1) ஹோம் வீடியோவில் ரோபோ வந்தாச்சு!
இனி நினைக்கும்போது நம்ம வீட்டிலேயே சிட்டியின் அட்டகாசங்களை சட்டப்படி பார்த்து ரசிக்கலாம். ஆம்… சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஹிட் படமான ரோபோ (ஹிந்தி பதிப்பு) தற்போது ஹோம் வீடியோவில் ரிலையன்ஸ் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது. டி.வி.டி. மற்றும் வீ.சி.டி. ஆகிய இரு வடிவங்களில் ரிலையன்ஸ் இதை வெளியிட்டுள்ளது. (நேற்றைக்கு சோனி டி.வியில். ரோபோ ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது)
முன்னதாக அக்டோபர் மாதம் வெளியான ரோபோ பல விமர்சகர்கள் மற்றும் திரையுலக பார்வையாளர்களின் பாராட்டுக்களை வாரி குவித்தது குறிப்பிடத்தக்கது.
BollywoodHungama.com இன் தரன் ஆதர்ஷ் கூறியதாவது : “ரோபோ ஒரு வெகு-ஜன ஈர்ப்பு படம். கணிப்பொறி புரட்சியை மையமாக வைத்து, அதற்க்கு க்ரிப்பிங்கான ஒரு திரைக்கதை அமைத்து, அருமையனா ஆக்க்ஷன் பேக்கேஜிங் செய்து, முக்கியமாக அதில் ஆத்மாவாக ரஜினியை நடுவில் வைத்து, மக்களின் மனதை கொள்ளையடித்த படம். பொழுதுபோக்கு சித்திரங்களின் பிதா எந்திரன் என்றால் மிகையாகாது. இதை பார்க்காது போனால், தவறு உங்கள் மீது தான்.
NDTV யின் அனுபமா சோப்ரா கூறியதாவது : ரோபோவை முழுக்க முழுக்க ரஜினியே தன் தோள் மீது தூக்கி சுமந்திருக்கிறார். ஒரு இடத்தில் கூட அந்த சுமையை அவர் கீழே இறக்கி வைக்கவில்லை. அட்டகாசமான காஸ்ட்யூம்கள், அசத்தலான மேக்கப், மற்றும் ச்பெஷக் எபக்ட்ஸ் இவற்றால் சிட்டியை பார்ப்பது ஒரு உன்னத அனுபவம்.
DNA INDIA வின் அனிருத்தா குஹா கூறியதாவது : மயிர் கூச்செறிய வைக்கும் அந்த சிரிப்பு, மேக்கப்புக்கு பின்னே ஒளிந்திருக்கும் அந்த குரூரம், இவையெல்லாம் உங்களை ஒரு கணம் மூச்சற்று போகச் செய்கின்றன. இது ஒரு ரஜினி திருவிழா. இதை தவற விடக்கூடாது.
Reliance Home Video’s CEO ஸ்வேதா அக்னிஹோத்ரி கூறியதாவது : ரோபோவின் மூலம் இதுவரை எந்த ஒரு இயக்குனரும் செய்திராத சாதனையை ஷங்கர் செய்திருக்கிறார். ஒரு அற்புதமான பொழுதுபோக்கு சித்திரத்தில் ரஜினி அபாரமாக நடித்திருக்கிறார். உங்கள் டி.வி.டி. கலெக் ஷன் களில் நிச்சயம் இருக்கவேண்டிய படம் இது.
டி.வி.டி. விலை ரூ.299/- & வீ.சி.டி. ரூ.99/-
(இதிலும் தலைவர் சாதனை படைப்பார்!)
2) ரஜினியை ஆட்டுவிக்க மனசிருக்கு; ஆனா மார்க்கமில்லை – இது வைபவி மெர்ச்சன்ட்டின் சோகக் கதை !
பாலிவுட்டின் பேமஸ் கோரியோக்ராபர் (நடன இயக்குனர்) — வைபவி மெர்ச்சன்ட். இவர் ஆட்டுவிக்காத ஹிந்தி கலைஞர்களே இல்லையெனலாம். அந்தளவு மும்பையில் இவர் கொடி பறக்கிறது.
இவரது பூர்வீகம் சென்னை தான் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ஃபராஹ் கான், ஹ்ரித்திக் ரோஷன், ரெமோ டிசோசா (எந்திரன்), ஆகியோருடன் நடுவராக பங்குபெறும் ஒரு ரியாலிட்டி டான்ஸ் ஷோவுக்காக சமீபத்தில் சென்னை வந்திருந்த வைபவி, செய்தியாளர்களிடம் பேசினார்.
“எனது சிறு வயதில், ஆழ்வார்பேட்டையில் உள்ள எனது தாத்தா பாட்டி வீட்டுக்கு வருவேன். அப்போது ‘அஞ்சலி’ உள்ளிட்ட தமிழ் சினிமாக்களை பார்ப்பதுண்டு. தமிழ் சினிமா மீது எனக்கிருந்த பற்றுக்கு முக்கிய காரணம் “சூப்பர் ஸ்டார் ரஜினி” தான்.
“இன்றில்லை என்றாலும், என்றாவது ஒரு நாள் ரஜினி சாருக்கு நான் கோரியோ கிராப் செய்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று கூறும் வைபவிக்கு, நேரமில்லாத காரணத்தால் பாஷா, எந்திரன் உள்ளிட்ட படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கை நழுவிட்டதாக தெரிகிறது. ரஜினி தவிர, இங்கு சூர்யாவும், த்ரிஷாவும் வைபவுக்கு மிகவும் பிடித்த நட்சத்திரங்களாம்.
(ராணாவுக்கு வொர்க் பண்ணுங்க மேடம். இறுதி வாய்ப்பு அது தான்! )
3) ராதிகாவுக்கு ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ்!
தமிழ் சினிமாவில், கதாநாயகிகளுக்கு SHELF-LIFE மிகவும் குறைவு. இப்போதெல்லாம் அதிகபட்சம் ஒரு கதாநாயகி ஐந்து அல்லது ஆறு வருடங்கள் தாக்கு பிடிப்பதே பெரும்பாடு. அப்படியிருக்கும் போது, கதாநாயகர்களுக்கு இணையாக தமிழ் சினிமாவில் வேரூன்றி இருப்பவர் ராதிகா. கிட்டத்தட்ட 33 ஆண்டுகள்.
ராதிகாவின் நெருங்கிய திரைத்துறை நண்பர்கள் இதை கொண்டாடும் விதமாக அவருக்கே தெரியாது ஒரு சர்ப்ரைசாக ராதிகாவின் பிறந்தநாள் + அவர் திரையுலகிற்கு வந்து 33 ஆண்டுகள் நிறைவு இரண்டையும் சேர்த்து ஒரு கொண்டாட்டமாக ஏற்பாடு செய்திருந்தனர். ராதிகாவின் திரையுலக நண்பர்கள், மற்றும் உடன் நடித்த நடிகர்கள் என அனைவரும் இதில் கலந்துகொண்டனர். ராதிகாவின் பழைய புகைப்படங்களின் எக்சிபிஷன் மற்றும் கார்ட்டூன் ஷோ என இன்னும் பல பல ருசிகரங்கள் இதில் இருந்தன.
நிகழ்ச்சியின் ஹைலைட்டாக ரஜினி வந்தார். வந்தவர், அப்படியே ராதிகாவை கட்டிபிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த ராதிகா உட்பட அனைவரும் ஒரு கணம் நெகிழ்ந்து விட்டனர். அதே ஸ்டைல். அதே பாசம். கமலும் வந்திருந்தது கூடுதல் சிறப்பு.
வந்திருந்தவர்கள் எல்லோரும் வாழ்த்தி பேச, “ராதிகா மிகச் சிறந்த நடிகை. அவரோட ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னணியில் அவரோட உழைப்பும் அவர் கணவர் சரத்குமாரோட அரவணைப்பும் இருக்கு” என்று பிரபு பேசும்போது சூப்பர் ஸ்டார் கைத்தட்டி கொண்டேயிருந்தார். ராதிகா சொல்லி சொல்லி சந்தோஷப்படுகிறார். வாழ்த்துக்கள் மேடம்.
(தலைவர் தன் நலம் விரும்பிகளை என்றைக்குமே மறக்கமாட்டார்!)
4) ஜப்பான் மக்களுக்கு ரஜினி உதவி?
சமீபத்தில் ஜப்பானை புரட்டிப் போட்டுள்ள சுனாமி மற்றும் இயற்கை பேரழிவு குறித்து வருந்தாத இந்தியர்களே இல்லை எனலாம். அதுவும் குறிப்பாக ரஜினி ரசிகர்கள் சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். உழைப்புக்கும் ஒழுக்கத்துக்கும் பெயர் பெற்ற ஜப்பானில் இப்படி ஒரு கோர தாண்டவத்தை நிகழ்த்த எப்படித் தான் அந்த இயற்க்கைக்கு மனம் வந்ததோ.
இந்நிலையில், ஜப்பான் மக்கள் மீதும் அந்நாட்டின் மீதும் பெருமதிப்பும் பாசமும் வைத்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி, ஜப்பானில் நடந்துள்ள இந்த இயற்கை சீரழிவு குறித்து ஆழ்ந்த வருத்தமும் வேதனையும் கொண்டுள்ளார். சர்வதேச நாடுகளிலிருந்து ஜப்பானுக்கு உதவிகள் குவிந்து வரும் இந்த தருணத்தில், அம்மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை ரஜினி செய்வார் என்றும் அது குறித்து தற்போது அவர் ஆலோசித்து வருகிறார் என்றும் தெலுங்கு இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அது உண்மையே.
விரைவில், ஜப்பான் மக்களுக்கு தன்னால் இயன்ற ஒரு உதவியை சூப்பர் ஸ்டார் ரஜினி அளிக்கூடும்.
(சர்வ ஜன சுகினோ பவந்து!)
5) “நான் ரெடி; ரஜினி ரெடியா?” – சேரன்
அனைத்து இயக்குனர்களுக்கும் ரஜினி-கமல் இருவரையும் இயக்கம் ஆசை இருக்கும். இவர்களை இயக்கினால் தான் திரையுலகிற்கு வந்ததற்கே ஒரு அர்த்தம் இருக்கும் என் கருதும் இயக்குனர்கள் பலர் இருக்கிறார்கள். அதிலும், சூப்பர் ஸ்டாரை இயக்குவது பெரும்பாலான இயக்குனர்களின் முழுமுதர்க் கனவு.
சேரனுக்கு மட்டும் அந்த கனவு இல்லாமல் இருக்குமா?
தனத் தந்தி நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் இது பற்றிய கேள்விக்கு அவர் கூறியிருப்பதாவது :
“அந்த ஆசை இல்லாத எந்த டைரக்டரும் தமிழ் சினிமாவில் இருக்கமுடியாது. என் படத்துக்கான பார்வை வேறு மாதிரி ஆகிவிட்டது. அதில், ரஜினிக்காக வர்த்தக விஷயங்களை சேர்க்க வேண்டும். என் படங்களிலும் பாலா படங்களிலும் ஒரு அழுத்தம் இருக்கும். ஆனால், வர்த்தக ரீதியில் ரூ.30 கோடி அல்லது ரூ.35 கோடி முதலீடு தேவை இருக்காது.
அப்படி ஒரு கதை என்னிடம் இருக்கிறது. அந்தக் கதையில், அவர் நடித்தால் முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல், மாதிரி அவருடைய வாழ்நாள் முழுதும் பேசப்படும் படமாக இருக்கும். அதில் நடித்தால் அவருக்கு நிச்சயம் மிகப் பெரிய பெயர் கிடைக்கும். தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும். அதில் நடிப்பது குறித்து அவர் தான் முடிவு செய்யவேண்டும்.”
(சேரன் அவர்கள் அடிப்படையில் ஒரு நல்ல ரஜினி ரசிகர். இடையில் சிறிது காலம், சேராத சேர்க்கையின் காரணமாக ரஜினி ரசிகர்களின் அதிருப்திக்கு ஆளானார். வேறொன்றுமில்லை.)
[END]
No comments:
Post a Comment