ரஜினியும் இயக்குனர்களும் - Birthday Special 1

சிவாஜிராவ் என்கின்ற தனி மனிதன் இன்று ரஜினிகாந்தாக வானளவு வளர்ந்து விஸ்வரூபம் எடுத்திருப்பதற்கு அவரது கடின உழைப்பு, தொழில் பக்தி, சமயோகித புத்தி, முடிவெடுக்கும் திறன், அடக்கம், அதிஸ்டம், ஆண்டவன் ஆசி போன்ற பல அககாரணிகள் முக்கிய பங்குவகித்தாலும்; ரஜினியை இயக்கிய இயக்குனர்கள், தொழில்நுட்பப கலைஞர்கள், சக நடிகர்/நடிகையர், தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், அவரது நண்பர்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் 'கோடான கோடி' ரசிகர்கள் போன்ற புறக்காரணிகளும் ரஜினிகாந்தின் அசுர வளர்ச்சியில் மறக்கப்பட/மறுக்கப்பட முடியாதவர்கள் என்பது வெளிப்படையான உண்மை. அந்தவகையில் சிவாஜிராவை ரஜினிகாந்தாக மாற்றி இந்தியாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க உதவிய புறக்காரணிகளை பற்றியதே இந்த ஆண்டு ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல்.

ரஜினியின் வெற்றியில் பங்காற்றிய புறக்காரணிகளில் இயக்குனர்களின் பங்கு மகத்தானது, அப்படி ரஜினியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இயக்குனர்களையும் அவர்களது பங்களிப்பையும் சற்று நினைவு கூருவோம்.

கே.பாலச்சந்தர்





சினிமா இன்ஸ்டிட்யூட்டில் படிப்பை முடித்துவிட்டு சினிமா வாய்ப்பை எதிர்பார்த்து நின்ற சிவாஜிராவ் என்னும் 25 வயது இளைஞனை அழைத்து (ஒருதடவை இன்ஸ்டிட்யூட்டில் ஒருசில நிமிடங்கள் சந்தித்து வாய்ப்பு கேட்ட ஞாபகத்தில்) அவனை சில டெஸ்ட்களை வைத்த பின்னர் ஒரேயடியாக மூன்று திரைப்படங்களுக்கு வாய்ப்பு தருவதாக வாக்களித்தவர்தான் கே.பாலச்சந்தர். அந்த மூன்று திரைப்படங்களில் ஒன்று 'அபூர்வ ராகங்கள்', இரண்டாவது 'மூன்று முடிச்சு', மற்றையது ஒரு தெலுங்கு திரைப்படத்தில் முக்கிய வேடம் (அவள் ஒரு தொடர்கதையின் மறு ஆக்கத்தில் ஜெய்கணேசின் வேடமென்று நினைக்கிறேன்).

ஒரே தடவையில் மூன்று இன்ப அதிர்ச்சிகளை சிவாஜிராவிற்கு வழங்கிய k.பாலச்சந்தர் சிவாஜிராவின் முதல்ப்படமான அபூர்வராகங்களில் அவரது பெயரை தனது 'மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான 'ரஜினிகாந்த்' பாத்திரத்தின் பெயரை சூட்டினார். அந்த நாடகத்தின் முக்கிய பாத்திரமான 'ஸ்ரீகாந்தின்' பெயரை சற்று நாட்களுக்கு முன்னர் இன்னொருவருக்கு சூட்டியதால் சிவாஜிராவிற்கு 'ரஜினிகாந்த்' என்னும் பெயர் கிடைத்தது. ஸ்ரீகாந்திற்கு பெயர் சூட்டுமுன்னர் சிவாஜிராவ் கே.பியை சந்தித்திருந்தால் இன்று உலகம் வியக்கும் 'சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்' என்று அழைக்கப்படும் சிவாஜிராவ் 'சூப்பர்ஸ்டார் ஸ்ரீகாந்த்' என்று அழைக்கப்பட்டுக் கொண்டிருப்பார்.

உடல்மொழி, வசன உச்சரிப்பு, ஸ்டையிலான மானரிசம் என்பன கே.பியால் ரஜினிகாந்திற்கு அதுவரை மக்கள் பார்த்திராத வண்ணம் புதுமையாக வழங்கப்பட்டது. மூன்று முடிச்சு திரைப்படத்தில் வில்லனாக வந்தாலும் ரசிகர்களை "யாரிந்த பையன்?" என்று புருவத்தை உயர்த்தப் பண்ணிற்று. பின்னர் 'அவர்கள், நினைத்தாலே இனிக்கும், தப்புத்தாளங்கள் போன்ற திரைப்படங்களில் ரஜினியை இயக்கிய கே.பி நீண்ட நாட்களுக்கு பின்னர் இயக்கிய திரைப்படம்தான் 'தில்லு முல்லு'.

நகைச்சுவை என்னும் புதிய பரிமாணத்தில் ரஜினியை ரசிகர்களுக்கு வெளிக்காட்டிய திரைப்படமான 'தில்லு முல்லு'த்தான் ரஜினி கே.பி இணைந்த இறுதிப்படம், ரஜினியை வைத்து கே.பி இயக்கிய அனைத்து திரைப்படங்களிலும் நடித்திருந்த கமல் ரஜினியுடன் இணைந்து கடைசியாக நடித்ததும் 'தில்லு முல்லு' திரைப்படம்தான் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.

அதன் பின்னர் இயக்குனராக பாலச்சந்தர் ரஜினியுடன் இணையாவிட்டாலும் ஆசானாகவும், தயாரிப்பாளராகவும், விமர்சகராகவும் இன்றுவரை ரஜினியுடன் பக்கபலமாக இருந்து வருபவர். குசேலன் தயாரிப்பு விடயத்தில் ரஜினி ரசிகர்கள் பலருக்கு இவர்மீது கோபம் இருந்தாலும் சிவாஜிராவை ரஜினிகாந்தாக எமக்கு அறிமுகப்படுத்திய பாலச்சந்தர்மீது மரியாதை குறையவில்லை என்பதுதான் உண்மை.

எஸ்.பி.முத்துராமன்





புவனா ஒரு கேள்விக்குறி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்த நடிகர் சிவகுமாரை வில்லனாக்கி, வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினியை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய எஸ்.பி.முத்துராமன் அவர்கள்தான் ரஜினியை வைத்து அதிக திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர், ரஜினியைவைத்து 25 திரைப்படங்களை இயக்கிய எஸ்.பி.எம் தான் இளையராஜாவை அதிக திரைப்படங்களுக்கு இசையமைக்க வாய்ப்புக்கொடுத்த இயக்குனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

'பிரியா', 'ஆறிலிருந்து அறுபதுவரை' என வித்தியாசமான திரைப்படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன்தான் ரஜினியை ஒரு அக்ஷன் ஹீரோவாக, வணிக சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மாற்ற வித்திட்ட ரஜினியின் முதல் மசாலா திரைப்படமான 'முரட்டுக்காளை'யை இயக்கினார். அதன் பின்னர் ரஜினியின் வணிக சினிமாவின் முக்கிய மைல் கற்களான பாயும்புலி, நல்லவனுக்கு நல்லவன், போக்கிரி ராஜா, நான் மகானல்ல, mr.பாரத், வேலைக்காரன், மனிதன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், ராஜா சின்ன ரோஜா போன்ற திரைப்படங்களை இயக்கியவர். இந்தமாதிரி வணிகரீதியான திரைப்படங்களுக்கிடையில் எங்கேயோ கேட்டகுரல், ஸ்ரீ ராகவேந்திரா, நெற்றிக்கண் போன்ற வித்தியாசமான நடிப்பு திறமையுள்ள திரைப்படங்களையும் ரஜினிக்காக எஸ்.பி.எம் இயக்கியுள்ளார்.

'முரட்டுக்காளை' என்றொரு திரைப்படத்தில் நடித்திருக்காவிட்டால் ரஜினி என்கின்ற 'நல்ல நடிகனை' இழந்திருக்க மாட்டோம் என்று சிலர் அறிவுபூர்வமாக பேசுவதாக நினைத்து புலம்புவது வழக்கம். ஒருவேளை இவர்கள் சொல்வதுபோல ரஜினி அன்று தனது பாதையை வணிகரீதியாக மாற்றாமல் இருந்திருந்தால் ரஜினி என்கின்ற நடிகர் வணிகரீதியில் இன்று ஒரு சாதாரண நடிகராகவே இருந்திருப்பார், இதைத்தான் ஆறிவுஜீவிகள் விரும்புகிறார்களே அன்றி ரஜினியின் குணச்சித்திர நடிப்பை அல்ல, இதுதான் உண்மை. ரஜினியின் வணிக சினிமாவுக்கான சரியான தேர்வு அவரை எப்படி உச்சத்துக்கு கொண்டுபோனதோ; அதேபோல பாமர மக்களுக்கு மகிழ்ச்சியான, சந்தோசமான சினிமாவையும் கொடுத்தது. அந்த முடிவுதான் இன்று சர்வதேச அளவில் தமிழ் சினிமாவிற்கான அங்கீகாரமாக ஒரு அடையாளமாக மாறியது. அந்தவகையில் எஸ்.பி.எம்மின் முரட்டுக்காளை ரஜினியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமைல்கல்.

மகேந்திரன்





ரஜினியின் திரைப்படங்களில் மிகவும் முக்கியதிரைப்படமான 'முள்ளும் மலரும்' திரைப்படத்தை இயக்கியவர் என்பது எல்லோரும் அறிந்தது. ஆனால் அதை அவர் இயக்கி முடிப்பதற்குள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல!!! படத்தின் தயாரிப்பாளர் வேணு செட்டியார் எழுத்தாளர் உமா சந்திரனுடைய கதையை படமாக்கித்தருமாறு மகேந்திரனிடம் கேட்டுக்கொண்டதற் கிணங்க திரைப்படத்தை இயக்க சம்மதித்த மகேந்திரன் போட்ட ஒரே கண்டிஷன் என்ன தெரியுமா? "ரஜினி நாயகன் என்றால் இயக்குகிறேன் இல்லையென்றால் நான் இயக்க மாட்டேன்" என்பதுதான்.

மகேந்திரனது திறமையை கைவிட மனமில்லாத தயாரிப்பாளர் விரும்பியோ விரும்பாமலோ ஒப்புக்கொள்ள 'முள்ளும் மலரும்' திரைப்படத்தை மகேந்திரன் இயக்கினார். ஒருசில காட்சிகளை இயக்குவதற்கு பணம் போதாதென்று கேட்டபோது; அதுவரை இயக்கிய படத்தின் காட்சிகளில் வசனங்கள் குறைவாக இருக்கின்றன என்ற காரணத்தாலும் ரஜினியை பிடிக்காத காரணத்தாலும் பணம் தர மறுத்துவிட்டார். பின்னர் மகேந்திரன், நடிகர் கமல்ஹாசன் போன்றோரது வேண்டுகோளால் பணத்தை கொடுத்த தயாரிப்பாளருக்கு படம் வெளியாகிய முதல் இரண்டு வாரமும் திரையரங்கிற்கு மக்கள் அவ்வளவாக போகாதது அவர் எதிர்பார்த்தது போலிருந்ததனால் படத்திற்கு விளம்பரம் செய்யவும் மறுத்துவிட்டார்.

ஆனால் அடுத்தடுத்தவாரங்களில் word of mouth மூலம் காட்டுதீபோல பரவிய நேர்மறையான விமர்சனங்கள் முள்ளும் மலரும் திரைப்படத்தை 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கொண்டாடுமளவிற்கு கொண்டுவந்தது. முள்ளும் மலரும் திரைப்படத்தில் ரஜினியின் நடிப்பை அன்றுமுதல் இன்றுவரை பாராட்டாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அதேபோல 'ஜானி' திரைப்படத்தில் நேரெதிரான இரண்டு வேடங்களை ரஜினிக்கு வழங்கிய மகேந்திரன் மென்மையான காதல் காட்சிகளில் நடிப்பதிலும் ரஜினி 'கிங்' என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தினார். தமிழ் சினிமாவின் வரலாற்றிலும் இரண்டு சிறந்த படைப்புகளை கொடுத்த இயக்குனர் மகேந்திரன் & ரஜினி கூட்டணி தமிழ் சினிமாவின் மறக்கப்பட/மறுக்கப்பட முடியாத கூட்டணி என்றால் அது மிகையில்லை.

சுரேஷ் கிருஷ்ணா





ரஜினியின் உச்ச 'மாஸ்' அந்தஸ்தை இன்றுவரை ரஜினியால் தக்கவைத்திருக்க முடிகிறதென்றால் அதற்க்கு முக்கிய காரணமான திரைப்படம் 'பாட்ஷா'தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அண்ணாமலையில் ரஜினியின் ஹீரோயிசத்தின் உச்சத்தை தொட்ட சுரேஷ் கிருஷ்ணா பாட்ஷாவில் அதை வேறு ஒரு பரிமாணத்துக்கு கொண்டு சென்றிருந்தார் என்பதே உண்மை. ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து அதற்கேற்றாற்போல் இவர் ரஜினியை வைத்து இயக்கிய அண்ணாமலை, பாட்ஷா, வீரா திரைப்படங்கள் ரஜினியின் நட்சத்திர அந்தஸ்தை அதிகரித்த திரைப்படங்கள்.

பாபா திரைப்படத்தை இயக்கியது சுரேஷ்கிருஷ்ணா என்றாலும் பாபாவின் சறுக்களுக்கு அவர் முழுக்காரணமாக முடியாது. ரஜினியின் கதை, திரைக்கதையில் பாலகுமாரனின் வசனத்தில் பாபாவை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா முழுமனதுடன் பாபாவில் ஈடுபடவில்லையோ என்றே எண்ணத் தோன்றுகிறது!!! ரசிகர்களின் நாடித்துடிப்பையும் ரஜினியின் 'மாஸ்' பவரையும் நன்கு அறிந்துவைத்துள்ள சுரேஷ்கிருஷ்ணாவிற்கு ஒருவேளை நாளை ரஜினியின் திரைப்படமொன்றை இயக்கம் வாய்ப்பு வழங்கப்பட்டால் அவரால் சிறப்பாக ரஜினியை இயக்கமுடியும் என்று நம்பலாம்.

p.வாசு





"அண்ணன் அவ்ளோதான்" என்று இருந்தவர்களுக்கு அண்ணன் எப்போதுமே டாப்புத்தான் என்பதை சந்திரமுகி மூலம் நிரூபித்தவர் p.வாசு. ரஜினிக்கு எப்படியோ தெரியவில்லை ஆனால் ரஜினி ரசிகர்களுக்கும் படம் வெளிவருவதற்கு முன்னர் சற்று பதற்றமாக இருந்த திரைப்பட மென்றால் அது சந்திரமுகிதான். 'பாபா' சரியாகப்போகாத நிலையில் மூன்றாண்டுகளுக்கு பின்னர் ரஜினி நடிக்கும் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் எந்த மனநிலையில் இருப்பார்கள் என்பதை அன்று ஊகிக்க முடியவில்லை; படத்தின் பெயர்வேறு பெண்ணின் பெயர் என்பதால் இன்னும் கொஞ்சம் பதட்டம் படம் வெளியாகும்வரை இருந்தது.

ஆனால் அறிமுகக்காட்சியில் கதிரை நுனிக்கு அழைத்துவந்த p.வாசு இறுதிக்காட்சியில் வேட்டையனாக தலைவர் அவதாரமெடுக்கும் காட்சியில் திரையரங்கையே அதிரச்செய்திருந்தார். பக்கா கமர்சியல் திரைப்படம் என்றில்லா விட்டாலும் ரஜினி ரசிகர்களுக்கு தேவையான அனைத்தையும் கதைக்குள் கொண்டுவந்து சந்திரமுகியை சிறப்பாக இயக்கியிருப்பார் p.வாசு. இனிமேல் படம் நடிப்பாரா? மாட்டாரா ? என்று ஏங்கிய ரசிகர்களுக்கு மீண்டும் 'ரஜினி கவுண்ட்டவுன் ஸ்டாட்' என சொல்லாமல் சொல்லிய சநிதிரமுகியை இயக்கிய p.வாசு உழைப்பாளி, பணக்காரன், மன்னன் போன்ற வணிகரீதியான வெற்றித் திரைப்படங்களையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக குசேலன் திரைப்படத்தில் மொழிமாற்றம் செய்யும்போது சில தவறுகளை p.வாசு செய்திருந்தாலும் முழுக்கமுழுக்க ரஜினிபடமாக அது இருந்திருந்தால் அதன் நிறம் வேறுமாதிரி இருந்திருக்கும். குசேலன் சரியாக போகாதற்கு p.வாசு மட்டுமே காரணமென்று சொல்லமுடியாது. சண் நெட்வேர்க்கின் சதி, கவிதாலயாவின் பேராசை, பிரமிட் சமீராவின் பிழையான வர்த்தக அணுகுமுறை, போன்றவைதான் குசேலனின் சரிவிற்கு மிக முக்கியமானகாரணிகள் என்பதால் வாசுவை மட்டும் குறைசொல்வது தவறு. எது எப்படியாக இருந்தாலும் ரஜினிக்கு 80 % (4:1) சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் p.வாசு என்பதால் ரஜினியின் வெற்றி படிகட்டுகளில் p.வாசுவின் பாங்கு மறக்கப்பட/மறுக்கப்பட முடியாதது என்றால் அது மிகையில்லை.

கே.எஸ்.ரவிக்குமார்





ரஜினியின் ஆஸ்தான இயக்குனர் என அடையாளப்படுத்தப்படும் கே.எஸ்.ரவிக்குமார் ரஜினியின் இரண்டு History re writer திரைப்படங்களை இயக்கியவர். கமலுக்கு ஐந்து திரைப்படங்களை இயக்கினாலும் ரஜினியின் ஆஸ்தான இயக்குனராக கே.எஸ்.ரவிக்குமார் இன்னும் அறியப்படுகின்றார் என்றால் அந்த இரண்டு திரைப்படங்களின் வெற்றியின் வீச்சை நீங்கள் உணரலாம். ஜப்பான் நாட்டில் ரஜினிக்கு ரசிகர்களை உருவாக்கிய 'முத்து' திரைப்படமென்பது வெளிப்படை உண்மை. அந்தவகையில் சர்வதேச ரீதியில் ரஜினிக்கு ரசிகர்கள் உருவாகுவதற்கு கே.எஸ்.ரவிக்குமாரும் முக்கிய காரணியாக இருந்துள்ளார் என்று சொல்லலாம்.

படையப்பாவில் ஆறு படையப்பனாக ரஜினியை பட்டையை கிளப்பவைத்த கே.எஸ்.ரவிக்குமார் இப்போது ரஜினியின் அனிமேஷன் திரைப்படமான 'ஹரா'வை இயக்குகிறார். 'சௌந்தர்யா அஷ்வினிடமிருந்து' ரவிக்குமாருக்கு கைமாறிப் போன ஹரா; பாதி 'அனிமேஷன்' மீதி 'ரியல் ரஜினி' என அவதார் போன்று இருக்குமென்று கூறப்படுகிறது. ரஜினியை கையாள்வதில் வல்லவரான ரவிக்குமார் 'ஹரா'வை வெற்றியாக்கி கொடுப்பார் என நம்பலாம்.

ஷங்கர்





ஷங்கர் பற்றி புதிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை என்றாலும் தன்னைவிட ஒருவரை ரஜினி அதிகமாக நம்பினார் என்றால் அது ஷங்கர் ஒருவர்தான் என்று சொல்லலாம். சிவாஜியில் ரஜினியின் நம்பிக்கையை சம்பாதித்த ஷங்கர்மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையில் எந்திரனில் தன்னையே ஷங்கரிடம் முழுமையாக ஒப்படைத்திருந்தார் ரஜினி; அதற்க்கான பலன் தான் 'இந்தியாவிலேயே அதிகம் வசூலித்த திரைப்படம்' என்கின்ற சாதனையை படைத்த எந்திரனின் இமாலய வெற்றி.

ஷங்கருக்கு ரஜினியி மாஸ் பவர் நன்கு தெரியும் என்பதனை 'மொட்டை பாஸ்' மற்றும் 'சிட்டி வேஷன் 2.0' கேரக்டர்கள் மூலம் நிரூபித்திருப்பார். ஷங்கருக்கு இருக்கும் ஒரே பிரச்சனை ரஜினி இல்லாமல் எந்திரனை விட பிரமாண்டமாக ஒரு படத்தை எப்படி எடுப்பதென்பதுதான்!!! அதுக்கு ஒரேவழிதான் இருக்கு அது என்னன்னா......ஷங்கர் கிட்டயே சொல்லுவம் :-) " என்திரனைவிட பெரிய பட்ஜட் படமா? கவலையை விடுங்க ஷங்கர் சார், அதுதான் ரஜினிசார் இருக்கிராரெல்ல; அப்புறமென்ன? அவரையே அப்ரோச் பண்ணுங்க, ஆனா தலைவருக்கு படத்தில ரொம்ப கஷ்டம் குடுக்காதீங்க, படத்தையும் 1 வருசத்தில முடிச்சுக்கொங்க", சரிதானே?



மணிரத்தினம் அவர்கள் 'தளபதி' திரைப்படத்தை மட்டுமே இயக்கியிருந்தாலும் ரஜினியின் திரை வாழ்க்கையில் 'தளபதி' ஒரு மைல்கல் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. அதே போல ரஜினியின் திரைவாழ்க்கையில் முக்கியமான திரைப்படங்களான '16 வயதினிலே' திரைப்படத்தை கொடுத்த பாரதிராஜா, 'இளமை ஊஞ்சல் ஆடுகிறது' திரைப்படத்தை கொடுத்த ஸ்ரீதர், பில்லாவை அற்ப்புதமாக ரீமேக் செய்த ஆர்.கிரிஷ்ணமூர்த்தி போன்றோரும் ரஜினியின் வளர்ச்சியில் பங்காற்றியவர்களில் முதன்மையானவர்கள்.

இவர்கள் அனைவருக்கும், இவர்களைவிட பெயர் குறிப்பிடாத ரஜினியை இயக்கிய அனைத்து இயக்குனர்கள் 'ரஜினி ரசிகர்கள்' சார்பில் ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷல் பதிவில் மனமார்ந்த நன்றியை கூறிக்கொள்கின்றேன்.

Courtesy : http://eppoodi.blogspot.com

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...