ரஜினியை தேடிப் போய் விருது தருவதா?-அமீர்
தங்கள் வியாபாரத்துக்காக ரஜினியைத் தேடிப்போய் விருது தரும் போக்கை சிலர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார் அமீர்.திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தமிழில் முதன் முறையாக 2007ம் ஆண்டுக்கான திரைப்பட விமர்சகர் விருது வழங்கும் விழா நடந்தது.போர் பிரேம்ஸ் அரங்கில் நடந்த இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் கே.பாலச்சந்தர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.சிறந்த இயக்குநருக்கான விருதினை பருத்திவீரன் பட யக்குநர் அமீருக்கு வழங்கினார். விருதினைப் பெற்றுக் கொண்டு ஏற்புரையாற்றிய அமீர் கூறியதாவது:பொதுவாக விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதினைத்தான் கடைசியில் வழங்குகிறார்கள். அப்படி வழங்குவதுதான் கெளரவம் என்பதால் கடைசியில் வழங்குகிறார்கள்.இது மிகவும் தவறு. ஒரு திரைப்படத்தில் நடிகனின் பங்களிப்பு மிகவும் குறைவு. இயக்குனர்கள் சொல்வதைச் செய்பவன்தான் நடிகன். எனவே இயக்குனர்களுக்குத்தான் விருது வழங்கும் விழாக்களில் முதலிடம் அளிக்க வேண்டும்.அடுத்தது, சிறந்த நடிகர் என இவர்கள் எந்த அடிப்படையில் ரஜினிக்கும், விஜய்க்கும் தருகிறார்கள்?. அவர்கள் விருதுக்குரிய கதைகளைத் தேர்வு செய்வதே இல்லையே... அவர்களுக்கு எப்படி இந்த விருதுகளை வழங்கலாம்?.ரஜினியை சிறந்த நடிகர் என அறிவித்து, அவர் இருக்கும் இடத்துக்கே போய் அந்த விருதைக் கொடுப்பது மிகப் பெரிய கேவலம். இது வியாபாரத்தனமல்லாது வேறல்ல.ரஜினியை நான் மதிப்பவன் என்பது வேறு விஷயம். ஆனால் அவர் விருதுக்குரிய கதைகளில் நடிக்காத நிலையில், அவரைத் தேடிப் போய் விருது கொடுப்பது எங்களைப் போன்றவர்களை அவமானப்படுத்தும் செயல் என்றார் அமீர்.ரஜினி, கமல் வளர்ந்ததற்கு நான் பொறுப்பல்ல!:விருதுகளை வழங்கிப் பேசிய பாலச்சந்தர் கூறியதாவது:அமீர் சொன்ன கருத்துக்களை நூறு சதவிகிதம் அப்படியே ஏற்கிறேன். ரஜினியும் கமலும் இருந்தால்தான் என்னால் படமெடுக்க முடியும் என்ற நிலை இல்லை. நான் அவர்களை வைத்துப் படமெடுத்தபோது அவர்கள் சாதாரண நடிகர்களே.இன்று அவர்கள் வளர்ந்து விட்டார்கள். அது அவர்கள் திறமை. அதற்கு நானா பொறுப்பு? இன்றைக்கு என் படத்தில் ஏதோ.. போனால் போகட்டும் என்று உதவும் நோக்கில் நடித்துக் கொடுக்கிறார் ரஜினி. மற்றபடி அமீர் சொல்வதை நான் மனப்பூர்வமாக நூறு சதவிகிதம் ஏற்கிறேன்.இந்த விருது 25 ஆண்டுகளுக்கு முன் தரப்பட்டிருந்தால் அதை நானும் வாங்கியிருப்பேன். அத்தனை சிறப்பு திரைப்பட விமர்சகர் விருது எனும் தலைப்புக்கு உண்டு. தாமதமாக என்றாலும் இப்போதாவது வழங்கப்படுவதில் எனக்கு மகிழ்ச்சி, என்றார் பாலச்சந்தர்.சிறந்த படமாக பருத்தி வீரனுக்கு விருது வழங்கப்பட்டது. சிறந்த திரைக் கதாசிரியர் வெங்கட் பிரபு (சென்னை - 28), சிறந்த இசையமைப்பாளர் (யுவன் சங்கர் ராஜா) சிறந்த கதாசிரியர் ராம் (கற்றது தமிழ்), சிறந்த வசனகர்த்தா விஜி (மொழி), சிறந்த ஒளிப்பதிவாளர் கதிர் (கற்றது தமிழ்), சிறந்த பாடலாசிரியர் முத்துக்குமார் ஆகியோருக்கு திரைப்பட இயக்குனர் பாலசந்தர் விருதுகளை வழங்கினார்.பத்திரிகையாளர் சங்கத்துக்கு நிதியுதவி செய்த ஜே.கே.ரித்தீசுக்கு விழாவில் சங்கத்தின் சார்பில் பாலச்சந்தர், அமீர் ஆகியோர் மரியாதை செய்தனர்.சத்யராஜ் சிறந்த நடிகராகவும் (ஒன்பது ரூபாய் நோட்டு), ப்ரியாமணி (பருத்தி வீரன்) சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்ப்பட்டனர்.முன்னதாக, திரைப்பட பத்திரிகையாளர் சங்க நிறுவனத் தலைவர் ஐயப்ப பிரசாத் வரவேற்றுப் பேசினார். சங்கத் தலைவர் அ.தமிழன்பன் தலைமையுரையாற்றினார். செயலாளர் ரவிஷங்கர் நன்றி கூறினார்.துணைத் தலைவர் வி.கே.சுந்தர், இணைச் செயலாளர்கள் ராதாராஜ், ஜெ. பிஸ்மி, பொருளாளர் மேஜர்தாசன் ஆகியோர் விருந்தினர்களை கெளரவித்தனர். வண்ணத்திரை பொறுப்பாசிரியர் நெல்லை பாரதி நிகழ்ச்சியை மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment