இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு ரஜினிஃபேன்ஸ்.காம் வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு (2010) CNN IBN என்ற வடநாட்டு சேனல் அரசியல், விளையாட்டு,சமூகம், திரைத்துறை போன்றவற்றில் யார் சிறந்தவர் என்று போட்டியை நடத்தியது. இது இணையம், குறுந்தகவல் மற்றும் நடுவர்கள் பரிந்துரை ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு நடத்தப்பட்டது. இதில் இந்தாண்டில் அனைவராலும் கவனிக்கப்பட்ட சாதனை செய்த நபர்களை கணக்கில் கொண்டு நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

திரைத்துறை பகுதிக்கு தமிழகத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் மற்றும் இயக்குனர் ஷங்கரும் தேர்வு செய்யப்பட்டனர். இருவரும் எதற்கு தேர்வுசெய்யப்பட்டார்கள் என்பதற்கான காரணம் கூறித் தெரியவேண்டியதில்லை.

ஆவலுடன் அனைவரும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தப்போட்டியின் முடிவில் சூப்பர் ஸ்டார் நடித்த எந்திரன் படத்தை இயக்கிய இயக்குனர் ஷங்கர் அவர்கள் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு ரஜினிஃபேன்ஸ்.காம் வாழ்த்துக்கள்.

எந்திரன் படம் மாபெரும் வெற்றி பெற ரஜினி என்ற ஒரு முக்கிய காரணி இருந்தாலும் அவரை வழக்கமான முறையில் நடிக்க வைக்காமல் வித்யாசமாக வழக்கமான வசனங்கள், ஸ்டைல்கள், சண்டைகள் இல்லாமல் நடிக்க வைத்து அதில் ஷங்கர் வெற்றியும் பெற்று இருக்கிறார். பலரும் நடிக்க மறுத்து மற்றும் அதிகமான பட்ஜெட்டால் தயாரிப்பாளர்கள் ஒத்துக்கொள்ள மறுத்து பல சோதனைகளை தாண்டி "ஷங்கர் தன் கனவுப்படம் கனவாகவே சென்று விடுமோ!" என்று அஞ்சிய வேளையில் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் மாறி வெற்றியைப்பெற்று இருக்கிறார்.

எந்திரன் படத்தால் ரஜினியால் ஷங்கருக்கு எவ்வளவு பெருமையோ அதே போல ஷங்கரும் ரஜினிக்கு இன்னும் பல பெருமைகளை பெற்றுத் தந்து இருக்கிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ரஜினி என்றால் அனைவரும் உதாராணத்திற்கு ரசிகர்கள் உட்பட பலர் முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, புவனா ஒரு கேள்விக்குறி போன்ற குறிப்பிட்ட ஒரு சில படங்களையே கூறி வந்தார்கள் அதாவது ரஜினியை பாராட்டுகிற மாதிரி கூறி அவர் தற்போது சரியாக நடிப்பதில்லை என்பதை மறைமுகமாக கூறி வந்தனர்.

ஆனால் அவை அனைத்தும் எந்திரன் படம் மூலம் மாறி இருக்கிறது. ரஜினி கூறுகிறபடி தான் இயக்குனர் படம் எடுப்பார்கள் இயக்குனர் கூறுவதை ரஜினி கேட்க மாட்டார் என்று பலர் கூறி இருக்கிறார்கள் ஆனால் சரியான கதையும் அதற்கான தேவையும் இருந்தால் தான் எப்போதும் இயக்குனரின் நடிகர் தான் என்று மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து இருக்கிறார். படம் பார்க்கிற ரஜினி ரசிகர்கள் அல்லாதவர்கள் கூட இதை மறுபேச்சில்லாமல் ஒத்துக்கொள்வார்கள். அந்த அளவிற்கு எந்த வித அவசியமில்லாத நடிப்பையும் வெளிப்படுத்தாமல் அட்டகாசமாக நடித்து இருந்தார்.

எந்திரன் படத்தை காப்பி, அந்தக் காட்சி சரி இல்லை இந்தக்காட்சி சரி இல்லை என்று கூறுபவர்கள் கூட எந்த விதத்திலும் ரஜினியின் நடிப்பைக் குறை கூற முடியவில்லை. இதை பலரும் கவனித்து இருப்பீர்கள். இந்தப்படத்தின் கதையை கெடுக்காமல் அவ்வளவு அற்புதமாக நடித்து இருந்தார். ரஜினி நினைத்து இருந்தால் இதைப்போல நடிக்க மாட்டேன் என்று கூறி இருக்கலாம். ஷங்கரும் வேறு மாதிரி எடுத்து இருக்கலாம் ஆனால் இருவருமே கதையின் தன்மை அறிந்து அதன் படி தங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இனி ரஜினியின் நடிப்பைக்குறிப்பிடும் படங்களில் கண்டிப்பாக எந்திரன் படமும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதைப்போல பெருமையை நீண்ட காலத்திற்குப்பிறகு சூப்பர் ஸ்டாருக்கு பெற்று தந்த ஷங்கரை எத்தனை பாராட்டினாலும் தகும். சூப்பர் ஸ்டார் பல நாடுகளில் அறியப்பட்டவர் என்றாலும் எந்திரன் படம் மூலம் இன்னும் பல நாடுகளுக்கு சென்று இருக்கிறார் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். பலரையும் எந்திரன் படத்தின் நடிப்பின் மூலம் வசீகரித்து விட்டார். இதற்கு முழுக்காரணமும் ஷங்கர் அவர்களே! ஷங்கர் எப்போது அழைத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று சூப்பர் ஸ்டார் அவர்கள் கூறியதே இதற்குச்சான்று!

எங்கள் சூப்பர் ஸ்டார் அவர்களை மேலும் பெருமைப்படுத்திய குறிப்பாக பாலிவுட் மூக்குடைத்த இயக்குனர் ஷங்கர் அவர்களை ரஜினி ரசிகர்கள் மனதார வாழ்த்துகிறோம்.

சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு...

சூப்பர் ஸ்டார் அவர்கள் இந்தப்போட்டியில் வெற்றி பெறவில்லையே என்று பலரும் வருத்தப்பட்டு இருப்பீர்கள் அதற்கு அவசியமே இல்லை. தலைவரே இந்தப்போட்டியில் வெற்றி பெற்று இருந்தால் கூட இந்தளவு சந்தோசப்பட்டு இருக்க மாட்டார். ஷங்கர் வெற்றி பெற்றதற்கு அவரை விட அதிகம் சந்தோசப்பட்ட ஒரு மனம் இருக்கும் என்றால் அது சூப்பர் ஸ்டார் தவிர வேறு யாருமில்லை. தலைவருக்கு விருதுகள் வழங்க அனைவரும் வரிசையில் இருக்கிறார்கள் தலைவர் "ம்" என்ற ஒரு வார்த்தைக்கு. எனவே ஷங்கர் போன்றவர்களுக்கே இதைப்போன்ற விருதுகள் உற்சாகங்கள் முக்கியம் தலைவர் இதையெல்லாம் எப்போதே கடந்து விட்டார். எனவே ரசிகர்கள் இதில் வருத்தப்பட எதுவுமே இல்லை. நாம் "ஹரா"வின் சாதனைக்காக காத்திருப்போம் :-)

அன்புடன்
கிரி

www.giriblog.com

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...