சிங்கப்பூரில் சரவெடியாய் நொறுக்கிய எந்திரன் 100 வது நாள் கொண்டாட்டம்

எந்திரன் 100 வது நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று ரசிகர்களால் திட்டமிடப்பட்ட போது இது எந்த அளவிற்கு சிறப்பாக வரும் என்ற சந்தேகமும் கூடவே வந்தது காரணம் ஏற்கனவே ரசிகர்கள் அனைவரும் குறைந்தது இரண்டு முறையாவது பார்த்து இருப்பார்கள் 100 வது நாளுக்கு மறுபடியும் வருவார்களா! என்று ஆனால் அனைவரின் நினைப்பையும் பொய்யாக்கி REX 1 பெரிய திரையரங்கில் கிட்டத்தட்ட 60% ரசிகர்கள் வந்து ஆச்சர்யப்படுத்தினார்கள். சந்திரமுகி சிவாஜி யை தொடர்ந்து எந்திரன் 100 வது நாள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன என்று தெரிந்து இருந்தாலும் திரையரங்கம் சென்று பார்த்த போது உண்மையிலே ஆச்சர்யமாக இருந்தது பலூன் பேனர் சாக்லேட் கேக் என்று ரசிகர்கள் அசத்தி இருந்தார்கள் இதில் REX திரையரங்கம் சார்பாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

FDFS கொண்டாட்டம் என்பது ரசிகர்களுக்கே உரித்தான ஒரு சிறப்பான நாள். எத்தனை நடிகர்கள் இருப்பினும் FDFS என்பது ரஜினி ரசிகர்களிடையே தான் அதிகம் பிரபலம். இந்த முறை எந்திரன் படம் எந்த திரையரங்கில் எங்கே எப்போது வெளியாகிறது என்பது கடைசிவரை சரியாக தெரியாமலே இருந்தது இதனால் டிக்கெட் வாங்குவதிலேயே பலருடைய கவனமும் இருந்ததால் மற்ற கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய சிரமமாக இருந்தது அதனால் 100 வது நாளை சிறப்பாக FDFS போல கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இப்படி சொல்லி விட்டாலும் உண்மையிலேயே அந்த அளவிற்கு இருக்குமா! என்ற சந்தேகம் பல ரசிகர்களுக்கு இருந்தது ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி சரவெடியாக 100 வது நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.




ரசிகர்களால் ரஜினி படத்திற்கு தமிழகத்தை போலவே பால் அபிஷேகம் செய்யப்பட்டு சூரத்தேங்காய் பூசணிக்காய் உடைத்து அந்த ஏரியாவையே ரணகளப்படுத்தி விட்டார்கள். ரசிகர்கள் போட்ட சத்தத்தில் அந்த பகுதியில் உள்ளவர்கள் எல்லாம் ஆர்வமாக வந்து பார்த்து சென்றார்கள். ரஜினியை வாழ்த்தி ரஜினி ரசிகர்கள் போட்ட கூச்சலில் அந்த பகுதியே கிடுகிடுத்து விட்டது. ஜிகினா பேப்பர் வெடி மூலம் வெடித்து தூள் கிளப்பினார்கள். இவற்றை எல்லாம் படமெடுக்க ஏகப்பட்ட நபர்கள் ரசிகர்கள் அல்லாதவர்களும் குழுமி விட்டனர் (வீடியோ வில் பாருங்கள்) இந்த நிகழ்ச்சிகளை சிங்கப்பூர் தமிழ்ப் பத்திரிகை தமிழ்முரசு கவர் செய்து கொண்டு இருந்தது. அவர்களுக்கு எங்கள் நன்றி.




ரஜினி படம் என்றாலே அனைத்து வயதினரும் அங்கே இருப்பார்கள் அது முதல் நாள் என்றில்லை எந்த நாள் கொண்டாட்டமாக இருந்தாலும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டது. நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ! 100 வது நாள் கொண்டாட்டத்திற்கும் படத்தை காண்பதற்கும் பலரும் குடும்பத்துடன் வந்து இருந்தார்கள் (குழந்தைகளுடன்) நான் பெண்கள் இவ்வளவு பேர் வருவார்கள் என்று நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. இதில் ஒரு குறிப்பிட்டுக் கூற வேண்டிய இன்னொரு விஷயம் மற்ற படத்திற்கு வந்தவர்கள் ரஜினி ரசிகர்களின் கொண்டாட்டத்தை பார்த்து ஆர்வமாகி எந்திரன் பார்க்க வந்தது தான் :-)











பின் ரசிகர்களின் ஆராவாரத்துடன் REX திரையரங்கு உரிமையாளர் குமார் நாராயணசாமி அவர்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பின் திரையரங்கத்தில் இருந்த அனைவருக்கும் கேக் மற்றும் இனிப்புகள் கொடுக்கப்பட்டது. இங்கேயும் ரசிகர்கள் கத்தியதை பார்த்த போது நிச்சயமாக நாம் சிங்கப்பூர் ல் இருக்கிறோமா! என்று சந்தேகமே வந்து விட்டது. தமிழகத்தில் ஆல்பட் திரையரங்கம் போன்ற ஒரு இடத்தில் இருந்து கொண்டாடியதைப்போலவே இருந்தது. இதை சற்றும் மிகைப்படுத்த வில்லை. இதன் பிறகே ரசிகர்கள் திரையரங்கினுள் சென்றார்கள்.

திரையரங்கில் இருந்தவர்கள் பெரும்பாலனவர்கள் நண்பர்கள் அவர்களின் குடும்பத்தினர் என்று இருந்ததால் எனக்கு ஒரு பெரிய குடும்பத்துடன் படம் பார்த்த அனுபவமே ஏற்பட்டது. ரஜினி முதலில் தோன்றியவுடன் FDFS காட்சிக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் விசிலடித்து நொறுக்கித் தள்ளினார்கள் பூக்கள் பறந்தன. ரசிகர்கள் பலர் திரை அருகிலேயே ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்தார்கள். இது அப்போது மட்டுமல்ல ரோபோ ரஜினி "என்னைப் படைத்தது டாக்டர் வசீகரன் எனவே கடவுள் இருக்கிறார்!" என்று கூறிய போதும் செல்லாத்தா கட்சியிலும் கிளிமாஞ்சாரோ பாடலுக்கும் வில்லன் ரஜினி தோன்றும் போதும் மே மே மே சத்தத்திற்கும் எழுந்த விசில் சத்தம் அடங்க ரொம்ப நேரம் ஆனது.





திரையரங்கு உள்ளேயும் மேற்கூறிய காட்சிகளில் ஜிகினா தாள் வெடி வெடிக்கப்பட்டது ரணகளமாக இருந்தது. இதைப்போல ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு எந்தவித மறுப்பும் கூறாமல் அனுமதித்த REX திரையரங்கு உரிமையாளர்களை மற்றும் ஊழியர்களை எத்தனை பாராட்டினாலும் தகும். ரசிகர்கள் போட்ட குப்பைகளை முகம் சுழிக்காமல் சுத்தம் செய்து ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்கள். படம் முடிந்து வெளியே வந்த போது அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு இருந்தது.

இதில் குறிப்பிடத்தக்க ஒரு விசயம் பலர் (நான் உட்பட) மேகிங் ஆஃப் எந்திரன் பார்த்த பிறகு பார்ப்பதால் படத்தை இன்னும் ரசிக்க முடிந்தது. இந்த அனுபவம் பலருக்கும் இருந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

ரஜினி எந்திரன் ஒரு அனுபவம் என்றார் உண்மையிலேயே அது சற்றும் மிகைப்படுத்தாமல் கூறிய வார்த்தை தான். படத்தை இத்தனை முறை பார்த்தும் இன்னும் சலிக்காமல் பார்க்க முடிகிறது என்றால் என்ன கூறுவது? 100 வது நாள் கொண்டாட்டத்திற்கு வரமுடியாதவர்கள் ஒரு நல்ல அனுபவத்தை இழந்து விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.





இந்த கொண்டாட்டங்கள் அனைத்திற்கும் முக்கிய காரணமாக இருந்தவர்கள் இருவர். ஒருவர் ஷாஜஹான் மற்றொருவர் மகேஷ். இதில் ஷாஜஹான் REX திரையரங்கு உரிமையாளர்களிடம் பேசி ரசிகர்களுக்கு தகவல் கொடுத்து ஒருங்கிணைத்தார். மகேஷ் கொண்டாட்டங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து ஒட்டு மொத்த ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார். இவர்கள் இருவருக்கும் சிங்கப்பூர் ரஜினி ரசிகர்கள் சார்பாக மிகப்பெரிய நன்றி. உடன் எங்கள் கொண்டாட்டங்களுக்கு எந்த வித மறுப்பும் கூறாமல் அனுமதித்த REX திரையரங்கு உரிமையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் ரஜினி ரசிகர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

Video 1 - Milk Abishekam


Video 2 - Cake Cutting

கிரி
www.giriblog.com

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...