ரஜினி ஒரு வகையில் எனக்கு தெய்வம்தான்

மறைந்த கலைஞர்களில் பலருக்கும் பிடித்த நடிகர் வி.கே.ராமசாமி அவர்கள். பிறவிக் கலைஞர் என்பார்களே... அந்த வார்த்தைக்குப் பொருத்தமானவர் வி.கே.ஆர். அவரது ரசிப்புக்குரிய பாத்திரங்கள் ஒன்றா இரண்டா... பல நூறு.ஆனாலும் கடைசிவரை அலட்டிக் கொள்ளாமல் வாழ்ந்தவர்.நமது சூப்பர் ஸ்டாரின் பெரும்பாலான படங்களில் வி.கே.ஆரைக் கட்டாயம் பார்க்கலாம்.எம்ஜிஆர், சிவாஜிக்கு அடுத்து தன் மனதில் மிக உ.யர்ந்த இடத்தை ரஜினிக்கு மட்டுமே அவர் கொடுத்திருந்தார். ஒரு கட்டத்தில் இந்த இரு பெரும் மேதைகளையும் தாண்டி மேலான இடத்தை ரஜினிக்குத் தந்திருந்தார். அதை நான் உணர்ந்த அந்த நிமிடத்தை இப்போது நினைத்தாலும் கண்கள் பனிக்கின்றன. அவரைச் சந்தித்து, ஒரு பத்திரிகையாளனாக இல்லாமல், கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்று ஆசை. அருணாச்சலம் படப்பிடிப்பிலிருந்த வி.கே.ஆரிடம் என் விருப்பத்தை ஒரு பி.ஆர்.ஓ. மூலம் சொன்னேன்.அதுக்கென்ன இருக்கு... கழுத காசா பணமா... வாங்க.. வாங்க! என்றார் வாய் நிறைய!ஆனால் உடனே என்னால் அவரைப் பார்க்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. பாபா ரிலீசாகி இரண்டு வாரங்கள் கழிந்திருந்தது. ஊரே அந்தப் படத்தைப் பற்றி தாறுமாறாக விமர்சித்துக் கொண்டிருந்த தருணம். அப்போதுதான் வி.கே.ஆருக்கு உடல் நிலை சரியில்லாத செய்தி அறிந்து இன்னும் இரு பத்திரிகை நண்பர்களுடன் அவரைப் பார்க்கச் சென்றேன். வரவேற்பறையில் தளர்வாய் சாய்ந்திருந்தார்...‘வாங்க... வாங்க...’ குரலில் தளர்வு இருந்தாலும், உற்சாகம் தொக்கி நின்றது.சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தோம்.‘எதும் பேட்டி கீட்டி எடுக்கணுமா...?’‘அதெல்லாம் ஒணுமில்லண்ணே. சும்மா பார்த்துட்டுப் போகலாம்னு வந்தோம்...’‘பாபா பார்த்திட்டீங்களா... எப்படியிருக்கு... என்னென்னமோ பேசிக்கிறாங்களே..’ என்றார்.‘பார்த்தேன்ணே. எனக்குப் பிடிச்சிருந்தது படம்... ஆனா என்னன்னே தெரியல, தாறுமாறா திட்றாங்களே...” ‘நல்ல படம்தான். இந்தக் காலத்துல நல்ல படமெல்லாம் ஓடணுமின்னு கட்டாயமில்லையே... ஆனா பாருங்க... அந்த தம்பியோட நல்ல மனசுக்கு பங்கம் வராது. இப்ப கஷ்டப்பட்டாலும் ஓஹோன்னு வருவாரு பாருங்க. அவரு நிறத்துல கருப்புன்னாலும், மனசுல எம்ஜிஆர் மாதிரி சொக்கத் தங்கம்’ என்றார். எனக்கு மயிர்க்கால்கள் சிலிர்த்தன.‘கிட்டத்தட்ட ரஜினியோட எல்லாப் படங்கள்லயும் நடிச்சிருக்கீங்க... உங்க அனுபவத்தைச் சொல்லுங்கண்ணே... இது பேட்டிக்காக இல்ல.. சும்மா இன்ட்ரஸ்ட்ல கேக்கறேன்’, என்றேன்.உடனே அவர் சற்றே தடுமாறிபடி எழுந்தார்.என்கூட கொஞ்சம் வாங்க என எங்கள் தோளைப் பிடித்தபடி தனது வீட்டுப் பூஜை அறைக்குக் கூட்டிச் சென்றார்.நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அந்தப் பூஜை அறையில் ஏகப்பட்ட கடவுள் படங்கள், சின்னச் சின்னதாய் விக்ரகங்கள்.
அவற்றின் நடுவே... இந்த நூற்றாண்டின் அரிய மனிதர்களில் ஒருவர், நமது தலைவர் சூப்பர்ஸ்டாரின் படம்!

ஒருநிமிடம் ஆடிப்போய் விட்டேன். கண்களில் என்னையும் அறியாமல் நீர்க் கோர்த்துக் கொண்டது. வி.கே.ஆருக்கும்தான். என்னண்ணே இது ரஜினி படத்தை இங்க வச்சிருக்கீங்க...?, என்றோம் நாங்கள் மூவரும்.‘அதுக்குத் தகுதியானவர்தான்... வயசுல அவரு சின்னவரா இருந்தாலும் குணத்துல மகான். அவருக்கு என்னோட மரியாதையை வேற எப்படிக் காட்டுவேன்... இன்னிக்கு நான் உடலால நோய்வாய்ப்பட்டிருந்தாலும் மனசால கொஞ்சமாவது தெம்பா இருக்கேன்னா அதுக்கு ரஜினி தம்பிதான் காரணம். எப்பவோ ஒருமுறை... ஒரு பத்துப் பதினஞ்சு வருஷத்துக்கு முன்ன, அவர்கூட பிளைட்ல போறப்ப, எனக்கும் ஒரு படம் பண்ணித் தரணும்னு கேட்டுக்கிட்டேன் அவர்கிட்ட.கேட்டவுடனே கடவுள் வரம் கிடைக்காதில்ல... அந்த மாதிரிதான் கொஞ்ச நாள் நான் காத்திருந்தேன். அப்புறம் நானும் மறந்திட்டேன். ஆனா அவரோட எல்லாப் படத்திலயும் எனக்கு தவறாம வாய்ப்புக் கொடுத்திட்டிருந்தார். நான் எதிர்பார்க்காத பெரிய தொகை சம்பளமாக் கொடுக்க வைப்பார்.சரி... நமக்கு படம் பண்றதுக்குப் பதில் இப்படி உதவி பண்றார் போலன்னு நினைச்சு சமாதானமாயிட்டேன். ஒருநாள் பேப்பர்லதான் செய்தி படிச்சேன்... அருணாச்சலம்னு ஒரு படத்தை அவர் தயாரிக்கிறதாவும், அந்தப் படம் தயாரிக்கும் 8 பங்குதாரர்களில் நானும் ஒருத்தன்னும் நியூஸ் போட்டிருந்தாங்க. எனக்கு ஒண்ணும் தெரியல... அப்புறம் ரஜினியே போன்ல விஷயத்தைச் சொன்னாரு..அந்தப் படத்துக்கு ஒரு தயாரிப்பாளரா நான் நயா பைசா கொடுக்கல... அவரும் என்கிட்ட இதப்பத்தி ஒண்ணும் கேக்கல.படத்துல நானும் நடிச்சேன், வில்லனா. அப்பவே சொல்லிட்டேன், ரஜினிய திட்டற மாதிரி வசனம் ஏதும் வச்சிடாதீங்கன்னு. படம் முடிஞ்சு பெரிய அளவில் ஓடுச்சி.. ஒருநாள் என்னைக் கூப்பிட்டிருந்தார் ரஜினி... ஒரு பெட்டில வச்சி ரூ.25 லட்சத்தை என்னோட பங்கா கொடுத்தாரு. அந்தப் படத்துல நடிச்சதுக்காக ஒரு பெரிய தொகையை தனியா கொடுத்தார்... இந்தக் காலத்துல இப்படியெல்லாம் உதவற குணம் யாருக்கு வரும்... சும்மா கொடுத்தா என் கவுரவத்துக்கு குறைச்சல்னு, ஒரு தயாரிப்பாளராக்கி உதவினாரு ரஜினி. அப்போ எனக்கு எம்ஜிஆர் ஞாபகம் வந்திடுச்சி... அவரும் இப்படித்தான். அவரை நம்பினவங்கள திடீர்னு ஒருநாள் தயாரிப்பாளர்னு அறிவிச்சு பெரிய ஆளாக்கிடுவார். எனக்கு இருந்த கடன் தொல்லைகள் தீர்ந்தது ரஜினியாலதான். அவருக்கு இதைவிட சிறப்பான பதில் மரியாதையை தர எனக்குத் தெரியல... அவர் ரொம்ப நாள் நல்லாயிருக்கணும். நிறைய பேர் அவரால நல்லா வாழணும்...” என்றார்.இந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 4 மாதங்களில் வி.கே.ஆர். நம்மைவிட்டு மறைந்தார். அரைவேக்காடுகளும், அஞ்ஞானிகளும் எவ்வளவுதான் புழுதிவாரித் தூற்றினாலும் அவற்றையெல்லாம் தனது நல்ல குணத்தால் பொசுக்கிவிட்டு ரஜினி என்ற மனிதர் சூரியனாய் ஜொலிப்பது எப்படி எனப் புரிகிறதா...! -சங்கநாதன்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...