யாரை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படுகிறீர்கள்? யார் படத்தை விநியோகிக்க ஆசைப்படுகிறீர்கள்? யார் படத்தை திரையிட விரும்புகிறீர்கள்? என்னும் கேள்வியை முறையே தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களை கேட்கும் பட்சத்தில் அவர்கள் அனைவரதும் ஒருமித்த பதில் 'ரஜினிகாந்த்' என்பதாக மட்டும்தான் இருக்கும். யார் படம் பார்க்க பிடிக்கும் ? என்கிற கேள்விக்கான பெரும்பான்மை யானவர்களது பதிலாக 'ரஜினிகாந்த்' என்னும் விடை கிடைப்பதே முதலீட்டாளர்கள் ரஜினி என்னும் குதிரைமீது எவ்வளவு வேண்டுமென்றாலும் பந்தயம் கட்டலாம் என முடிவெடுப்பதற்கு முக்கிய காரணம். அது தவிர சில நேரங்களில், சில காரணங்களுக்காக போட்ட பணம் கிடைக்காதவிடத்து அதை ரஜினியிடம் திரும்ப பெற்றுவிடலாம் என்கின்ற அதீத நம்பிக்கையும் மற்றுமொரு காரணம்.
தனது அண்மைக்கால திரைப்படங்களின் தயாரிப்புக்களை தனது வளர்ச்சியில் ஆரம்பகாலங்களில் பங்கெடுத்தவர்களுக்கு கொடுத்து தனது நன்றியை வெளிக்காட்டிவருகிறார் ரஜினி. சிவாஜி திரைப்படத்தை ஏ.வி.எம்.சரவணன் மற்றும் பஞ்சு அருணாச்சலம் ஆகியோருக்கும், குசேலனை கே.பாலச்சந்தருக்கும், சந்திரமுகியை சிவாஜி குடும்பத்தினருக்கும் தயாரிக்கும் வாய்ப்பை கொடுத்த ரஜினியின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும் வாய்ப்பை "ரஜினிகாந்தால் நஷ்டப்பட்ட ஒரே தயாரிப்பாளர்" என ரஜினியால் குறிப்பிடப்பட்ட பாட்ஷா தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களுக்கு கொடுப்பார் என நம்பப்படுகிறது.
எந்திரன், மற்றும் ஹரா திரைப்படங்கள் மிகப்பெரும் பட்ஜெட் என்பதால் அவற்றால் ஒருவேளை நஷ்டம் ஏற்ப்பட்டால் அதை தாங்கிக்கொள்ளும் அளவிற்கு 'சக்திமிக்க' தயாரிப்பாளராக அவற்றின் தயாரிப்பாளர் இருக்கவேண்டும் என்பதை மனதில்வைத்தே அந்த திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
ரஜினியை வைத்து பல தயாரிப்பாளர்கள் பல திரைப்படங்களை தயாரித்திருப்பினும் அதிகமான மற்றும் முக்கியமான ரஜினி திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் சிலரை இந்தப்பதிவின்மூலம் நினைவு கூருவோம்.
கவிதாலயா
ரஜினியை திரையுலகிற்கு கரம்பிடித்து அழைத்துவந்த ரஜினியின் ஆசான் கே.பாலச்சந்தர் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா நிறுவனம் ரஜினியை வைத்து கிட்டத்தட்ட பத்து திரைப்படங்களை தயாரித்துள்ளது. நெற்றிக்கண், புதுக்கவிதை, நான் மகான் அல்ல, ஸ்ரீராகவேந்திரா, வேலைக்காரன், சிவா, முத்து, அண்ணாமலை, குசேலன் போன்ற திரைப்படங்கள் கவிதாலயா தயாரிப்பில் ரஜினி நடித்த முக்கியமான திரைப்படங்களாகும். இத்தனை திரைப்படங்களை ரஜினிக்காக கவிதாலயா தயாரித்தபோதும் இந்த திரைப்படங்களில் எந்த திரைப்படத்தையும் கே.பாலச்சந்தர் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம்.
ரஜினிக்கான கவிதாலயாவின் அதிகமான திரைப்படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள், இவர் நெற்றிக்கண், புதுக்கவிதை, நான் மகான் அல்ல, ஸ்ரீ ராகவேந்திரா, வேலைக்காரன் என ரஜினிக்கான கவிதாலயாவின் பாதிக்கு மேற்ப்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 'அண்ணாமலை' திரைப்படத்தை முதலில் இயக்குனர் வசந்த் இயக்குவதாக இருந்தது, இறுதிநேரத்தில் வசந்த் விலகியதை தொடர்ந்து சுரேஷ் கிருஷ்ணாவின் கைகளுக்கு 'அண்ணாமலை' மாற்றப்பட்டது, சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் அண்ணாமலையின் மாபெரும் வெற்றி கவிதாலயாவிர்க்கு லாபத்தை அள்ளிக் கொடுத்தது. தொடர்ந்து முத்து திரைப்படமும் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் அதிகமான வசூலை கவிதாலயாவிர்க்கு அள்ளிக்கொட்டிய மற்றுமொரு திரைப்படம்.
இறுதியாக கே.பாலச்சந்தருக்காக குசேலன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் ரஜினி நடித்து கொடுத்த போதும் பிரமிட் சமீராவின் தவறான விளம்பர உக்தியினாலும் சில முக்கிய தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் 'அரசியல்' நடவடிக்கைகளாலும் எதிர்பார்த்த வசூலை குசேலனால் வசூலிக்க முடியவில்லை. திரைப்படத்தில் தனது பங்கு 25 % தான் என்பதை ரஜினி மீண்டும் மீண்டும் கூறியும் 'பிரமிட் சமீரா' குசேலனை ரஜினி படம் என விளம்பரப்படுத்தி, அதிகவிலைக்கு விற்ற பேராசையே 'குசேலன்' சரியாக போகாததற்கு முக்கிய காரணம்.
ஏ.வி.எம்
ரஜினியின் சினிமா கேரியரில் மிக முக்கிய இடம் வகிக்கும் தயாரிப்பு நிறுவனம் என்றால் அது ஏ.வி.எம்தான். வர்த்தக சினிமாவிற்குள் ரஜினி காலடி எடுத்துவைத்த முதல்த் திரைப்படமான 'முரட்டுக்காளை' திரைப்படத்தை தயாரித்த ஏ.வி.எம் நிறுவனம் ரஜினியை வைத்து தயாரித்த ஒன்பது திரைப்படங்களுமே வசூலில் சாதனை படைத்த திரைப்படங்கள்தான். முரட்டுக்காளை, போக்கிரிராஜா, ராஜா சின்ன ரோஜா, மனிதன், மிஸ்டர் பாரத், நல்லவனுக்கு நல்லவன், பாயும் புலி, எஜமான், சிவாஜி என ஏ.வி.எம்மின் ஒன்பதும் ரஜினியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான திரைப்படங்கள். இவற்றில் சிவாஜி, எஜமான் தவிந்த ஏனைய எழு திரைப்படங்களையும் இயக்கியவர் ரஜினியின் ஆஸ்தான இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.
விளம்பரம் செய்வதில் ஏ.வி.எம்மை மிஞ்சுவதற்கு ஆட்களே இல்லை என்பார்கள், அதை உண்மை என்று நிரூபித்த திரைப்படம்தான் எஜமான். ரஜினி ரசிகர்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் எஜமானில் இல்லாததால் இரண்டாம்வாரம் படத்தின் வசூலில் சிறு தொய்வு ஏற்ப்பட்டது, உடனடியாக சுதாகரித்த ஏ.வி.எம் நிறுவனம் 'வானவராயன்' (ரஜினி) போன்ற மணமகன் வேண்டுமென பெண்களும் 'வைத்தீஸ்வரி' (மீனா) போன்ற மணமகள் வேண்டுமென ஆண்களும் வேண்டுவது போன்ற விளம்பரங்களை பத்திரிகைகளில் வரச்செய்து மக்களிடம் 'எஜமான்' திரைப்படத்தை எடுத்துச் சென்று 175 நாட்கள்வரை ஓடுமளவிற்கு செய்தது.
ஏ.வி.எம்மின் விளம்பர உக்திக்கு இப்போதுகூட உதாரணாமாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'உறவுக்கு கை கொடுப்போம்' நெடுந்தொடரின் விளம்பரத்தை சொல்லலாம், மூன்று வயது சிறுமி கொஞ்சும் தமிழில் பேசும் விளம்பரத்தால் வீட்டில் எப்போதுமே 8 - 8.30 வரை சண் டிவியை விட்டு வேறெதையும் மாற்றாத ரிமோட் இப்போது 'திருமதி செல்வம்' மெகா தொடருக்கிடையில் அடிக்கடி கலைஞர் டிவி பக்கமும் தாவுகிறது, அதுதான் ஏ.வி.எம்.
சத்யா மூவிஸ்
ரஜினியின் திரை வாழ்க்கையின் மிகப்பெரும் திரைப்படமான பாட்ஷா திரைப்படத்தை தயாரித்த நிறுவனம்தான் சத்யா மூவிஸ். சத்யா மூவிஸும் தேசார் பில்ம்ஸ்சை போலவே ஆரம்பகாலங்களில் எம்.ஜி.ஆரை வைத்து திரைப்படங்களை இயக்கி பின்னர் ரஜினியை வைத்து அதிகமான திரைப்படங்களை இயக்கிய நிறுவனம்தான். பாட்ஷா, பணக்காரன், ராணுவ வீரன், ஊர்க்காவலன், தங்க மகன், மூன்றுமுகம் போன்ற திரைப்படங்களை தயாரித்த சத்யா மூவிஸ் அடுத்ததாக ரஜினி நடிக்கும் திரைப்படத்தை தயாரிக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தேவர் பிலிம்ஸ்
ஆரம்பகாலங்களில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான 'தேவர் பிலிம்ஸ்' எம்.ஜி.ஆர் காலத்தின் பின்னர் ரஜினியை தனது ஆஸ்தான நாயகனாக மாற்றிக்கொண்டது. பல திரைப்படங்களை ரஜினிக்காக தேவர் பிலிம்ஸ் தயாரித்திருந்தாலும் அன்புக்கு நான் அடிமை, அன்னை ஓர் ஆலயம், தாய்வீடு, ரங்கா என்பன முக்கியமானவை. வழக்கமாக தேவரது திரைப்படங்களில் மிருகங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே வழக்கம், அந்தவகையில் 'அன்னை ஓர் ஆலயம்' திரைப்படத்தில் இரண்டாவது நாயகனாக 'யானைக்குட்டி' ஒன்று நடித்திருக்கும், அதேபோல 'தாய்வீடு' திரைப்படத்தில் நாய் ஒன்று ரஜினியுடன் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும்.
சுரேஷ் ஆட்ஸ்
கே.பலாஜின் தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் ஆட்ஸ் ரஜினிக்காக தயாரித்த மாப்பெரும் வெற்றித் திரைப்படம்தான் பில்லா. பாலாஜி தயாரிப்பில் எம்.எஸ்.வி இசையில் பி.கிருஷ்ணமூர்த்தி இயக்கிய பில்லா திரைப்படம்தான் ரஜினியின் முதல் இரட்டைவேட திரைப்படம். பில்லாவாகவும் ராசப்பாவாகவும் ரஜினி ஒரு கலக்கு கலக்கிய திரைப்படத்தில் தயாரிப்பாளர் பாலாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இவர் ரஜினியை வைத்து தயாரித்த இன்னுமொரு திரைப்படம் 'தீ'. இலங்கையின் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை 'தீ' திரைப்படம் மறக்க முடியாததொரு திரைப்படம், 1981 இல் இந்தியாவில் 'தீ' திரைப்படம் வெளியாகியிருந்தாலும் 1983 ஆம் ஆண்டுதான் யாழ்ப்பாணத்தில் 'ராணி திரையரங்கில்' (இப்போது அந்த திரையரங்கே இல்லை) வெளியாகி 100 நாட்களை கடந்து ஓடியது.ராணி திரையரங்கில் 'தீ' திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த வேளையில்த்தான் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமாகவிருந்த 'யாழ் நூலகம்' சிங்கள காடையர்களால் 'தீ' வைக்கப்பட்ட வன்முறை சம்பவமும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.
முக்கியமான பிரபலங்கள் ரஜினியை வைத்து தயாரித்த திரைப்படங்கள் என்று பார்த்தால் இளையராஜா அவர்களின் 'பாவலர் கிரியேசன்' தயாரிப்பில் வெளிவந்த ராஜாதி ராஜா திரைப்படமும் பாரதிராஜாவின் 'மனோஜ் கிரியேசன்' தயாரிப்பில் வெளிவந்த கொடிபறக்குது திரைப்படமும் முக்கியமானவை. இதில் 'ராஜாதி ராஜா' திரைப்படத்தை ஆர்.சுந்தர்ராஜனும் 'கொடிபறக்குது' திரைப்படத்தை பாரதிராஜாவும் இயக்கியிருப்பார்கள். இவர்களைவிட நடிகர் திலகத்தின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான 'சிவாஜி புரொடக்சன்' மன்னன், சந்திரமுகி என இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்தது, அந்த இரண்டு திரைப்படங்களையும் பி.வாசு அவர்கள் இயக்கியிருப்பார். அதேபோல் ரஜினியின் அதிக திரைப்படங்களுக்கு 'வசனம் எழுதிய பஞ்சு அருணாச்சலம் அவர்கள் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினியை வைத்து 'வீரா' திரைப்படத்தை தயாரித்திருப்பார்.
வள்ளி, அருணாச்சலம், படையப்பா, பாபா என தனது சில திரைப்படங்களை ரஜினி தானே தயாரித்தபோதும் 'பாபா'வில் அரசியல் சாக்கடைகள் சிலர் செய்த அட்டூழியத்தால் 'பாபா'விற்கு பின்னர் இன்றுவரை எந்த திரைப்படத்தையும் ரஜினி தயாரிக்கவில்லை, இனிவரும் காலங்களிலும் தயாரிப்பார் என்று தோன்றவில்லை. கை கொடுக்கும் கை, மாவீரன் ஆகிய இரண்டு திரைப்படங்களையும் ரஜினியே தயாரித்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இது சரியான தகவலா? என்பது தெரியவில்லை, தெரிந்தவர்கள் உறுதிபடுத்துங்கள்.
சூப்பர் ஸ்டாரை வைத்து திரைப்படங்களை தயாரித்த மேலே பெயர் குறிப்பிட்ட திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், பெயர் குறிப்பிடாத தயாரிப்பாளர்களுக்கும் ரஜினி ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றேன்.
No comments:
Post a Comment