ரஜினி என்ற நடிகனை விட அவருடைய தன்னடக்கம் பெருந்தன்மை எளிமை அனைவரிடமும் பந்தா இல்லாமல் பழகும் குணம் போன்றவற்றிக்கு ரசிகர்கள் அதிகம். இதை அவர் இதற்காக செய்ய வேண்டும் என்று செய்வதில்லை அவருடைய இயல்பே அது தான். ரஜினியைப்போல அமைதியாக இருக்க ஒரு சிலர் முயற்சித்தாலும் அல்லது அவரைப்போல நடக்க முயற்சித்தாலும் அது நடிப்பாகவே தெரிவதால் மக்களிடம் அவர்களால் ரஜினியைப்போல நன்மதிப்பை பெற முடிவதில்லை.
மற்றவர்களின் படங்களைப்பாராட்டி அவர்களுக்கு ஊக்கம் தருவதில் ரஜினியை மிஞ்ச யாருமே இல்லை இதைக்கூறுவதில் எனக்கு எந்தவித தயக்கமுமில்லை. கலைஞரோட பெண் சிங்கம், தனுஷ் படங்கள் உட்பட பல மொக்கைப்படங்களை ரஜினி வேறு வழி இல்லாததால் பாராட்ட வேண்டி வரும் ஆனால் அவை எல்லாம் தவிர்க்க முடியாத விஷயங்கள். படம் பார்த்து வருபவர்களிடம் படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் படம் எடுத்தவர்கள் மனம் வருத்தப்படக்கூடாது என்று சம்பிரதாயமாக கூறும் வார்த்தைகள்.
ரஜினி உண்மையிலேயே அது சிறந்த படமாக இருந்தால் அந்தப்படக்குழுவினரை தனியாக அழைத்து பாராட்டி கவுரவிப்பார் அந்தப்படத்தைப் பற்றி தனது எண்ணங்களைக் கடிதமாக அனுப்பி வைப்பார். இது தான் சம்பிரதாய பாராட்டிற்கும் உண்மையான பாராட்டிற்கும் உள்ள வித்யாசம். எடுத்துக்காட்டாக நான் கடவுள், வெண்ணிலா கபடிக்குழு சமீபத்திய மைனா வரை பல நல்ல படங்களைக் கூறலாம். அதிலும் குறிப்பாக மைனாவை கூறலாம் தனது மருமகன் படம் உடன் வெளியாகி இருந்தும் மைனாவை மனம் திறந்து பாராட்டி எழுதியது குறிப்பிடத்தக்கது.
விசயத்திற்கு வருகிறேன்..
ரஜினியும் கமலும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தொழில்முறையில் இருவரும் போட்டியாளர்களாக இருந்தாலும் தங்களின் கருத்து வேறுபாடுகளை என்றும் தங்களுடைய நட்பில் போட்டுக்குழப்பிக் கொள்வதில்லை. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கமலின் திரையுலகம் 50 ஐ குறிப்பிடலாம். இதில் இருவருமே பேசிய பேச்சுகள் அனைவராலும் பாராட்டப்பட்ட ஒரு விஷயம்.
ஆனால் ரஜினி எப்போதுமே கமலை விட ஒருபடி உயர்வாக தன்னுடைய நட்பை வெளிப்படுத்தி வருகிறார். அது திரைப்படமாக இருக்கட்டும் பொது வாழ்க்கை ஆகட்டும் எப்போதும் கமலை விட்டுக்கொடுத்ததில்லை. ஒரு உண்மையான நல்ல நட்பிற்கு இலக்கணமாக திகழ்கிறார். திரைப்படம் என்றால் பல படங்களைக் கூறினாலும் எடுத்துக்காட்டாக சிவாஜியில் முல்த்தானி மெட்டியில் குளித்து விட்டு “கமலஹாசன் மாதிரி வரப்போகிறேன்” என்று கூறுவதும் சமீபத்திய எந்திரன் படத்தில் கமலுடைய தொலைபேசி எண்ணை ரோபோ சொல்லும் போது அது அனைவருக்கும் தெரியும் என்று கூறுவதிலும் எப்போதும் கமலை இணைத்தே வந்து இருக்கிறார்.
இவை எல்லாம் இயக்குனர் வைத்தக்காட்சி என்று ஒரு சிலர் கூறினாலும் அதை ரஜினி அனுமதிக்கவில்லை என்றால் வர வாய்ப்பில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ரஜினியின் விருப்பமில்லாமல் இன்னொரு நடிகரைப்பற்றி வசனம் வர வாய்ப்பில்லை இது ரஜினி என்றில்லை அனைத்து பிரபல நடிகர்களுக்கும் பொருந்தும். இதைப்போல கமலும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை அப்படி எதிர்பார்ப்பதும் ஒரு அர்த்தமற்ற செயல். ஏனென்றால் ஒவ்வொருவொருவருக்கும் ஒவ்வொரு கோட்பாடுகள் இருக்கும் அதன் படி நடப்பார்கள் அதில் நாம் ரஜினி வைக்கும் போது கமல் ஏன் வைக்கக்கூடாது என்று கேட்பது நியாமான ஒன்றில்லை.
கமல் படம் என்று வெளியானாலும் ஆர்வமாக சென்று பார்த்து அதைப் பாராட்டி அது நன்றாக உள்ளதோ இல்லையோ அவருக்கு ஒரு உற்சாகமான வார்த்தையைக் கூறி அவரை பாராட்டுவார். தனக்கு நெருக்கமில்லாத அறிமுகமில்லாத இயக்குனர் படங்கள் வெளிவந்தாலே அதைப்பாராட்டுபவர் அப்படி இருக்கும் போது தன்னுடைய நெருங்கிய நண்பன் படம் வரும்போது பாராட்டாமல் இருப்பாரா! அதை இது வரை தவறவிடாமல் பாராட்டி வருகிறார். பாராட்டி வருகிறார் என்பது பொய் என்று சிலர் நினைத்தாலும் கமலுக்கு உற்சாகம் கொடுக்கிறார் என்ற வாதத்தை யாராலும் மறுக்க முடியாது.
ஆனால் கமல் இன்று வரை ரஜினியின் எந்திரன் படத்தை பாராட்டவில்லை படம் வெளிவந்து நீண்ட நாட்களுக்குப்பிறகு அவரிடம் எடுத்த பேட்டியில் பின்வருமாறு கூறி இருக்கிறார். தமிழ்படுத்தினால் அர்த்தம் மாறலாம் என்று அப்படியே கொடுத்து இருக்கிறேன்.
“Robot” is successful not because of the content, but due to the marketing strategy and of course, Rajini is a saleable star. Huge-budget films are good as long as they have solid content“
கமல் உங்களுக்கு எப்படி இதைப்போல கூற முடிந்தது! விளம்பரத்தால் ஒரு படம் வெற்றி பெற முடியும் என்றால் அடிக்கடி விளம்பரப்படுத்தப்பட்ட சன் பிக்சர்சின் “வேட்டைக்காரன்” “சுறா” போன்ற படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை? கண்டிப்பாக படம் என்றில்லை எதற்கும் ஒரு விளம்பரம் அவசியமே ஆனால் அது மட்டும் ஒருவருக்கு வெற்றியைத் தந்து விடாது என்பது நிரூபிக்க எத்தனையோ உதாரணங்களைக் கூற முடியும். ஒருபடத்தின் கதையும் திரைக்கதையும் சரியாக அமைந்தால் மட்டும் ஒரு படம் வெற்றி பெற முடியும்.
உங்களின் மன்மதன் அம்பு படத்திற்குக் கூட இந்தியாவில் இருந்து பலரை மலேசியா அழைத்து வந்து அங்கே இருந்து சிங்கப்பூருக்கு சொகுசு கப்பலில் அழைத்து வந்து பிரம்மாண்டமாக பாடல் வெளியீட்டு விழா நடத்தினீர்கள். தமிழகத்தில் எப்படியோ இங்கே சிங்கப்பூர் உள்ளூர் தொலைக்காட்சியில் வார இறுதியில் உங்கள் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியைத் தான் ஒளிபரப்பிக்கொண்டு இருந்தார்கள். இது இல்லாமல் விஜய் டிவி யில் சிறிது நேரத்திற்கு ஒருமுறை நீங்கள் வந்து படத்தைப் பற்றிக் கூறிக்கொண்டு இருந்தீர்கள். எந்திரன் அளவிற்கு இல்லை என்றாலும் அதற்கு போட்டியாக விளம்பரம் செய்து கொண்டு இருந்தீர்கள். இந்த அளவிற்கு விளம்பரம் செய்யப்பட்ட உங்கள் பாணியில் கூற வேண்டுமென்றால் மார்க்கெட்டிங் செய்யப்பட்ட உங்கள் மன்மதன் அம்பு படம் எப்படிப் போகிறது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றாலும் உங்கள் படத்தை வாங்கிய ஜெமினி பிலிம் நிறுவனத்தை கேட்டுப்பாருங்கள் விளக்கமாக கூறுவார்கள்.
ரஜினி ஒரு விற்பனை மதிப்புள்ள நபர் தான் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் அப்படி நீங்கள் நினைக்கும் ரஜினி நடித்த பாபா மற்றும் குசேலன் படம் ஏன் வெற்றி பெறவில்லை? உங்களை விட உங்கள் நண்பர் ரஜினி இதை நன்கு அறிந்து வைத்து இருக்கிறார் அதனால் தான் குசேலன் படத்தின் ஒரு காட்சியில் “யார் நடித்தாலும் படம் சரி இல்லை என்றால் மக்கள் படத்தை புறக்கணித்து விடுவார்கள்” என்று கூறி இருப்பார். எனவே யாராக இருந்தாலும் கதையும் திரைக்கதையும் இல்லை என்றால் படம் பப்படம் தான்.
ரஜினி கமலின் மன்மதன் அம்பு படத்தை விருப்பமாக கேட்டுப் படம் வெளியான நாளுக்கு ஒரு நாள் முன்பு பார்த்து அவரை உற்சாகப்படுத்தினார். கமல் ரஜினியின் அனைத்து படங்களையும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்த்தனமான ஒன்று. ஒரு குசேலன் படத்தையோ பாபா படத்தையோ அல்லது பக்கா மசலாப்படமான சிவாஜி படத்தையோ பாராட்டக் கூறி எதிர்பார்க்கவில்லை ஆனால் எந்திரன் படம் அப்படி அல்ல.
கஷ்டப்பட்டு நடிக்கும் நடிகருக்கு எடுத்துக்காட்டாக கமலைத்தான் கூறுவார்கள் தற்போது சூர்யா போன்று ஒரு சில இளம் நடிகர்களும் வந்து விட்டாலும் இன்றும் பலரின் நினைவிற்கு வருவது கமல் தான். மிகவும் கஷ்டப்பட்டு பல மணி நேர மேக்கப் போட்டு மிகவும் சிரத்தையாக நடிப்பார் அதைப்பற்றி பேட்டியும் கொடுத்து இருப்பார். எனக்கு இன்று வரை கமலின் மேக்கப் என்றால் நினைவிற்கு வருவது அன்பே சிவம் படம் தான் பல கோடி செலவழித்து எடுக்கப்பட்ட தசாவதாரம் படத்தின் மேக்கப்பை விட 100 மடங்கு சிறந்த ஒன்றாகும்.
ரஜினி மேக்கப் போட சிரமம் எல்லாம் எடுப்பதில்லை அதற்கு காரணம் ரஜினி தேர்ந்தெடுக்கும் கதைகள் அப்படி. இதைப்போல ரஜினியின் படத்திற்கு எந்திரன் படத்தைக் கூறலாம். பல மணிநேரம் மேக்கப் போட எடுத்துக்கொண்டார். சன் டிவி பேட்டியில் கூட “இரண்டு மணி நேரத்துல பானு மேக்கப் போட்டுடுவாங்க” என்று கூறிய போது நான் அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை. இரண்டு மணி நேரம் என்பது என்ன இரண்டு நிமிஷமா! எளிதாகக்கூற. தான் கஷ்டப்படுவதை பட்டதை என்றுமே பெருமையாக கூறிக்கொண்டதில்லை அதனால் தான் என்னவோ 7 மணி நேரம் அசையாமல் ரோபோ கதாப்பாத்திரத்திற்க்காக போட்ட மேக்கப்பைக்கூட கூறியதில்லை. மேக்கிங் ஆஃப் எந்திரன் மட்டும் சன் டிவி வெளியிடவில்லை என்றால் ரஜினி பட்ட சிரமம் எவருக்குமே தெரிந்து இருக்காது.
இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பெண்கள் பலர் இவர் எதுக்கு எவ்வளோ கஷ்டப்படனும் என்று தான் நினைத்தார்கள். ரசிகர்கள் எல்லாம் வாயடைத்து விட்டார்கள் எவருமே ரஜினி இந்த அளவிற்கு கஷ்டப்பட்டு இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. ரசிகர்கள் மட்டுமல்ல ரசிகர்கள் அல்லாதவர்கள் கூட இதை ஏற்றுக்கொள்வார்கள். இவ்வளவு சிரமப்பட்டு ரஜினி நடித்த படத்தை இந்திய அளவில் ஒரு தமிழ் படத்தை உயர்த்திய, வசூலில் இந்தியாவில் தற்போதைய நிலவரத்திற்கு முதல் இடத்தில் உள்ள ஒரு தகுதியான படத்தை குறைந்த பட்சம் கூட பாராட்டாமல் கூறியதைக் கூட ஏனோ தானோவென்று கமல் கூறியதை என்னவென்று கூறுவது!
ரஜினி ஏன் எப்போதும் மக்களால் ரசிக்கப்படுகிறார்! அனைவராலும் புகழப்படுகிறார் என்பதற்கு காரணம் அவரின் பெருந்தன்மையும் ஒன்றாகும் கமல் தனிப்பட்ட முறையில் ஒருவேளை ரஜினியைப் பாராட்டி இருக்கலாம் ஆனால் ஒருவரை இதைப்போல விசயங்களில் அனைவர் முன்பும் பாராட்டுவதே சிறப்பாகும். நம்முடைய அலுவலகத்தில் கூட நம்மை தனியாக அழைத்துப் பாராட்டுவது எப்படி அனைவர் முன்பும் பாராட்டுவது எப்படி! இதை எல்லாம் ரஜினி என்றும் எதிர்பார்ப்பதில்லை என்றாலும் அவரைப்போல அவரது ரசிகர்களும் இருப்பதில்லை.
நண்பேன்டா! என்ற வார்த்தைக்கு முழுத்தகுதியானவர் ரஜினி மட்டுமே! கமல் சிறந்த நடிகராக இருக்கலாம் நல்ல மனசு, நட்பு என்று வந்தால் அங்கே சந்தேகமில்லாமல் ரஜினியே அனைவரின் மனதிலும் உயர்ந்து நிற்கிறார்.
- http://www.giriblog.com
No comments:
Post a Comment