இவரல்லவோ ரஜினி ரசிகர்… சூப்பர் ஸ்டாருக்கு பெருமை தேடி தரும் ஒரு வித்தியாசமான ரசிகர்!!


சூப்பர் ஸ்டாரை பெருமைப் படவைக்கும் வகையில் ரசிகர் ஒருவர் செய்துவரும் அறிய செயல் பற்றியது பற்றியது இந்த பதிவு.

ஒரு நல்ல ரஜினி ரசிகருக்கு இலக்கணம் என்ன தெரியுமா? அது பற்றி யாராவது யோசித்திருக்கிறீர்களா?

தலைவர் படத்தை ஒன்றிற்கு மேற்ப்பட்டு பல முறை பார்த்து ரசிப்பவர்களோ, அல்லது அவர் பெயரை தன் பெயருக்கு முன் போட்டுக்கொள்பவர்களோ அல்லது அவர் பெயரை கூறிக்கொண்டு பாலபிஷேகம் செய்பவர்களோ, கற்பூரம் காட்டுபவர்களோ, அல்லது அவரை பழிக்கும் வயித்தெரிச்சல் பேர்வழிகளை வசைபாடுபவர்களோ அல்லது இது போன்று தளம் நடத்துபவர்களோ அல்லது எப்போதும் அவரைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பவர்களோ அல்ல. இவையெல்லாம் ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்பை காட்டுவதில் உள்ள வெவ்வேறு வழிகளாக இருந்தாலும் இத்தகு செயல்களால் ரஜினிக்கு எந்த வித மனநிறைவும் ஏற்படப்போவதில்லை என்பதும் அவருக்கு இவை உண்மையான பெருமையும் கிடையாது என்பதே யதார்த்தம்.

எந்த வித எதிர்பார்ப்புமின்றி சூப்பர் ஸ்டார் மீது அன்பு வைத்து, அந்த அன்பால் தானும், தன் வீடும், இந்த சமுதாயமும் பயன்பெறுமாறு எவன் நடந்துகொள்கிறானோ அவனே உண்மையான ரஜினி ரசிகன். அப்படிப்பட்ட ஒருவனுக்கு தான் “நான் ரஜினி ரசிகன்” என்று கூறி காலரை தூக்கிவிட்டுக்கொள்ளும் தகுதி இருக்கிறது.

அப்படிப்பட்ட ஒருவர் பற்றி தான் நாம் இங்கே பார்க்கப்போகிறோம்.

ஹிந்து நாளிதழில் வெளியான இந்த செய்தியை அப்படியே மொழி பெயர்த்து உங்களுக்காக தருகிறேன்.

————————————————————-
ஏழை எளியோருக்கு இலவச ஹேர் கட்டிங் – ரஜினி ரசிகரின் வியக்கத்தக்க சமூகப் பணி!

ஒரு முடிதிருத்தும் தொழிலாளியின் மெய்சிலிர்க்க வைக்கும் மறுபக்கம்!

சூப்பர் ஸ்டார் மீது அளவற்ற அன்புவைத்திருக்கும் தேவராஜ் என்னும் ரசிகர் ஒருவர், அந்த அன்பை காட்டும் விதமாக ஏழை எளியோருக்கு இலவசமாக ஹேர் கட்டிங் செய்து வருகிறார்.

‘ஜானி’ படத்தில் வரும் ஹேர் ஸ்டைலிஸ்ட் கேரக்டருக்காக சூப்பர் ஸ்டார் ரஜினி கத்திரிக்கோலை பிடித்து நடித்தபோது, தேவராஜை விட சந்தோஷப்பட்டவர்கள் யாரும் இருக்க முடியாது. தொழில் முறையில் முடித்திருத்தும் கலைஞரான தேவராஜுக்கு சூப்பர் ஸ்டாரின் படங்களுள் மிகவும் பிடித்த படமும் அது தான். தேவராஜின் வீட்டிற்குள் நுழைந்தால் அவர் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதற்கு எந்த அடையாளமும் இருக்காது. அதற்க்கு மாறாக நமக்கு வித்தியாசமாக காட்சியளிக்கும் அவரது டூ-வீலர். அதன் சைடு-பாக்ஸில் கையால் வரையப்பட்ட சூப்பர் ஸ்டாரின் அற்புதமான படம் ஒன்று காணப்படுகிறது. தலைவரைப் போலவே, அவர் ரசிகரும் வித்தியாசமானவர் தான் போல. அனைத்திலும்.

Devaraj M இவரல்லவோ ரஜினி ரசிகர்… சூப்பர் ஸ்டாருக்கு பெருமை தேடி தரும் ஒரு வித்தியாசமான ரசிகர்!!

கோவை மாநகர், உப்பிலிப்பாளையத்தில், (தேவராஜ் வசிக்கும்) ஒரு வெள்ளிக்கிழமை மதியம் போக்குவரத்து அடங்கிய பிறகு, மேல் சட்டை கூட இல்லாத – நடைபாதையில் வசிக்கும் – ஒரு முதியவருக்கு தானே முன்வந்து முடி திருத்தம் செய்கிறார் தேவராஜ். குதிகாளிட்டு அந்த முதியவர் இவர் கட்டிங் செய்வதற்கு வாட்டமாக அமர்ந்துகொள்ள, இவர் முடி திருத்தம் செய்து, பின் தாடியை மழித்து, மீசையை ட்ரிம் செய்து விடுகிறார். ஒரு சில நிமிடங்களில் அந்த முதியவர் ஆளே மாறிவிட, நடுங்கும் கைகளால் தேவராஜுக்கு ஒரு சல்யூட் வைத்துவிட்டு அவர் பாட்டுக்கு நடந்து செல்கிறார் – சற்று கம்பீரமாக. தனது சனல் பையுடன்.

தேவராஜ். ஒரு நடமாடும் சலூன்…. ஒரு நல்ல நோக்கத்தின் பொருட்டு! அவரின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வசதியற்றவர்கள். மிகவும் ஏழ்மை நிலையிலிருப்பவர்கள். அவர்களுக்கெல்லாம் ரூபாய் நாற்பதோ ஐம்பதோ கொடுத்து கட்டிங் செய்ய முடியாது. சமுதாயத்தில் நாம் புறக்கணிக்கும், ஒதுக்கும் – பிச்சைக்காரர்கள், இருப்பிடமற்றவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், குடிசையிலும் கூடாரங்களிலும் வசிப்பவர்கள் – இவர்கள் தான் தேவராஜின் முக்கிய கஸ்டமர்கள்.

Rajini Johnny 1980 640x882 இவரல்லவோ ரஜினி ரசிகர்… சூப்பர் ஸ்டாருக்கு பெருமை தேடி தரும் ஒரு வித்தியாசமான ரசிகர்!!

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையும், இவர் சீப்பு மற்றும் கத்திரிக்கோலை தனது வண்டி சைடு பாக்ஸில் வைத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறார். நகரை சுற்றி வரும் இவரது கண்கள், வறுமை மற்றும் நோய் காரணமாக அனாதையாக திரிபவர்களை தேடுகிறது. அப்படி யாராவது இவர் கண்களில் தென்பட்டால் தொடங்கிவிடுகிறது இவர் தொழில். அவர்களுக்கு அழகாக ஹேர்-கட் செய்கிறார். பிறகு தாடி மீசை ட்ரிம் செய்கிறார். எல்லாம் முடிந்து சம்பந்தப்பட்ட நபர் பளிச்சென மாறிய பிறகு, அடுத்த வாடிக்கையாளரை தேடி புறப்படுகிறார். இப்படியே மாலை கதிரவன் சாயும் வரை இவரது பணி தொடர்கிறது. “டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி 1994 ஆம் வருடம் – சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளன்று எனது இந்த பழக்கத்தை துவக்கினேன்” மலரும் நினைவுகளில் மூழ்குகிறார் தேவராஜ்.

“ஆரம்பகாலங்களில் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமையன்று வசதியற்றவர்களின் வீட்டு குழந்தைகளுக்கு இலவசமாக எனது கடையில் முடித்திருத்தம் செய்துவந்தேன். தங்கள் குழந்தைகளுக்கு பணம் செலவு செய்து முடி திருத்தம் செய்யமுடியாத தினக்கூலி வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளை என்னிடம் கட்டிங் செய்ய அழைத்துவருகிறார்கள்.”

டூ-வீலரில் சென்று ஏழை எளியோரை தேடி பிடித்து ஹேர் கட் செய்வதை 2008 ஆம் ஆண்டு முதல் செய்ய ஆரம்பித்தார் தேவராஜ். ஒவ்வொரு வெள்ளியும் அதை அதை விடாமல் செய்துவருகிறார்.

தன் குழந்தைகளை நல்ல விதமாக பட்டணத்தில் படிக்க வைத்துவரும் இந்த உழைப்பாளிக்கு சமுதாயத்திற்கு சேவை செய்வதை தவிர மனதில் வேறு எதுவும் இல்லை. ஆனால் இவர் பணி சில சமயங்களில் அத்துணை சுலபமாக இருக்காது. “என் நோக்கம் புரியாது என்னை சிலர் கிட்டே கூட விடாமல் விரட்டிவிடுவார்கள். (பெரும்பாலும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்). நீண்ட முயற்சிக்கு பின்னரே அவர்களுக்கு என் நோக்கத்தை புரியவைத்து அவர்களுக்கு கட்டிங்கோ, ஷேவிங்கோ செய்ய முடியும்.

கணவரின் இந்த சேவையால் பெருமப்படும் அவரது மனைவி சாந்தி, “ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஒரு வண்டி விசித்திர அனுபவங்களை இவர் சுமந்து வருவார்,” என்று கூறுகிறார்.

“ஒரு முறை ஒரு பிச்சைக்காரருக்கு முடி திருத்தம் செய்தேன். முடித்த பின், நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் என் வண்டியை சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கினார்…” சிரித்துக்கொள்கிறார் தேவராஜ்.

“நான் இது போன்ற கட்டிங்-ஷேவிங் செய்யும் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு வகையில் எனக்கு தங்கள் நன்றியை காண்பிப்பார்கள். சிலர் தலையசைப்பார்கள், சிலர் ஆசி கூறுவது போல கையை காட்டுவார்கள். இன்னும் சிலரோ நான் அந்த இடத்தை சுத்தம் செய்வதற்கு முன்பு அங்கிருந்து காணமல் போய்விடுவார்கள்.

“ரஜினி சார் ஒரு மிகப் பெரிய நடிகர். நான் அவரை பின்பற்ற விரும்புகிறேன். அவரது படங்கள் பெரும்பாலும் ஒரு நல்ல கருத்தை சமுதாயத்திற்கு பதிவு செய்யும். அவர் தன் பங்கிற்கு செய்யும் நல்ல பணி அது. என் பங்கிற்கு நான் செய்யும் நல்ல பணி இது. நான் என் வாழ்நாள் முழுதும் ஒரு பார்பர் தான். எனக்கு நன்றாக தெரிந்த தொழில் அது ஒன்று தான். அதை சிறப்பாக செய்ய ஆசைப்படுகிறேன். அந்த கலையை சிறந்த முறையில் பயன்படுத்த ஆசைப்படுகிறேன்.” ஒரு நிஜ ஹீரோ உதிர்க்கும் வார்த்தைகளை உதிர்க்கிறார் தேவராஜ்.

- தி ஹிந்து

————————————————————-
இவரைப் பற்றி கேள்விப்பட்டவுடன் எனக்குள் – ஒரு ஓரமாக – மிக மெலிதாக – இருந்த, ‘நான் ஒரு நல்ல ரஜினி ரசிகர்பா’ என்ற கர்வம் காணாமலே போய்விட்டது. தேவராஜை நினைத்து ஒரு கணம் வெட்கி தலைகுனிந்தேன். இவரல்லவோ ரசிகர்…. தலைவர் மீது இவர் காட்டுவதுதானே நிபந்தனையற்ற அன்பு. தேவராஜ் போன்ற ரசிகர்களால் தான் உண்மையில் சூப்பர் ஸ்டாருக்கு பெருமை.

சூப்பர் ஸ்டார் ஒருவருக்கு தான் இது போன்ற ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அவர் பெற்ற வரங்களுள் ஒன்று.

தேவராஜ் இன்னும் சூப்பர் ஸ்டாரை நேரில் கூட சந்திக்கவில்லை என்பதும் அவருடன் போட்டோ கூட எடுத்துக்கொண்டவரில்லை என்பதும் இவர் முழு கதையை கேட்டவுடன் புரிகிறது. (ஆனால் இவருக்கு தானே அதற்க்கான முழு தகுதி இருக்கு?).

தேவராஜ் போன்ற ரசிகர்களை தலைவர் நிச்சயம் பாராட்டுவார், ஊக்குவிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில், எத்தனையோ சவால்களுக்கு மத்தியில் சூப்பர் ஸ்டார் இன்னும் சிகரத்தின் மீது சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது இவர் போன்ற ரசிகர்களால் தானே…!

கண்டிப்பா தலைவர் உங்களை சீக்கிரம் பார்ப்பார். வாழ்த்துக்கள் தேவராஜ் அவர்களே…

இப்படி ஒரு பதிவை நம் தளத்தில் வெளியிட வாய்ப்பு கிடைத்ததை நமக்கு பெருமையாக கருதுகிறோம். இதுவரை நாம் வெளியிட்ட பதிவுகளுள் சிறந்த பதிவுகளுள் ஒன்றாக இதை கருதுகிறோம்.

————————————————————
குறிப்பு: ‘ட்ரிங்க்ஸ் பார்ட்டிக்கு வந்த மாணவர்கள்; புத்திமதி கூறிய வி.வி.வி.ஐ.பி.’ பதிவில், தலைவரின் பட பாடல் வீடியோ ஒன்று மிக பொருத்தமாக சேர்க்கப்பட்டுள்ளது. தயவு செய்து அந்த பதிவை மற்றுமொரு முறை பார்க்கவும். நன்றி.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...