நம்மை சுற்றி நடக்கும் அரசியல் நிகழ்வுகளை ஆக்கப்பூர்வமாக பரிமாறிக்கொள்ளும் ஒரு சிறிய முயற்சியே இது. மற்றபடி ரஜினி அரசியலுக்கு வருவார் என்றோ அல்லது வரமாட்டார் என்றோ கட்டியம் கூறுவது நமது நோக்கம் அல்ல.
—————————————————————————————————————–
சிரஞ்சீவியின் நிலை ரஜினியிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?
சமீபத்திய தேர்தல் முடிவுகள் நம் சூப்பர் ஸ்டாரின் மனதில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை தெரிந்துகொள்ள அவரது எண்ணற்ற ரசிகர்கள் ஆவலாக உள்ளனர் என்பதை மறுக்க முடியாது. காரணம் தமது ரசிகர்கள் சந்திப்பில் அவர் சொன்னபடி அரசியலில் திறமை, உழைப்பு, புத்திசாலித்தனம் ஆகியவைகள் இருந்தால் மட்டும் ஒருவர் ஜெயித்துவிட முடியாது. எல்லாவற்றுக்கும் மேல் சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை சாதகமாக இருப்பது அவசியம் என்பது சமீபத்திய தேர்தல் முடிவுகள் மூலம் ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
எம்ஜியாருக்கு பிறகு அரசியல் பிரவேசம் செய்த அனைத்து நடிகர்களும் ஒரு வித அவசரத்திலும், உடனிருந்தவர்கள் உசுப்பேத்தியும் தான் நுழைந்தனரே தவிர அவர்களுக்கு உண்மையில் அதற்க்கான தகுதியோ, சூழலோ அல்லது நிர்பந்தமோ இருக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.
ரசிகர்கள் சொன்னாங்க…. அதான் ஆரம்பிச்சோம்….
எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். போல் முதல் தேர்தலிலேயே ஜொலிக்காது போன சிரஞ்சீவியாகட்டும் விஜயகாந்த்தாகட்டும் அரசியல் பிரவேசம் செய்தமைக்கு காரணமாக கூறுவது ஒன்றே ஒன்றைத்தான். “என் ரசிகர்கள் கட்சி துவக்குமாறு வற்புறுத்தினார்கள். அது தான் கட்சி துவக்கினோம்.” ஆனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் வற்புறுத்தியும் கட்சி துவக்க மறுக்கிறார். ஏன் மக்களே வற்புறுத்தியும் துவக்கவில்லை. அந்த ஆண்டவன் சொன்னால் தான் கட்சி துவக்குவேன் என்று கூறிவருகிறார். நம் ரசிகர்களிடையே இந்த பதில் சலிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் அவர் வார்த்தைகளில் உள்ள வலிமையை தற்போது அவர்கள் உணர்ந்திருப்பார்கள். தன்னையே பரிபூரணமாக நம்பும் ஒருவனுக்கு ஆண்டவன் உரிய காலம் வரும்போதும் காட்டாது விட்டுவிடுவானா என்ன?
கடந்த காலத்தில் சிரஞ்சீவியும், மேலும் சில நடிகர்களும் ஆர்பாட்டமாக அரசியல் பிரவேசம் செய்தபோது விரக்தியில் தள்ளப்பட்ட நமது ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரையும் அவ்வாறு நிர்பந்தித்தபோது, கொஞ்சம் கூட பதட்டப்படமால் “பொறுமை… பொறுமை” என்று அவர் சொன்னதன் அர்த்தம் இப்போது பலருக்கு புரிந்திருக்கும்.
சிரஞ்சீவி கடந்த ஆண்டு தமது அரசியல் பிரவேசத்தை தனது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்புக்கிடையே அறிவித்தபோது “அவர் இன்னொரு என்.டி.ஆர்” என்று தான் ஒட்டுமொத்த மீடியாவும் அறிவித்தன. ஆனால் அதே மீடியா இப்போது அவரது தோல்விக்கான காரணங்களை பட்டியலிட்டுக்கொண்டிருக்கிறது. உண்மையில் ஆரம்பத்தில் சிரஞ்சீவிக்கு கிடைத்தது என்.டி.ஆருக்கு கிடைத்தது போல அசத்தலான வரவேற்ப்பு தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதை தக்கவைத்துக்கொள்ள அவர் தவறிவிட்டார் என்பது தான் உண்மை. (சில மாதங்களுக்கு முன்பு, “சிரஞ்சீவி அரசியலில் ஜொலிப்பாரா?” என்ற கேள்விக்கு “சிரஞ்சீவிகாரு இங்கொக்க என்.டி.ஆரு” என்று குமுதம் அரசு பதில்களில் குறிப்பிட்டது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.)
சிரஞ்சீவி - தவறு நிகழ்ந்தது எங்கே?
குடும்பத்தினரின் ஆதிக்கம் கட்சியில் அதிகரித்து, தொண்டர்களிடமிருந்து சிரஞ்சீவி தனிமைப்படுத்தப்பட்டது, சிரஞ்சீவி பணம் பெற்று வேட்பாளர்களை அறிவித்தார் என்பது போன்று பரவிய செய்திகள், காங்கிரசாரை மிக மட்டமாக விமர்சித்து பிரசாரத்தில் ஈடுபட்டது, வேட்பாளர் தேர்வில் ரசிகர்களின் கருத்து புறக்கணிக்கப்பட்டது, என்று சிரஞ்சீவியின் தோல்விக்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் சிரஞ்சீவியின் சாலைப் பிரச்சாரங்களின் போது பல தொண்டர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாயினர். ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டு சிரஞ்சீவியின் இத்தகு பிரச்சாரம் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது என்று கூறி நீதிமன்றம் மேற்படி பிரச்சாரங்களுக்கு தடைவிதித்தது. ஆனால் சிரஞ்சீவி அதை ஏற்றுக் கொள்ளாமால் மேல்முறையீடு செய்தது அவரது ரசிகர்கள் அல்லாத நடுநிலையாளர்கள் பலரை முகம் சுளிக்க வைத்தது என்று நம் ஆந்திர நண்பர்கள் கூறுகிறார்கள். (இத்தகு வாகன பிரசாரத்தை தவிர்த்துவிட்டு அதற்க்கு பதிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட இடங்களில் சிரஞ்சீவி பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்திருக்கலாம் என்பது நம் கருத்து.)
ஆந்திர சட்டமன்ற தேர்தல் - கட்சிகள் பெற்ற வாக்குகள்
மொத்த தொகுதிகள் - 294
காங்கிரஸ் கூட்டணி - 36.07 %வென்ற தொகுதிகள் - 157
தெலுகு தேசம் மகா கூட்டணி - 34.93 %வென்ற தொகுதிகள் - 106
சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் - 15.36 %வென்ற தொகுதிகள் - 18
ஆந்திரம் ஒரேடியாக சிரஞ்சீவியை கைவிட்டுவிட்டதா?
இந்த முடிவுகளின் மூலம் ஆந்திர மக்கள் ஒரேடியாக சிரஞ்சீவியை நிராகரித்துவிட்டார்கள் என்று கருத முடியாது. போனால் போகட்டும் என்று அவருக்கு ஒரு சிறிய ஆனால் அரிய வாய்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறார்கள். இப்போது பிரஜா ராஜ்ஜியம் வைத்திருக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் சராசரி வெளிநடப்பு எதிர்க்கட்சிகள் போலல்லாமால் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டால் இன்னும் பல இடங்களில் வெற்றியை அளித்து அடுத்த முறை அவரது கட்சியை எதிர்க்கட்சியாக உட்காரவைப்பார்கள். அதையும் சரியாக செய்தால் மட்டுமே அதற்க்கு பிறகு ஆட்சியில் உட்கார வைப்பார்கள். அவர் அரசியலை கற்றுக்கொண்டு, நாளும் தெளிந்து பிறகு நம்மை ஆட்சி செய்ய வரட்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
ரஜினிக்கும் பொருந்துமா?
சரி, இதே விஷயம் ரஜினிக்கும் பொருந்துமா? நிச்சயம் கிடையாது. காரணம்- என்னைப் பொறுத்தவரை - சூப்பர் ஸ்டார் என்றைக்கு திமுக-தமாகா கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டு அவர்களுக்காக டெலிவிஷனில் பிரச்சாரம் செய்தாரோ அன்றைக்கே அவர் அரசியல் பிரவேசம் செய்துவிட்டார். அதற்க்கு பிறகு இத்துணை வருடங்கள் அவர் மறைமுகமாக பல வெற்றி, தோல்விகளை கண்டு அரசியலை தெள்ளத் தெளிவாக கற்றுக்கொண்டுவிட்டார். அதாவது துரோணரிடம் மறைமுகமாக வில்வித்தை கற்ற ஏகலைவன் போல. ஏகலைவன் அதற்காக தனது கட்டைவிரலை காணிக்கையாக கொடுத்தது போல ரஜினி இந்த கற்றலுக்காக காலத்திடம் தமது செல்வாக்கை சில முறை விலை கொடுக்கவேண்டியிருந்தது. (1998 மற்றும் 2004 தேர்தல் முடிவுகள் ஞாபகமிருக்கிறதா?).
சிரஞ்சீவி ஏன் தோற்றார்… எப்படி தோற்றார்?
சிரஞ்சீவி தோற்றதற்கான காரணங்களை பல ஊடகங்கள் அலசியிருப்பினும் உண்மையில் சிறப்பாக அலசியுள்ள Rediff.com மற்றும் Deccan Herald ஆகியவற்றின் கட்டுரைகளின் வெப் முகவரியை அளித்திருக்கிறேன். ஒரு முறை படியுங்கள். ப்ளீஸ்.
Trouble began at home for Chiru - Rediff.comhttp://election.rediff.com/slide-show/2009/may/22/slide-show-1-why-did-chiranjeevi-fail-in-polls.htm
What went wrong for Chiranjeevi?http://world.rediff.com/election/report/2009/may/17/loksabhapoll-what-went-wrong-for-chiranjeevi.htm
Why Chiru charisma failed to strike chord with voters?http://www.deccanherald.com/content/3438/chiru-charisma-failed-strike-chord.html
விஜயகாந்த்?
தமிழகம் மற்றும் புதுவை மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் மொத்தம் 3,38,83,049 வாக்குகள் பதிவாயின. மொத்தம் பதிவான வாக்குகளில் தேமுதிக 30,72,881 வாக்குளைப் பெற்றுள்ளது. இது கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி பெற்ற 8.33 % சதவீதத்தை விட சுமார் 2 % அதிகமாகும்.
தேமுதிகவுக்கு இந்த தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் டெப்பாசிட் பறிபோய் மூன்றாவது இடமே கிடைத்தது…. ஏன் சில தொகுதிகளில் நான்காவது இடம் தான். பிரஜா ராஜ்ஜியமும் தேமுதிகவும் ஆளுங்கட்சிக்கெதிரான ஒட்டுக்களை பிரித்து அவர்கள் வெற்றிபெற உதவியாயிருக்கின்றனர் என்ற ஒரு ஒற்றுமையை தவிர்த்து - சிரஞ்சீவியையும் விஜயகாந்த்தையும் இவ்விஷயத்தில் ஒப்பிட முடியாது என்பது அடிப்படை உண்மை.
காரணம் விஜயகாந்த் சிரஞ்சீவிபோல “டாப் ஸ்டார்” அந்தஸ்து நடிகர் அல்ல. இதனால் சினிமாவில் பெரிதாக சாதிக்கமுடியாத விஜயகாந்த் அரசியல் அரங்கில் பெற்றுள்ள வாக்குகள் ஒவ்வொன்றும் தானாகவே முக்கியத்துவம் பெறுகிறது. இரு கழகங்கள் மேல் மக்களுக்கு உள்ள வெறுப்பும் சலிப்பும் விஜயகாந்த்துக்கு வாக்குகளாக மாறுகிறது என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடியது. ஆனால் மக்களை மேலும் கவரும் கலையை விஜயகாந்த் சரிவர கற்கவில்லை என்று தான் தெரிகிறது. இல்லையெனில் இந்த தேர்தலில் இன்னும் அவர் கூடுதல் வாக்குகளை பெற்றிருப்பார். நாம் அறிந்தவரையில் கடந்த சட்டமன்ற தேர்தலிலும் சரி, இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் சரி, முதல் முறை ஓட்டளித்த பல இளம் வாக்காளர்களின் சாய்ஸ் தேமுதிகவாக இருந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
கீழ் காணும் Rediff.com கட்டுரையை காண்க…
How Captain was able to pull votes?http://world.rediff.com/election/report/2009/may/08/voter-voice-waiting-for-captain-to-rule-tamil-nadu.htm
அதேசமயம் தனித்து ஆட்சியை பிடிக்குமளவிற்கு விஜயகாந்திற்கு CAPACITY கிடையாது என்பதும் தெரிந்ததே. வரும் சட்டமன்ற தேர்தலில் இவர் வாக்கு வங்கியுள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்தால்தான் அடுத்த நிலைக்கு முன்னேற முடியும். ஆனால் இவருடன் கூட்டணி வைக்க முன்வருபவர்கள் இவரை ‘முதலைமச்சர்’ வேட்பாளராக ஒப்புக்கொள்வார்களா என்பது சந்தேகமே. அப்படி அவர்கள் இவரை முதல்வர் வேட்பாளராக ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் 2011 முதலமைச்சாரகவே தன்னை நினைத்துக்கொண்டிருக்கும் கேப்டன் அதை ஏற்றுக்கொள்வாரா? அல்லது யதார்த்தை புரிந்துகொள்ளும் பக்குவம் தான் அவருக்கு இருக்கிறதா? விஜயகாந்த் இப்படி தொடர்ந்து ஓட்டுக்களை மட்டுமே பிரித்து கொண்டிருப்பதால் அடுத்த தேர்தலில் இவரை ஒரேடியாக மக்கள் நிராகரிக்கும் வாய்ப்பிருக்கிறது. ஒரு மாற்றாக இவரை நினைத்து மக்கள் இவருக்கு அளிக்கும் வாக்குகள் இப்படி தொடர்ந்து வீணானால் அதே மக்கள் இவரை புறக்கணிக்கவும் தயங்கமாட்டார்கள்.
முக்கிய கட்டத்திற்கு வருவோம்…
மேற்படி தேர்தல் முடிவுகள் சூப்பர் ஸ்டாரிடம் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?
கடந்த பல ஆண்டுகளாக அரசியல் அரங்கை கூர்ந்து கவனித்து, அரசியலை அக்கு வேறு ஆணிவேராக படித்து வரும் சூப்பர் ஸ்டார் இந்த தேர்தல் முடிவுகளினால் மேலும் பக்குவமாகியிருப்பார் என்பது தான் உண்மை.
ஒருவர் தமது அனுபவங்களிலிருந்து தான் அனைத்தையும் கற்றுக்கொள்ளவேண்டும் என்றில்லையே…. அடுத்தவர்கள் அனுபவத்திலிருந்தும் கற்றுக்கொள்ளலாமே… புத்திசாலிகள் அப்படித்தானே செய்வார்கள். ஒருவேளை எதிர்காலத்தில் ரஜினி அரசியல் பிரவேசம் செய்ய நேர்ந்தால் நிச்சயம் விஜயகாந்த், சிரஞ்சீவி ஆகியோர் செய்த தவறுகளை நிச்சயம் தவிர்ப்பார் என்று நம்பலாம்.
மற்றவற்றிர்க்கு அந்த காலம் தான் பதில் கூறவேண்டும்.
No comments:
Post a Comment