
உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெகா திரைப்படமான எந்திரன் தெலுங்கு உரிமையை போலிப் பத்திரம் மூலம் விற்க முயன்ற இயக்குநர் ஷங்கரின் புரொடக்ஷன் மேனேஜர் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தென்னிந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷங்கர் அலுவலகத்தில் புரொடக்ஷன் மேனேஜராக இருந்தவர் உதய குமார். இவரும் திருப்பதி திருமலா பிலிம்ஸ் அலுவலக ஊழியர் சுரேந்திரன் என்பவரும் போலியாக சில ஆவணங்களைத் தயாரித்தனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.27 கோடிக்கு எந்திரன் தெலுங்கு உரிமையை விற்றுவிட்டதாக அந்தப் பத்திரங்களில் பக்காவாக எழுதியிருந்தனர்.
இந்தப் பத்திரத்தின் நகல்களை வைத்துக் கொண்டு இருவரும் ஆந்திராவில் உள்ள அனைத்து திரையரங்கு உரிமையாளர்களையும் தொடர்பு கொண்டு ரோபோ படத்தை திரையிட பேரம் பேசியுள்ளனர். திரையரங்கு உரிமையாளர்களும் இவர்களை நம்பி அட்வான்ஸாக ரூ.2 கோடி வரை கொடுத்துள்ளனர்.
இந்த விவரங்கள் எல்லாம் தெரிய வந்ததும், உடனடியாக சன் பிக்ஸர்ஸ் நிறுவன சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா சென்னை போலீஸில் உதயகுமார் மீது புகார் பதிவு செய்தார். பின்னர் ரோபோ உரிமை யாருக்கும் விற்கப்படவில்லை என்று அறிவித்துவிட்டார்.
உடனடியாக ஷங்கரின் புரொடக்ஷன் மேனேஜர் உதயகுமார் கைது செய்யப்பட்டார்.
திருப்பதி திருமலா பிக்சர்ஸ் ஊழியர் மீதும் ஹைதராபாத் போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எந்திரன் படம் திரையுலக வர்த்தகத்தில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இது இன்னொரு சான்று.
No comments:
Post a Comment