஸ்களில் முதன்மையான நேரங்களிலேயே ரோபோ திரையிடப்பட்டது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட்டுக்காக தவம் கிடந்தனர்.

ரோபோவுக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து மும்பை விநியோகஸ்தர் ஷியாம் ஷராப், “ரஜினியின் ரோபோ நிச்சயம் அதன் தயாரிப்புச் செலவை விட இருமடங்கு வசூலை அள்ளும். ரஜினி இந்திய சினிமாவின் அடையாளமாகிவிட்டார்”, என்றார்.

புனே:

ஃபன் சினிமாஸின் அனுப் மெஹ்ரா கூறுகையில், “ரஜினியின் சிவாஜி ரூ 200 கோடிக்கு மேல் குவித்தது. அந்தப் படம் இத்தனைக்கும் டப் செய்யப்படவில்லை. நேரடி தமிழ்ப் படம். ஆனால் சிவாஜியை விட பல வகையிலும் மேம்பட்ட சர்வதேச படமாக வந்துள்ளது எந்திரன். நிச்சயம் இன்னும் அதிக வசூலைக் குவிக்கும். வருகிற நாட்களில் எந்திரனின் இந்திப் பதிப்பு ரோபோ இன்னும் அதிக வசூலைக் குவிக்கும்,” என்கிறார்.

கொண்டாடும் வட இந்திய மீடியா

பொதுவாக தென்னிந்தியப் படங்களை அதிகமாக உற்சாகப்படுத்தாத மனநிலையில்தான் வட இந்திய மீடியா உலகம் இருந்து வருகிறது. ஆனால் இதனை உடைத்து நொறுக்கிய ஒரே ஸ்டார், நம்ம சூப்பர் ஸ்டார் மட்டுமே.

கமல் ஹாஸன், மம்முட்டி, நாகார்ஜூன், சிரஞ்சீவி உள்பட எத்தனையோ தென்னிந்திய நடிகர்கள் இந்தியில் முட்டி மோதிப் பார்த்து முடியாமல் தங்கள் மாநிலங்களுக்குள் நின்றுவிட்டனர். ஆனால் தொடர்ந்து பல இந்திப் படங்களில், அதுவும் வெள்ளி விழாப் படங்களில் நடித்த ரஜினி, ஒரு கட்டத்தில் இந்திப் படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். ஆனால் அவரது தமிழ்ப் படங்களையே முழுமையாக ரசிக்க ஆரம்பித்துவிட்டனர் வட மாநிலத்தவர்கள்.

மும்பையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட திரையரங்குகளில் ரோபோவும் 30க்கும் அதிகமான திரையரங்குகளில் எந்திரனும் வெளியாகியுள்ளன. டெல்லியில் 70க்கும் அதிகமான திரையரங்குகளில் ரோபோவும் எந்திரனும் வெளியாகி சாதனை படைத்துள்ளன. (காண்க – திரையரங்குகள் விவரம் – படங்களை க்ளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கவும்).

ரஜினி பற்றிய செய்திகள் எதுவாக இருந்தாலும், முதன்மை இடம் தருகின்றன மீடியாக்கள். ரோபோ வெளியாவதற்கு முன்பிருந்தே ‘கவுன்ட் டவுன்’ என்ற தலைப்பில் தொடர்ந்து சிறப்புத் தகவல்களை வெளியிட்டன சானல்கள்.

பெங்களூரில்...

என்டிடிவி, சிஎன்என், ஹெட்லைன்ஸ் டுடே, நியூஸ், ஏஎன்ஐ, டைம்ஸ் நவ் உள்ளிட்ட சானல்கள் போட்டி போட்டுக் கொண்டு ரோபோ சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின. இந்த சானல்களின் எடிட்டர்களே மும்பை மற்றும் டெல்லியிலிருந்து சென்னை உள்ளிட்ட பல நகரங்களுக்கு நேரடி விசிட் அடித்து எந்திரன் / ரோபோ முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டங்களைப் படம் பிடித்து ஒளிபரப்பியது, இதுவரை எந்த பட வெளியீட்டிலும் நிகழாத ஒன்று.

நாட்டின் முக்கிய ஆங்கிலப் பத்திரிகைகள் எல்லாம் வடக்கில்தான் அச்சாகின்றன. இவற்றுக்கு தென் மாநிலங்களில் அலுவலகங்கள் / பதிப்புகள் இருந்தாலும், ரோபோ தொடர்பான செய்திகளை தேசிய அளவிலான பகுதிகளில் வெளியிட்டு முக்கியத்துவம் தந்தன.

பிஸினஸ் ஸ்டான்டார்டு நாளிதழ், “அடுத்த சில தினங்களில் எந்திரன் வசூல் ரூ 450 முதல் 500 கோடியைத் தாண்டிவிடும்” என்று கூறியுள்ளது.


மும்பையில்

நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் இந்தி நாளிதழான தைனிக் ஜாக்ரன், “ரஜினியின் ரோபோ ரோமாஞ்சனத்தை உண்டாக்கும் அனுபவத்தைத் தருகிறது (रजनीकांत की रोबोट सिनेमा देखने का रोमांचकारी अनुभव देती है।). இது ஒரு ரஜினி திருவிழா மாதிரி உள்ளது. பார்க்கும் ஒவ்வொருவரும் புதிய உற்சாகம் பெறுவதைப் பார்க்க முடிகிறது. ஜபர்தஸ்த் என்டர்டெயின்மெண்ட்” என்று புகழ்ந்துள்ளதுடன், இந்தப்படம் இந்திய திரை வரலாற்றில் முக்கிய மைல்கல் என்றும் குறிப்பிட்டுள்ளது. தைனிக் பாஸ்கர் உள்ளிட்ட மேலும் சில இந்தி நாளிதழ்களும் ரோபோ வெளியீடு குறித்த செய்தி மற்றும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளன.

இந்தி நாளிதழ்கள் அத்தனை சுலபத்தில் தென்னிந்தியப் படங்களை (‘யே மத்ராஸி பிலிம் ஹை’ என்று ஒதுக்கிவிடுவது வழக்கம்!) அங்கீகரிப்பதில்லை என்பதை நினைவில் கொள்க.

டைட்டானிக், அவதார் போன்ற படங்கள் எப்படி உலகெங்கும் அந்தந்த பிராந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸாகி வசூல் சாதனைப் படைத்தனவோ… அந்த சர்வதேச அந்தஸ்து இப்போது ரஜினி படங்களுக்கும் கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...