ரஜினியும் சக நடிகைகளும். (B.S- 02)



தனது திரைப்படங்களில் சக்திமிக்க கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு ரஜினி என்றுமே தயங்கியதில்லை, இது அன்றிலிருந்து இன்றுவரை ரஜினி படங்களுக்கு பொருந்தும். இதற்கு பிரியா, தர்மத்தின் தலைவன், ஜானி, பொல்லாதவன், கை கொடுக்கும் கை, நெற்றிக்கண், மன்னன், படையப்பா, சந்திரமுகி போன்ற திரைப்படங்கள் சிறந்த உதாரணம். இதனையே சாக்காக வைத்து ரஜினிமீது அன்புள்ளம் கொண்ட சில நெஞ்கங்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரஜினியின் திரைப்படங்கள் வசூலில் சாதனை படைப்பது அந்தந்த நடிகைகளாலே என்று வெறுவாய் மென்றாலும் அவர்களது மனசாட்சிக்கு உண்மை தெரியாமல் இல்லை.

பல நடிகைகள் ரஜினியுடன் சேர்ந்து நடித்திருந்தாலும் எல்லோரையும் பற்றி அலசுவது கடினம் என்பதால் அவர்களில் முக்கியமான சிலரைப்பற்றிய பார்வைதான் இந்தப்பதிவு.

ஸ்ரீதேவி




'மூன்று முடிச்சு' திரைப்படத்தில் ரஜினியை மிரட்டியிருந்தாலும் ரஜினிக்கு மிகவும் பொருத்தமான திரைஜோடி என்றால் அது ஸ்ரீதேவிதான், ரஜினியின் கருமையும் ஸ்ரீதேவியின் வெண்மையும் சூப்பர் காம்பினேஷன். ஸ்ரீபிரியாவுக்கு அடுத்தபடியாக அதிக திரைப்படங்களில் ரஜினியுடன் நடித்துள்ள ஸ்ரீதேவி ரஜினியின் சமகால போட்டியாளரான கமலஹாசனுடன் அதிக திரைப்படங்களில் ஜோடி சேர்ந்தவர் என்பது கூடுதல் சிறப்பு. ரஜினியும் ஸ்ரீதேவியும் ஒன்றாக பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஜானி, பிரியா இரண்டுமே மறக்க முடியாத திரைப்படங்கள். பிரியா திரைப்படத்தில் ரஜினியின் ஜோடியாக ஸ்ரீதேவி நடிக்காவிட்டாலும் திரைப்படத்தில் இருவருக்குமிடையில் ஏதோ ஒரு பிணைப்பு இறுதிவரை இருக்கும், அதிலும் குறிப்பாக 'ஏய் பாடல் ஒன்று' பாடலில் இருவருக்கும் இருக்கும் வேதியல் (அதாங்க chemistry) மிகவும் நன்றாக இருக்கும்.

'ஜானி' திரைப்படத்தைப்பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை, அதில் ரஜினி ஸ்ரீதேவி ஜோடிப்பொருத்தம் கனகச்சிதமாக பொருந்தியிருக்கும். அசோக்குமாரின் ஒளிப்பதிவில் 'ஜானி' திரைப்படத்தில் ரஜினியையும் ஸ்ரீதேவியையும் அழகாக காட்டியதைபோல வேறெந்த திரைப்படத்திலும் காட்டியதில்லை. அதிலும் குறிப்பிட்டு சொல்வதென்றால் 'என் வானிலே' பாடல் காட்சியை சொல்லலாம். இவை தவிர தர்மயுத்தம், நான் அடிமை இல்லை போன்ற திரைப்படங்களிலும் ரஜினி, ஸ்ரீதேவி ஜோடி சிறப்பாக இருக்கும். நிஜத்திலும் ரஜினி ஸ்ரீதேவியை தனது ஜோடியாக்குவதற்க்கு சம்மதம்வேண்டி ஸ்ரீதேவி வீட்டிற்கு நண்பர்களுடன் போனதாகவும் அங்கு போய் சிறிதுநேரத்தில் மின்சாரம் தடைப்படவே அதை அபசகுணமாக கருதி ஸ்ரீதேவியிடம் போனவிடயத்தை கூறாமல் திரும்பிவிட்டதாகவும் ஒரு பேச்சு உண்டு, ஆனால் இதன் உண்மைத்தன்மை எனக்கு சரியாக தெரியாது.

ஸ்ரீ பிரியா


ரஜினியுடன் அதிக திரைப்படங்களில் ஜோடியாக நடித்த கதாநாயகி, கிட்டத்தட்ட 30 திரைப்படங்கலுக்கு மேல் இவர் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இருவரும் ஜோடிசேர்ந்த திரைப்படங்களில் பில்லா, பொல்லாதவன் இரண்டு படங்களிலும் ஸ்ரீப்ரியா சிறப்பான பங்களிப்பை கொடுத்திருப்பார். பொல்லாதவனில் ரஜினிக்கு சுறுசுறுப்பான 'காதலியாகவும்' பில்லாவில் ரஜினிக்கு விறுவிறுப்பான 'பாதகியாகவும்' சிறப்பாக நடித்திருப்பார். இவைதவிர இளமை ஊஞ்சலாடுகிறது, பைரவி, அன்னை ஓர் ஆலயம், அலாவுதீனும் அற்புதவிளக்கும் போன்ற திரைப்படங்கள் ஸ்ரீபிரியா ரஜினியுடன் நடித்த முக்கியமான திரைப்படங்கள்.

மீனா




ரஜினியுடன் நடித்த நடிகைகளிலேயே மிகவும் விசேடமானவர் என்று மீனாவை சொல்லலாம். பத்துவயது சிறுமியாக 'அன்புள்ள ரஜினிகாந்த்' திரைப்படத்தில் ரஜினியை அங்கிள் என்று அழைத்து கொஞ்சிய மீனா 'எஜமான்' திரைப்படத்தில் மாமா என்று அழைத்து காதல்மொழி பேசினார், அடுத்து எப்போது ரஜினியால் அம்மா என்று அழைக்கப்படப்போகிறார் என்பதுதான் தெரியவில்லை :-) உணமையிலேயே ஸ்ரீதேவிக்கப்புறம் ரஜினியின் சிறந்த திரை ஜோடி என்றால் அது மீனாதான். எஜமான் திரைப்படத்தை ரஜினி & மீனாவின் ஜோடிப்பொருத்தத்தை விளம்பரப்படுத்தியே 175 நாட்கள் ஓடவைத்தவர் ஏ.வி.எம் சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வீரா, முத்து போன்ற திரைப்படங்களில் ரஜினிக்கு ஜோடியாக இளம் நாயகியாக நடித்த மீனா இறுதியாக குசேலன் திரைப்படத்தில் ரஜினியின் நண்பனின் மனைவியாக, இரண்டு குழந்தைகளின் தாயாக நடித்திருப்பார். முத்து திரைப்படம் ஜப்பானில் மிகப்பெரும் வெற்றிபெற்று ரஜினிக்கு சர்வதேச அளவில் ரசிகர்களை உருவாக்கியநிலையில் மீனாவுக்கும் கணிசமான ஜப்பானியர்கள் ரசிகராகினார்கள். ஜப்பான் விடயத்தில் ரஜினியின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் திண்டாடுபவர்களுக்கு தங்களைத் தாங்களே சமாதானப் படுத்திக்கொள்ள மீனா ஒரு துரும்புசீட்டாக இப்போதும் பயன்படுகின்றார்.

குஷ்பு


குஷ்பு அறிமுகமாகியது ரஜினியின் 'தர்மத்தின் தலைவன்' திரைப்படத்தில்த்தான் என்றாலும் அதில் அவரது ஜோடியாக பிரபுதான் நடித்திருப்பார். அதன் பின்னர் 'மன்னன்' திரைப்படத்தில் ரஜினியின் ஜோடியாக முதல்பாதியில் மட்டும் நடித்திருந்தாலும் அடுத்துவந்த அண்ணாமலை மற்றும் பாண்டியன் திரைப்படங்களில் ரஜினிக்கு முழுமையான ஜோடியாக நடித்திருப்பார். அண்ணாமலை திரைப்படத்தில் இளமை, முதுமை என இரண்டு வேடங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த குஷ்புவும் ரஜினியும் முதுமையில் பாடும் 'ரெக்கை கட்டி பறக்குதடா ' பாடல் சிறப்பான காட்சியமைக்கப்பட்டிருக்கும். ஸ்ரீதேவி, மீனா வரிசையில் ரஜினிக்கு மற்றுமொரு சிறப்பான ஜோடியாக குஷ்புவையும் சொல்லலாம்.

கௌதமி


இவர் அறிமுகமாகியது ரஜினி மற்றும் பிரபு நடித்த குருசிஷ்யன் திரைப்படத்தில்தான். குருஷிஷ்யனில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த கௌதமி ரஜினியுடன் குருசிஷ்யன் தவிர பணக்காரன், ராஜா சின்ன ரோஜா, தர்மதுரை போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியான வேடங்களில் நடிக்காவிட்டாலும் இந்த நான்கு திரைப்படங்களுமே மிகப்பெரிய வெற்றிப்படங்கள்; அதிலும் பணக்காரன், ராஜா சின்ன ரோஜா, தர்மதுரை திரைப்படங்கள் 175 நாட்களை கடந்து வெள்ளிவிழாக்கண்ட திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரம்யா கிருஷ்ணன்




'படிக்காதவன்' திரைப்படத்தில் ரஜினியின் தம்பி கேரக்டருக்கு (விஜயபாபு) ஜோடியாக நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன் அதன் பின்னர் நடித்த ரஜினிபடம் 'படையப்பா', 'படிக்காதவன்' திரைப்படத்தைப் போலவே 'படையாப்பா'விலும் ரம்யா கிருஷ்ணன் ரஜினிக்கு ஜோடியில்லை. தான் நடித்த இரண்டு திரைப்படங்களிலும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்காவிட்டாலும் ரஜினியின் திரை நாயகிகளில் மறக்கமுடியாத இடத்தை ரம்யா கிருஷ்ணர் பெற்றுள்ளார் என்றால் அதற்க்கு காரணம் 'நீலாம்பரி' என்கின்ற ஒற்றை வேடம்தான்; ரம்யா கிருஷ்ணன் 'நீலாம்பரியாக' நடித்த அந்த ஒற்றை வேடம் நூறு சாதாரண வேடங்களுக்கு சமன் என்றால் அது மிகையில்லை. ரஜினி படங்களில் ரம்யா கிரிஷ்ணனுக்கு கிடைத்தது போன்ற 'மாஸ்' கேரக்டர் வேறெந்த நடிகைக்கும்/நடிகருக்கும் இதுவரை அமைந்ததில்லை, இனியும் அமையுமென்கின்ற நம்பிக்கையுமில்லை.

ஸ்ரீவித்யா


'மறைந்த நடிகை' ஸ்ரீவித்யா அவர்கள்அதிகமான ரஜினி படங்களில் நடிக்காவிட்டாலும் ரஜினியின் திரை வாழ்க்கையின் மிக முக்கியமான ரஜினியின் அறிமுகத் திரைப்படமான 'அபூர்வராகங்கள்' திரைப்படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்தவர், பின்னர் 'தளபதி' திரைப்படத்தில் ரஜினியின் தாயாகவும், 'உழைப்பாளி' திரைப்படத்தில் ரஜினியின் அக்காவாகவும் நடித்தவர்.

இவர்களைத்தவிர,

*தில்லு முல்லு, தம்பிக்கு எந்த ஊரு, விடுதலை, அதிசயப் பிறவி போன்ற திரைப்படங்களில் நடித்த மாதவி

* படிக்காதவன், மாவீரன், நான் சிவப்பு மனிதன், மிஸ்டர் பாரத், எங்கேயோ கேட்டகுரல் போன்ற திரைப்படங்களில் நடித்த அம்பிகா

* ஊர்க்காவலன், ரங்கா, போக்கிரி ராஜா, மூன்றுமுகம் போன்ற திரைப்படங்களில் நடித்த ராதிகா

* வேலைக்காரன், மாப்பிள்ளை, கொடி பறக்குது போன்ற திரைப்படங்களில் நடித்த அமலா

போன்றோரும் ரஜினிக்கு பொருத்தமான திரை ஜோடிகளாக ரஜினியின் திரைப்பயணத்தில் பயணித்தவர்கள். ரஜினியுடன் பயணித்த பெயர் குறிப்பிட்ட நடிகைகளுக்கும், பெயர் குறிப்பிட மறந்த நடிகைகளுக்கும் 'ரஜினி ரசிகர்கள்' சார்பில் மனமார்ந்த நன்றிகள்.

முக்கியமான யாரையோ மறந்த மாதிரி இருக்கே...யாரு?.....யாரு????? அட நம்ம 'ஐஸ்' அக்கா!!!



ரஜினி ஐஸ்வர்யாராய் ஜோடியைப்பற்றி என்ன சொல்லுறது?????
.
.
.
.
.
.
அடடா... ரஜினி & ஐஸ்வர்யா ஜோடி மிகச்சிறந்த ஜோடின்னு அபிஷேக்பச்சனே சொல்லீட்டாரே!!!!!!! அப்புறமென்ன?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...