அமரர் கே பாலாஜிக்கு ரஜினி அஞ்சலி!

பழம்பெரும் நடிகரும், பட அதிபருமான கே.பாலாஜி சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74. அவருடைய உடல் தகனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
'படித்தால் மட்டும் போதுமா', `விடிவெள்ளி', `பலே பாண்டியா' உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர், கே.பாலாஜி. `ராஜா', `எங்கிருந்தோ வந்தாள்', `நீதி', `திராவிடன்', `பில்லா' உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களை சொந்தமாக தயாரித்தும் இருக்கிறார்.
கே.பாலாஜிக்கு 10 வருடங்களுக்கு முன்பு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அவருக்கு, 'ஆபரேஷன்' மூலம் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. கடந்த 10 வருடங்களாக அவருக்கு 'டயாலிசிஸ்' செய்யப்பட்டு வந்தது.
மரணம்
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கே.பாலாஜியின் உடல்நிலை மோசமானது. அவருக்கு மூச்சுத் திணறலும், ரத்தக் கசிவும் ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவரை, சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அவரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள்.
நேற்று மாலை 5 மணிக்கு, சிகிச்சை பலன் அளிக்காமல் கே.பாலாஜி மரணம் அடைந்தார். அவருடைய உடல், ஆஸ்பத்திரியில் இருந்து சென்னை எழும்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ஜெயலலிதா அஞ்சலி
ஏராளமான நடிகர்-நடிகைகளும், திரையுலக பிரமுகர்களும் கே.பாலாஜியின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு கோவையில் இருந்து சென்னை திரும்பிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கே.பாலாஜியின் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இன்று உடல் தகனம்
இறுதி சடங்குகளுக்குப்பின், இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு கே.பாலாஜியின் உடல் அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக பெசன்ட்நகர் மின்சார மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு மாலை 3 மணிக்கு தகனம் செய்யப்படுகிறது.
கே.பாலாஜியின் மனைவி பெயர் ஆனந்தவல்லி. இவர்களுக்கு சுரேஷ் பாலாஜி என்ற மகனும், சுஜாதா, சுசித்ரா என்ற 2 மகள்களும் இருக்கிறார்கள்.
சுசித்ராவின் கணவர் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணியமிக்க பட அதிபர்!
பாலாஜியின் பூர்வீகம் கேரளா. ஆரம்ப காலத்தில் அவர் சென்னை கிண்டியில் இருந்த நரசுஸ் ஸ்டூடியோவில், தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார். 'அவ்வையார்' என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். அதைத்தொடர்ந்து, 'மனமுள்ள மறுதாரம்,' 'சகோதரி,' 'பலே பாண்டியா,' 'படித்தால் மட்டும் போதுமா' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
'அண்ணாவின் ஆசை' என்ற படத்தை முதன் முதலாக சொந்தமாக தயாரித்தார். அந்த படத்தில் ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்தார். அதன்பிறகு சிவாஜிகணேசனை வைத்து, ராஜா, நீதி உள்பட 17 படங்களை தயாரித்தார். சிவாஜியை வைத்து தொடர்ந்து அதிக படங்கள் தயாரித்த பட அதிபர் இவர்தான்.
ரஜினியுடன்...
ரஜினியை வசூலில் நிரந்தர சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தி பில்லா படத்தின் தயாரிப்பாளர் கே பாலாஜி. அந்தப் படத்தில் டிஎஸ்பி வேடத்திலும் நடித்திருப்பார்.
தொடர்ந்து ரஜினியை வைத்து தீ, விடுதலை என படங்கள் தந்தார். ரஜினியும் பாலாஜியும் ஒருவர் மீது ஒருவர் பெரும் மதிப்பு வைத்திருந்தனர்.
ரஜினியைப் போல தயாரிப்பாளர்களை மதிக்கும் ஹீரோக்கள் இப்போது இல்லாமல் போனதாலேயே புதிய படங்கள் எடுப்பதை நிறுத்திக் கொண்டதாக பில்லா படத்தின் ரீமேக் துவக்க விழாவில் பாலாஜி கூறியிருந்தார்.

இன்று காலை பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ரஜினி.
“எனது குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்ட மாதிரி பீல் பண்றேன்… அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. எனது குடும்ப நண்பரை இழந்தது வருத்தமளிக்கிறது”, என்றார் ரஜினி.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...