ரஜினியின் பத்து கேரக்டர்கள்
ரஜினியின் 'பிடித்த பத்து படங்கள்' தொடர் பதிவிற்கு பாலாவின் பக்கங்கள் பாலா அவர்கள் அழைத்திருந்தார்கள், அன்பிற்கு மிக்க நன்றி பாலா. பதிவுலகின் பெரும்பான்மையானவர்கள் எழுதி காலாவதியாகிப்போன தொடர்பதிவென்றாலும் நண்பரின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க இந்த தொடர்பதிவை எழுதுகிறேன். ரஜினியின் பிடித்த பத்துப் படங்களில் முதன்மையான படங்கள் அனைத்தையும் பலரும் எழுதிய பின்னரும் நான் எனக்கு பிடித்த பத்து படங்களை எழுதினால் அதுவொரு 'ரிப்பீட்' பதிவாகத்தான் அமையும். இதனால் சிறு மாறுதலாக ரஜினி நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த பத்து கதாபாத்திரங்களை பற்றி எழுதுகிறேன்.
10)மாணிக் பாட்ஷா (பாட்ஷா)
கோட், ஷூட், தாடி, கண்ணாடி என தலைவர் 'டானாக' பட்டையை கிளப்பிய பாத்திரம். அதுவரை தமிழ் சினிமா பாத்திராத புதிய மானரிசம், ரஜினியிடம் யாருமே எதிர்பார்க்காத வசன உச்சரிப்பு, அவருக்கேயுரிய தனித்துவமான உடல்மொழி என 'மாணிக் பாட்ஷா' பாத்திரத்தில் ரஜினி அசாத்தியமாக நடித்திருப்பார். குகைக்குள் ஆண்டனியின் அடியாளிடம் உண்மையை வரவளைப்பதற்காக கண்களை அகலமாக்கி முகத்தில் அனல் பறக்கும் கோபத்தை வெளிக்காட்டி வசனம் பேசும் காட்சியில் ரஜினி பின்னியெடுத்திருப்பார். ரஜினி வழக்கத்திலும் பார்க்க மிகவும் அதிகவேகமான அசைவுகளையும் வசன உச்சரிப்பையும் மாணிக் பாட்ஷா பாத்திரத்திரத்தில் வெளிப்படுத்தியிருந்தது அந்த காதாப்பாத்திரத்தின் ஈர்ப்பிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.
9) வேட்டையன் (சந்திரமுகி)
சந்திரமுகி திரைப்படம் வெளியாவதற்கு முதல்நாள் இரவு படத்தை பார்த்த ஒரு கருப்பு ஆடு "இது ஒரு பேய்ப்படம், ரஜினியோட கதை அவளவுதான்" என்று திருவாய் மலர்ந்ததால் பதற்றத்துடனே படம்பார்க்க ஆரம்பித்திருந்தேன். படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது எனக்கு பிடித்திருந்தாலும் எல்லோருக்கும் பிடிக்குமா? எல்லா ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்களா? என்கின்ற பயம் இருந்துகொண்டே இருந்தது; அது வேட்டையன் கேரக்டர் அறிமுகமாகும் வரைதான். வேட்டையனின் அந்த பத்து நிமிடங்கள் கடந்த பின்னர் சந்திரமுகி நிச்சயம் மிகப்பெரும் வெற்றி பெறுமென்கின்ற நம்பிக்கை எனக்கு ஏற்ப்பட்டது. தோற்றத்திலே என்னவொரு மிரட்டல்? முகத்திலே என்னவொரு கொடூரம்? தலைமுடியை சுருட்டிய மேனரிசத்துடன் காலை சிம்மாசனத்தில் தூக்கிவைத்து லகலக... என்று நாக்கை சுழற்றும்போது திரையரங்கே சும்மா அதிர்ந்தது.
8) ரஜினிகாந்த் (அன்புள்ள ரஜினிகாந்த்)
எனது மனதோடு பதிந்த சில படங்களில் முக்கியமான திரைப்படம் 'அன்புள்ள ரஜினிகாந்த்'. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தாகவே ரஜினி நடித்திருப்பார். ரஜினி வரும் காட்சிகள் அனைத்துமே எனக்கு மிகமிகப் பிடிக்கும், குட்டிப்பெண் மீனாவுக்காக ஆரம்பத்தில் ரஜினி மாஜிக் செய்யும் காட்சியும், இறுதியில் அதை செய்யமுடியாமல் போகும்போது ரஜினி காட்டும் உணர்வும், உடல் மொழியும் 'ரஜினி' ஒரு கிளாஸ் ஆக்டர் என்பதை சொல்லும் காட்சிகள்.
7) அறிவுடை நம்பி கலிகைபெருமாள் சந்திரன் (தில்லு முல்லு)
வசன உச்சரிப்பு, டைமிங், உடல்மொழி, எக்ஸ்பிரஷன் என நகைச்சுவையின் அனைத்து பரிமாணங்களையும் ஒரு கேரக்டருக்குள் கொண்டுவந்த பாத்திரம்தான் 'அறிவுடை நம்பி கலிகைபெருமாள் சந்திரன்'. ரஜினிக்கு காமடி வருமா? என்கின்ற கேள்வியை ரஜினி மாதிரி யாருக்கும் காமடி வருமா? என மாற்றிக் கேட்கவைத்த கதாபாத்திரம். தேங்காய் சீனிவாசனுடன் நேர்முக காட்சியும், சௌகார் ஜானகியுடன் தேங்காய் சீனிவாசன் முன்னிலையில் தனது வீட்டில் சமாளிக்கும் காட்சியும் என்றுமே மறக்க முடியாத நகைச்சுவை காட்சிகள்.
6) மாணிக்கம் (பாட்ஷா)
அண்ணன் ஆட்டோ ஸ்டாண்டில பட்டைய கிளப்பின பாத்திரம். ரசிகர்களுக்கு பிடிச்சமாதிரி அப்பாவித்தனமா நடிக்கிறதுக்கும், ஆக்கிரோஷமா நடிக்கிறதுக்கும் தலைவருக்கு சொல்லித்தரணுமா என்ன? அதிலும் மாணிக்கம் கேரக்டர்; ஆக்ரோஷமான மனுஷன் சில காரணங்களுக்காக அப்பாவித்தனாமா இருந்திட்டு பழையபடி ஆக்ரோஷமா மாற்ற கேரக்டர், விடுவாரா தலைவர்? தேவைக்கேற்ப உடல்மொழியை அப்பிடியே உல்டாவா மாற்றி ஒரு காட்டு காட்டியிருப்ப்பார். மாணிக்கம் கேரக்டரில் தலைவர் ஆட்டோவில் நக்மாவுடன் முதல்த்தடவை பேசும் காட்சி செம கலாட்டா. அப்புறம் அந்த கம்பத்து (இரண்டு) காட்சிகள், தங்கைக்கு பையன் கேட்கும் காட்சி, தங்கைக்கு காலேஜ் சீட்டு கேட்கும் காட்சி என ஒவ்வொரு காட்சிகளுமே மறக்கமுடியாதா நிறைவான காட்சிகள்.
5 ) மொட்ட பாஸ் (சிவாஜி)
"பேர கேட்டாலே சும்மா அதிருதெல்ல", சிவாஜி திரைப்படம் வெளியான திரயங்குகள் மட்டும் இந்த வசனத்தை தலைவர் உச்சரிக்கும்போது அதிராமலா இருந்திருக்கும்!!!! தலைவர் 'பாஸாக' வரும் காட்சிகள் கலக்கல் என்றால் 'மொட்ட பாஸாக' வரும் காட்சிகள் மிரட்டல். ஹெலிகொப்டரில் இருந்து இறங்கி வரும்போது தலைவர் காட்டும் உடல்மொழி வார்த்தைகளுக்கு அப்பாற்ப்பட்டது. மேசையில் அமர்ந்து சுமன் அமர்ந்திருக்கும் நாற்காலியின் இரண்டு முனைகளிலும் காலை வைத்து நாற்காலியை முன்னும் பின்னுமாக இழுத்து உடலை சிலிர்த்து முகத்தில் எக்ஸ்பிரஷனை திடீரென மாற்றி " சிவாஜியும் நான்தான் எம்.ஜி.ஆரும் நான்தான்" என்று கர்ஜிக்கும் காட்சியில் ரஜினியின் மாஸ் & கிளாஸ் பற்றி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
4) ஜானி (ஜானி)
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம், அதிலே ஜானியாக அதுவரை பார்த்திராத ஒரு ரஜினியை இயக்குனர் மகேந்திரன் காட்டியிருப்பார். மிகவும் மென்மையான ஜதார்த்தமான ஒரு ரஜினியை ஜானி கதாபாத்திரத்தில் பார்க்கலாம். ஜானி பாத்திரத்தில் இருந்த அழகான ரஜினியைபோல அதற்க்கு முன்னும், பின்னும் இதுவரை எந்த படத்திலும் நான் பார்த்ததில்லை. ஸ்டையிலான தலைமுடி, சூப்பரான காஸ்டியூம், வழக்கத்துக்கு மாறாக மென்மையான உடல்மொழி, சாந்தமான சிரிப்பு என ரஜினி அட்டகாசமாக இருப்பார். காதல்க்காட்சிகளில் தன்னால் மிகச்சிறப்பாக நடிக்க முடியுமென்பதை ஜானி பாத்திரத்தின் மூலம் ரஜினி இயக்குனர் துணையுடன் நிரூபித்திருப்பார். இப்படி ஒரு மென்மையான ரஜினியை மறுபடியும் திரையில் பார்க்கமாட்டோமா? என்கிற ஏக்கம் எப்போதுமே என் மனதில் உண்டு!!!!!!!!
3)அலெக்ஸ் பாண்டியன் (மூன்று முகம்)
மிரட்டலான போலீஸ் அதிகாரியாக பழைய போலிஸ் காஸ்ட்யூமில் கலக்கியிருப்ப்பார். விறுவிறு நடை, உரக்கப் பேசும் வசன உச்சரிப்பு, முகத்தில் மானரிசம், அதுவரை பார்த்திராத கேர் ஸ்டையில் என அதுவரை வந்த போலிஸ் கதாபாத்திரங்கள் அனைத்திலுமிருந்தும் தன்னை வேறுபடுத்தி வெளிக்காட்டியிருப்பார். ஒரு சிங்கம் மாதிரி போலிசாக வலம்வரும் அலெக்ஸ் வீட்டிலேயே மனைவியிடம் "நான் செய்த குறும்பு உண்டாச்சு கரும்பு" என கொஞ்சும்போது குழந்தைபோல மாறிவிடுவார். செந்தாமரையிடம் "இந்த அலெக்ஸ் பாண்டியன் பேர கேட்டா வயித்தில இருக்கிற குழந்தை அவங்கம்மா வாயையும் சேர்த்து மூடும்" என பேசும் வசனம் எந்த தலைமுறையினரையும் ரஜினிபால் ஈர்க்கும்.
2) சிட்டி 'வேஷன் 2.0' (எந்திரன்)
"மம்மே...மம்மே.... வசி... ம்ம்மே"; இந்த ஒரு காட்சி போதும் சிட்டி கேரக்டர் பிடித்துப்போவதற்க்கு. என்னவொரு உடல்மொழி!!!! மிரட்டியிருக்கிறார் தலைவர். கிண்டலாக, கோபமாக, ரொமான்சாக, மகிழ்ச்சியாக, கர்வமாக என தான் இருக்கும் நிலைகளுக் கேற்றால்ப்போல் வசன உச்சரிப்பில் வேறுபாடுகாட்டி சிட்டி 'வேஷன் 2.0' வில் தனது முத்திரையை ரஜினி பதித்திருப்பார். ரோபோ காஸ்ட்யூமில் படபடவென நடக்கும்போது இருக்கும் கம்பீரம், காட்சிகளின் தேவைகளுக்கேற்ப முகத்திலே காட்டும் எக்ஸ்பிரஷன்ஸ் என்பன 'இவ(ன்)ர் பெயரை சொன்னதும் கடலும் கைதட்டும்' வகையில் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.
கொசிறு :-)-> சில பிரபல பதிவர்கள் எந்திரனால் ஏற்ப்பட்ட வயித்தெரிச்சலை படம் வெளியாகி 50 நாட்கள் கடந்த பின்னரும் கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் ஏதாவதொரு ரூபத்தில் வெளிக்காட்டி புலம்பிக்கொண்டு திரிகிறார்கள். இவர்களை பார்க்கும்போது நான் எந்திரனை கேட்பதெல்லாம் "இவர்களை இப்பிடி புலம்ப வச்சிட்டியேடா எந்திரா!!!!!"
1) காளி (முள்ளும் மலரும்)
பெரும்பாலான ரஜினி ரசிகர்களுக்கும், ரஜினி ரசிகர் இல்லாதவர்களுக்கும் பிடித்த திரைப்படம் என்றால் அது 'முள்ளும் மலரும்'தான், அந்த்த திரைப்படத்தில் ஒரு ஜதார்த்தமான அண்ணனாக ரஜினி வாழ்ந்த கதாபாத்திரம்தான் 'காளி'. முள்ளும் மலரும் திரைப்படத்தில் 'காளி'யாக ரஜினி நடித்த காட்சிகளில் முதல் காட்சியிலிருந்து கடைசிக் காட்சிவரைக்கும் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்த காட்சிகள்தான்; குறிப்பிட்டு சொல்வதென்றால் "ரெண்டு கையும் காலும் போனாக்கூட காளி எங்கிறவன் பொழச்சுக்குவான் சார்; கெட்டபய சார் அவன்" என்கின்ற வசனம் வரும் சரத்பாபுவுடனான காட்சி, கிளைமாக்ஸ் காட்சி, 'ராமன் ஆண்டாலும்' பாடல் காட்சி, 'நித்தம் நித்தம் நெல்லு சோறு' பாடல் காட்சி என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்த மாதிரி ஒரு கேரக்டர்ல தலைவர் வாழ்ந்ததில் மிக்க மகிழ்ச்சி.
இவை எனக்கு பிடித்த ரஜினியின் மிகச்சிறந்த பத்து கதாபாத்திரங்கள், இந்த பாத்திரங்களில் ரஜினியை தவிர வேறு எந்த நடிகரையும் என்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. இவை ரஜினிக்காகவே படைக்கப்பட்ட பாத்திரங்கள், ரஜினியால் மட்டுமே இந்த கதாபாத்திரங்களுக்கு முழுமையான உயிர் தந்திருக்கமுடியும்.
இந்த தொடர் பதிவை எழுத 'குடந்தையூர்' சரவணன் மற்றும் 'ஜோக்கிரி' R.Gopi யை அழைக்கிறேன். உங்களுக்கு பிடித்த ரஜினியின் பத்து திரைப்படங்கள் என்றாலும் சரி பத்து கதாபாத்திரங்கள் என்றாலும் சரி, இரண்டில் ஏதாவதொன்றை எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், நீங்க எழுதினா மட்டும் போதும்.....
Subscribe to:
Post Comments (Atom)
https://youtu.be/rJZ4syNL4Ds
ReplyDelete