ஒரு ரொமான்ஸ் காட்சி, ஒரு சண்டைக் காட்சி - எந்திரன் ஷூட்டிங் தகவல்கள்!!


நண்பர்களே, இந்த வார குமுதத்தில் வந்த எக்ஸ்க்ளூசிவ் சிறப்பு கட்டுரை இது. கோவாவுக்கு சென்று கவர் செய்துவந்திருக்கிறார்கள்.
படத்தில் கலாபவன் மணி, கொச்சின் ஹநீபா (நிஜமாவே குத்திட்டான் சார்), ஆகியோர் நடிப்பது இந்த ஸ்பெஷல் கட்டுரை மூலம் நமக்கு தெரிகிறது. நல்ல சாய்ஸ்.
படம் களை கட்டும் என்று எதிர்பார்க்கலாம்.
…………………………………………………………………………………………………………………
Over to குமுதம்
…………………………………………………………………………………………………………………

நூறடிக்கு ஒரு செக்யூரிட்டி வாக்கிடாக்கியுடன் நிற்க, எட்டிப் பார்த்தால் கூட தெரிந்து விடக்கூடாது என்ற சூழலில் ரஜினி_ஐஸ்வர்யா நடிக்கும் `எந்திரன்’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். மேலே குட்டிக் குட்டியாய் நீங்கள் பார்க்கும் படங்கள் கோவா ஷூட்டிங் ஸ்பாட்டில் தூரத்திலிருந்து ஜூம் கேமராவில் நாம் கிளிக்கியது. குடைகளுக்குள் ரஜினியும் ஐஸ்வர்யாவும், இன்னொரு படத்தில் ஐஸ்வர்யாவும் கணவர் அபிஷேக்கும். அம்புக்குறி போட்டு, லென்ஸ் வைத்துப் பார்க்க வேண்டிய படங்களா கத்தான் பத்திரிகைகளுக்கு இப்போது எந்திரன் ஸ்டில்கள் கிடைக்கின்றன. எல்லாம் ஷங்கர் ராஜ்ஜியம்.
அணுகுண்டு ரகசியத்தைவிட, ரகசியம் காக்கிறார்கள் படக் குழுவினர். படப்பிடிப்பு தளத்தில் ஏகப்பட்ட விதிகள்.
ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து 100 மீட்டருக்கு யாரும் உள்ளே நுழைந்துவிடாதபடி பம்பாயி லிருந்து வரவழைக்கப்பட்ட தனியார் செக்யூரிட்டிகள். யாராவது செல்போனில் படமெடுக்கிறார்களா என்பதை கண்காணிக்கவே நான்கு ஸ்பெஷல் செக்யூரிட்டிகள்.
இன்று எங்கு ஷூட்டிங் என்று அன்று காலைதான் அறிவிக்கிறார் ஷங்கர்.
படப்பிடிப்புக் குழுவினர் வெளியாட்களிடம் வாயைத் திறக்கக்கூடாது என்ற கட்டளை கடுமையாக பின்பற்றப்படுகிறது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் சுதந்திரமாய் இருப்பது மூவர்தான். ரஜினி, ஐஸ்வர்யா, ஷங்கர்.
`எந்திரன்’ படத்தின் படப்பிடிப்பு எப்படி நடக்கிறது என்பதை சொல்லியாகிவிட்டது. இனி என்ன காட்சிகள் எடுத்தார்கள் என்ற விவரம் குமுதம் வாசகர்களுக்கு எக்ஸ்க்ளூசிவ்வாக.
கோவாவின் தலைநகர் பன்ஜிம் (பானாஜி) ஐநாக்ஸ் தியேட்டர் அருகே, கம்பால் ஓட்டல். புல்வெளியில் பிரெஞ்ச் தாடியுடன், புளூ ஜீன்ஸ், சந்தன கலர் ஷர்ட், கருப்பு கலர் கோட் ஜாக்கெட்டுடன் விஞ்ஞானியாக புயலென வருகிறார் ரஜினி. எதிரே ஐஸ் நிற்கிறார்.“ஆக்ஷன்” ஷங்கர் உரக்கக் கத்துகிறார்.
தன் கையிலிருந்த ஃபைலைக் காட்டி ஐஸ்ஸுடன் ரஜினி ஏதோ விவரிக்க, ஐஸ் கோபமாகப் பேசுகிறார். ரஜினி விளக்கிக் கூறிய பின்பும் ஐஸ் கோபம் தீரவில்லை, ஃபைலை டேபிள் மீது கோபத்துடன் வீசி எறிகிறார் ரஜினி.
“கட். ஷாட் ஓக்கே!”
அடுத்த சீன்…
ரஜினி அதே இடத்தில் நிற்க,
ரஜினியின் கழுத்தைப் பிடித்து இழுத்து, கட்டிப்பிடித்து கன்னத்தில் “இச் இச்” என்று முத்தங்கள் வைக்கிறார் ஐஸ்.
கோபமாய் ஃபைல் வீசிய காட்சி ஒரே டேக்கில் படமாக்கப்பட, ரஜினிக்கு ஐஸ் கொடுத்த முத்தக் காட்சி மூன்று டேக்குகளுக்குப் பிறகுதான் ஓகே ஆனது. (ஹி ஹி)
அடுத்த சீன் கிரீன் பார்க் ஹைவேஸ் ரோடு, ரஜினியும் ஐஸும் வெள்ளை நிற காரில் பேசிக்கொண்டே போகும் காட்சி.
அடுத்து `தேரி’ கடற்கரையில். காரிலிருந்து இருவரும் இறங்கிவர, ஐஸ்வர்யா ரஜினியிடம் கோபித்துக்கொண்டு தனியாகப் போய் அமர்வது போன்ற இன்னொரு காட்சி.
அடுத்து ஒரு சண்டைக்காட்சி. கடற்கரையில் அஜோப்பா மந்திர் என்ற இடத்தில் படமாக்கப்பட்டது.
மரம் ஏறும் தொழிலாளியாக வரும் கலாபவன் மணி ஐஸ் கையைப் பிடித்து இழுத்து வம்பு பண்ணுகிறார். அங்கே ஐஸ்வர்யாவைக் காப்பாற்றுவதற்காக கலாபவன் மணியோடு ரஜினி மோதுகிறார்.
அடுத்து இன்னொரு ஓட்டலுக்கு படப்பிடிப்புக்குழு இடம்மாறுகிறது. கைப்பையை எடுத்துக்கொண்டு ஐஸ்ஸை இழுத்துக்கொண்டு வேகமாக ரஜினி காரில் ஏற முயல்கிறார். அப்போது ஐஸ் மயங்கிக் கீழே விழ, அவரைத் தாங்கிப்பிடித்து காரில் ஏற்றிக்கொண்டு ரஜினி வண்டியைக் கிளப்ப, டிராபிக் போலீஸாக வரும் கொச்சின் ஹனீபா `போலீஸ் போலீஸ்’ என்று வண்டியை நிறுத்த முயற்சிக்கிறார். வண்டி நிற்காமல் செல்கிறது. இது அங்கு எடுக்கப்பட்ட காட்சி.
விஞ்ஞானி ரஜினியும், ரோபோ ரஜினியும் சந்தித்து ஆக்ரோஷமாகப் பேசும் காட்சியும் கோவாவில் ஒரு ஓட்டலில் எடுக்கப்பட்டது. வீல் சேரில் சுற்றிச் சுற்றி ரோபோ ரஜினி கர்ஜிக்க, அதே இடத்தில் விஞ்ஞானி ரஜினி ஆவேசமாய் பேசும் காட்சியும் எடுக்கப்பட்டது. இந்த இரண்டு காட்சிகளும் தனித்தனியாக எடுக்கப்பட்டாலும் திரையில் இருவரும் எதிரெதிரே பேசுவதுபோல் பரபரப்பாக வருமாம். ரோபோ ரஜினிக்கு கருப்பு ஜீன்ஸ், கருப்பு டி.ஷர்ட், கருப்பு கண்ணாடி இதுதான் காஸ்ட்யூம்.
ஒரு வாரம் நடந்த ஷூட்டிங்கில் ஒருநாள் ஐஸ்ஸைப் பார்க்க கணவர் அபிஷேக் வந்து போனார். அந்தப் படத்தையும் நூறு மீட்டர் தூரத்திலிருந்து ஜூம் போட்டு எடுத்ததில் முதுகுகள் மட்டும் தெரிந்தன. இந்தப் படத்துக்கும் அம்புக்குறியும் லென்ஸும் தேவை.
படத்தில் இன்னொரு விசேஷம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் அஸிஸ்டெண்ட் இயக்குநராக வேலை பார்ப்பது. எதைக் கேட்டாலும் `சஸ்பென்ஸ்’ என்கிறார்.
ஒரு வருடம் கழித்து படம் வரும் போது எல்லா சஸ்பென்ஸும் தீர்ந்து விடும்..
- கோவாவிலிருந்து நேரடி ரிப்போர்ட் அரவிந்த்.
என்ன சாப்பிடுகிறார்கள்?
ஐஸ்ஸுக்குப் பிடித்த மெனு சப்பாத்தி, சிக்கன் குழம்பு, சிக்கன் லாலிபாப். மதியம் சுடச்சுட 6 லாலிபாப் வேணுமாம்.
ரஜினிக்குப் பிடித்த மெனு மீன் குழம்பு, மீன் ரோஸ்ட்தானாம்.
ஷங்கருக்கு, உப்புக்கறிதான், அதற்காகவே தனி சமையல் ஆள் உப்புக்கறி சமைக்கிறார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...