
ரஜினிகாந்த் குறித்து வைரமுத்து என்னிடம் ஒன்று சொல்லியுள்ளார். அதை நான் இப்போது சொல்ல மாட்டேன் என்று கூறினார் முதல்வர் கருணாநிதி.
வைரமுத்துவின் மகன் கபிலன் கல்யாணம் இன்று சென்னையில் நடந்தது. முதல்வர் கருணாநிதி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்த திருமணத்தை முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
திருமணத்தை நடத்தி வைத்த பின்னர் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,
கவிப் பேரரசு வைரமுத்து கவிதை படித்தாலும், பேசினாலும் வாழ்த்தினாலும் ஒரே ஸ்டைலில்தான் இருக்கும். அவருடைய காதல் கவிதை வேண்டுமானால் மென்மையாக இருக்கலாம்.
ஆனால் அவருடைய பேச்சில், நடையில், உச்சரிப்பில் அதை காண முடியாது. மணமகன் கபிலன் எனக்கு மகன் போன்றவன் அவனிடம் காட்டும் அன்பு அளவிட முடியாதது.
அண்மையில் கபிலன் எழுதிய புத்தகத்தை படித்தேன். அதில் தன் மனைவிக்கு இல்லத்துக்கு வரப்போகும் அரசிக்கு சில அறிவுரைகளை கூறி இருந்தார்.
உனக்கு பிடித்த சட்டை எனக்கு பிடித்த புடவை அடிக்கடி உடுத்தி கொள்ளும் தியாகம் தவிர்ப்போம். வெளியூர் புறப்படும் போது பதறி வந்து வழி அனுப்பாதே.
வாசல் படி வரை வந்து சொல்ல வேண்டாம். சமையல் அறையில் நின்று கொண்டே சொல். பிரிவின் துயர் குறைப்போம். இந்த கவிதை வரிகள் இப்போது போற்றப்படாவிட்டாலும் எதிர் காலத்தில் போற்றப்படும் என்பதை புரிந்து கொண்டேன்.
வைரமுத்து எதையும் வெளிப்படையாக பேசக் கூடியவர். இங்கு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வைரமுத்து எதையும் வெளியே சொல்ல மாட்டார் என்று குறிப்பிட்டார்.
சூப்பர் ஸ்டாரிடம் ஒன்றை சொல்லி கொள்வேன். உங்களை பற்றி வைரமுத்து என்னிடமும் சொல்லி இருக்கிறார். அதை இப்போது நான் சொல்ல மாட்டேன்.
எதை சொல்ல வேண்டுமோ அதை வைரமுத்து சொல்வார். வைரமுத்து என்றைக்கும் என் தம்பிதான். அவருக்கு நான் அண்ணனாக இருப்பேன். எங்கள் உறவை நான் நினைத்தாலும் பிரிக்க முடியாது என்றார்.
மணமகள் ரம்யா மதுரையைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை மாயாண்டி திருச்சியில், மாஜிஸ்திரேட் ஆக உள்ளார். தாயார் மதுரை யாதவா மகளிர் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றுகிறார்.
திருமணத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகத்தினர், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆசிர்வதித்தனர்.
வைரமுத்துவின் இளைய மகன்தான் கபிலன். மூத்த மகன் கார்க்கி. அவர் ஏற்கனவே காதல் மணம் புரிந்தவர். கபிலன் மணம் புரிந்துள்ள ரம்யா டாக்டராவார்.
கபிலன்-ரம்யா திருமண வரவேற்பு வருகிற 8ம் தேதி மாலை மதுரையில் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment