ரஜினி எடுக்கப்போகும் முடிவு

அப்பாடி... ஒரு மாதம் ரிலாக்ஸ்! எந்திரன் படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்லும் ரஜினி ஒரு மாதம் அங்கேயே தங்கி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். வரி விலக்குக்காக ரோபோ எந்திரன் ஆகிவிட்டது. வெளிநாட்டு தொழில் நுட்ப கலைஞர்களுடன், கோதாவில் இறங்கிவிட்டார் ஷங்கர்.
யானை, குதிரை டயலாக்கெல்லாம் ஏற்கனவே சொல்லி முடித்துவிட்ட ரஜினிக்கு குசேலன் கொடுத்த தோல்வி மட்டுமல்ல, ரசிகர்களின் வற்புறுத்தலும் சேர்ந்து துரத்துகிறது. இந்த துரத்தல் அமெரிக்கா வரைக்கும் தொடர்ந்தாலும் ஆச்சர்யமில்லை! ஏனென்றால், ரஜினி கட்சி ஆரம்பிக்கிற வரை விடமாட்டார்கள் போலிருக்கிறது அவரது ரசிகர்கள்.
சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் 12 மாவட்டத்தை சேர்ந்த தலைமை நிர்வாகிகள், ரசிகர் மன்ற தலைவர் சத்யநாராயணாவை சந்தித்து ஒரு மனு கொடுத்திருக்கிறார்கள். அதில், ரஜினி தனியாக கட்சி கூட ஆரம்பிக்க வேண்டாம். சேவை அமைப்பு ஒன்றை துவங்கி எங்களிடம் ஒப்படைக்க சொல்லுங்கள். அதை எப்படி நடத்துகிறோம் என்று கண்காணிக்க சொல்லுங்கள். சரியாக நடத்துகிறோம் என்ற நம்பிக்கை ஏற்படும் பட்சத்தில் அதையே அரசியல் கட்சியாக மாற்றிக் கொள்ளலாம் என்று ஐடியா கொடுத்தார்களாம். கையோடு கையாக செல்போன் மூலம் இந்த யோசனையை ரஜினிக்கு தெரிவித்தாராம் சத்யநாராயணா.
ஒரு மாதம் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பி விடுவேன். அப்போது இதே நிர்வாகிகளை அழைத்து பேசி ஒரு முடிவுக்கு வருவோம். நிச்சயம் நல்ல முடிவாகவே இருக்கும் என்றாராம் ரஜினி. இது போதாதா? நம்பிக்கையோடு கலைந்திருக்கிறார்கள் ரசிகர்கள். ஒரு மாசத்துக்கு இன்னும் முப்பது நாள்தானே இருக்கு? பார்ப்போமே அதையும்!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...