ரஜினி என்பவர் தனி மனிதரல்ல... அவரது சமூகம் மிகப் பெரியது...


ஒருவரைப் பாராட்டுவது என்று முடிவு செய்துவிட்டால், வஞ்சனையில்லாமல் பாராட்டி மகிழ்வார் ரஜினி. ஆனால் யாரைப் பாராட்ட வேண்டும், எதற்காகப் பாராட்ட வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருப்பார்!
இந்த புத்தாண்டு பிறந்ததிலிருந்து வெளியான படங்களில் அவர் பார்த்து பாராட்டிய படங்கள் அமோகமாகவே ஓடிக் கொண்டிருக்கின்றன.
அதாவது ரஜினி பாராட்டியதால்தான் அவை ஓடுகின்றன என்று நாம் சொல்ல வரவில்லை. ரஜினியின் பாராட்டுக்கள் அந்த நல்ல படங்களை இன்னும் பட்டிதொட்டியெல்லாம் கொண்டு போய்ச் சேர்த்துள்ளன.
நான் கடவுள், பாலா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம். மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வந்த அந்தப் படத்தின் வர்த்தகத்துக்கு ரஜினியின் பாராட்டு எந்த அளவு உதவியது என்பதை, படத்தின் 10வது போஸ்டர்களைப் பார்த்தவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.
தலைவர் அதற்கு முன்பே பார்த்துப் பாராட்டிய படம் வெண்ணிலா கபடிக் குழு. இந்தப் புத்தாண்டுக்குப் பிறகு வெளியான படங்களில் நின்று ஓடிக் கொண்டிருப்பவை இவை இரண்டு படங்கள்தான்.
நேற்று அந்தப் படத்தின் 30வது நாளுக்கு, மாநிலம் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள், சூப்பர் ஸ்டார் தங்களுடன் நிற்கும் ஸ்டில்லை பெரிதாக வைத்து.
நான் கடவுள், வெண்ணிலா கபடிக் குழு இரண்டுமே அருமையான படங்கள். அந்த நல்ல படங்கள் இன்னும் அதிக மக்களைச் சென்று சேர ரஜினியின் இந்த பாராட்டுரைகள் உதவியிருக்கின்றன.
இன்னொன்று ரஜினி என்பவர் தனி மனிதரல்ல... அவரது சமூகம் மிகப் பெரியது. தன்னை நேசிக்கும் கோடிக்கணக்கான மக்கள், பின்பற்றும் தீவிர ரசிகர்களைக் கொண்ட ஒரு சமூகம் அது.
தான் ஒரு படத்தைப் பற்றி நல்ல விதமாகத் தரும் சான்று, தனது சமூகத்தின் பெரும்பான்மை நபர்களை அந்தப் படம் ஓடும் திரையரங்குகளுக்குக் கொண்டு செல்லும் என்பது அவருக்கும் தெரியும். அதுதான் ரஜினியின் பாராட்டினால் ஒரு தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் கிடைக்கிற நேரடி பலன்!
அதேநேரம் சரியான ஒன்றை மட்டுமே அவர் எப்போதும் முன்னிறுத்துவதையும் கவனிக்க வேண்டும்.
சில தினங்களுக்கு முன் வெண்ணிலா கபடிக்குழு படம் பார்த்து பாராட்டியதோடு நில்லாமல், அந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருந்த புதுமுகம் விஷ்ணுவையும் மண்டபத்துக்கு வரவழைத்துப் பாராட்டி இன்ப அதிர்ச்சி தந்துள்ளார் சூப்பர் ஸ்டார்.
ஒரு தேசிய விருதுக்குச் சமமான பெருமையை, மகிழ்ச்சியைத் தந்ததாக சிலிர்க்கிறார் விஷ்ணு, அந்த நிகழ்வை நினைத்து.
'உண்மைதாங்க... நானெல்லாம் தலைவர் படத்தை பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பாக்குற ஆளுங்க. அவரை நேர்ல பார்ப்பேன், இவ்வளவு பெரிய பாராட்டை வாங்குவேன்னு சத்தியமா கனவு கூட காணலை. எனக்கு தலைவர் பாராட்டே தேசிய விருது மாதிரிதான்', என்கிறார் விஷ்ணு.
'முதல்படமே நல்லா பண்ணியிருக்கீங்க... இனி நிறைய வாய்ப்புகள் வரும், வர்ற எல்லாத்தையும் ஒப்புக்காம, நல்ல குழு, கதை இருக்கிற படமா பாத்து கமிட் ஆகுங்க, என்று ரஜினி சார் சொன்னதை வாழ்க்கையின் மந்திரமாக கடைப்பிடிப்பேன்', என்கிறார் விஷ்ணு.
அதான் நம்ம தலைவரோட ஸ்பெஷல். அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவர் அனுபவத்திலிருந்தே பிறந்தவை என்பதால்தான் அவற்றுக்கு வலிமையும் அதிகம்!
-சங்கநாதன்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...