குசேலன்-பட விமர்சனம்
நடிப்பு- ரஜினிகாந்த், பசுபதி, வடிவேலு, மீனா, நயன்தாரா, லிவிங்ஸ்டன், பிரபு
ஒளிப்பதிவு-அரவிந்த் கிருஷ்ணா
இசை-ஜி.வி.பிரகாஷ் குமார்
திரைக்கதை, வசனம், இயக்கம் – பி.வாசு
தயாரிப்பு-ஜி.பி. விஜயகுமார், புஷ்பா கந்தசாமி
நல்ல சினிமா விரும்பிகளுக்காகவும் தன்னால் ஒரு படம் கொடுக்க முடியும் என சூப்பர்ஸ்டார் ரஜினி நிரூபித்திருக்கும் படம் குசேலன். ரஜினியின் தரமான படங்கள் எனப் பட்டியல் போடுபவர்கள் தாராளமாய் இந்தப் படத்துக்கு முதலிடம் கொடுக்கலாம். மலையாள ரீமேக்காக இருந்தாலும், குசேலனை தன் சிறந்த படமாகச் சொல்லி மார்த் தட்டிக் கொள்ளலாம் இயக்குநர் பி.வாசு. இரண்டு நண்பர்களுக்கிடையிலான நட்புதான் இந்தக் கதையின் அடிநாதம். மறையூர் கிராமத்தில் ஒரு ஓட்டை சலூன் வைத்திருக்கும் நேர்மையான ஏழை பாலு (பசுபதி). அன்றாட பிழைப்புக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டாலும், காதல் மனைவி ஸ்ரீதேவி (மீனா) மற்றும் மூன்று குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்க்கையைக் கழிக்கிறான். தனது பழைய சலூனைப் புதுப்பிக்க எங்கெங்கோ கடன் கேட்கிறார். அவனது நேர்மை யாருக்கும் அவனை லஞ்சம் கொடுக்க விடாமல் தடுக்கிறது. அதன் விளைவு எந்த அரசு வங்கியிலும் கடன் கொடுக்க மறுக்கிறார்கள். ஆனால் அவரிடம் உதவியாளராக இருந்த சலூன் சண்முகம் (வடிவேலு), நடைமுறையைப் புரிந்து தகிடுதத்தம் செய்து பெரிய நவீன சலூனைத் திறந்து ஏராளமாய் சம்பாதிக்கிறார். ஒருநாள் அந்த கிராமத்தின் இயல்பே தலைகீழாக மாறிப்போகிறது. காரணம் நாடே போற்றும் சூப்பர்ஸ்டார் அசோக்குமார் (ரஜினி) அந்த ஊருக்கு படப்பிடிப்புக்காக வருகிறார். இந்தப் படப்பிடிப்பால் கிராமத்திலுள்ள பலருக்கும் இதனால் வேலை கிடைக்கிறது. எல்லோர் கையிலும் பணம் புரள ஆரம்பிக்கிறது. அப்போதுதான் சலூன் பாலு, சூப்பர்ஸ்டார் அசோக்குமாரின் நெருங்கிய நண்பன் என்ற உண்மை கிராமத்தினர் மத்தியில் கசிகிறது. இதையடுத்து பாலுவை, ஊரே கொண்டாடத் துவங்குகிறது. ஊரே சூப்பர்ஸ்டாரை தரிசிக்க அவரது கெஸ்ட் அவுஸ் முன் தவம் கிடக்கிறது. ஆனால், தன் பழைய நண்பன் தன்னை இன்னுமா ஞாபகம் வைத்திருக்கப் போகிறான் என்ற அவநம்பிக்கையில் அவரைப் பார்க்கப் போகாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார் பாலு. நிர்பந்தம் காரணமாக ஒருமுறை பார்க்கப் போக, அங்குள்ள கடும் காவல் அவரை மெளனமாய் திரும்ப வைக்கிறது. ஷூட்டிங் முடிந்து அசோக்குமார் ஊரைவிட்டுக் கிளம்பும் கடைசிநாள் ஒரு பள்ளியின் விழாவில் கலந்து கொள்கிறார். அந்த விழாவுக்கு நீண்ட தயக்கத்துக்குப் பின் மனைவியுடன் புறப்படுகிறார் பாலு. அடுத்த சில நிமிடங்களில் யாருமே எதிர்பார்க்காத உணர்ச்சிப் பிரவாகமான காட்சிகள் அரங்கேற, விழா நடக்கும் பள்ளியே உருகி உறைந்து போகிறது. இரு நண்பர்களும் எப்படிச் சேர்ந்தார்கள் என்பது இறுதிக் காட்சி. படத்தின் ஆரம்பத்தில் ரஜினியின் ஆவேச ரசிகர்களாய் உள்ளே நுழையும் அத்தனைபேரும் ஒருவித நெகிழ்வுடன் வெளியேறும் காட்சியை ரொம்ப நாளைக்குப் பிறகு குசேலனில் பார்க்கலாம். நல்ல படத்துக்கு உயரிய தொழில் நுட்பமோ, வெளிநாட்டு சூட்டிங்கோ, பஞ்ச் டயலாக்கோ, பஞ்சர் டயலாக்கோ, கோடிகளைக் கொட்டி செட் போடுவதோ தேவையே இல்லை என்பது இந்தப் படம் உணர்த்தும் முக்கியப் பாடம். குசேலனில் ரஜினி தோன்றுவது வெறும் 40 நிமிடங்கள்தான் இருக்கும். ஆனால் ஒட்டுமொத்தப் படத்திலும் அவரே நிறைந்திருப்பது போன்ற மேஜிக்கை நிகழ்த்தியிருப்பது கதை எழுதிய சீனிவாசன் மற்றும் இயக்கிய வாசுவின் தனித் திறமை. அதிரடி, ரகளையான அறிமுகப் பாடல் கிடையாது. காற்றில் பறந்து பறந்து அடிக்கும் ஸ்டண்டுகள் கிடையாது. தனியான பஞ்ச் வசனங்களும் கிடையாது. வெளிநாட்டு லொக்கேஷன்களில் பாடல் காட்சிகள் கிடையாது. ஆனாலும் படத்தின் கதையால் விஸ்வரூபமெடுத்து நிற்கிறார் ரஜினி. 'மாதா, பிதா, குரு, நல்ல நண்பன், தெய்வம் – இதுதான் இன்றைய இளைஞர்களுக்கு நான் சொல்லும் புதிய மந்திரம்' எனும் ரஜினி, தனது வாழ்க்கைக்கு விளக்கேற்றிய நண்பனைப் பற்றிச் சொல்லும் காட்சி இன்றைய இளைஞர்களுக்கு ஒரு சரியான பாடம். கிளைமாக்ஸுக்கு முந்திய பள்ளி விழாவில் கலங்கிய விழிகளுடன் ரஜினி தன் நண்பனை நினைவு கூறும்போது கல்லும் கரையும். ரஜின் ஏன் இமயமலைக்குப் போகிறார்... அரசியலில் ஏன் அடிக்கடி குழப்புகிறார், சூப்பர் ஸ்டாராக இருந்து கொண்டே சந்நியாசி வாழ்க்கையை ஏன் வாழ்கிறார்? என்று கேள்வி-பதில் காட்சியும் படத்தில் உண்டு. ஆர்.சுந்தர்ராஜன் மூலம் கேள்விகள் கேட்கப்பட்டு ரஜினியே அதற்கு பதில் சொல்கிறார். பசுபதி... இந்தப் பாத்திரத்துக்கென்றே வார்க்கப்பட்டவர் போல அப்படியொரு கச்சிதம். 'அந்தப் பெரிய நடிகர் வந்ததால என் தூக்கம் போச்சி, அந்த விளக்கை அணைச்சிடு... அதுவாவது நிம்மதியா தூங்கட்டும்', என்று அவர் மனைவியுடன் பேசும்போது தம்மை மறந்து கைதட்டுகிறார்கள் ரசிகர்கள். நயன்தாராவுக்கு ஒரு வேலையும் கிடையாது. இரு பாடல் காட்சிகளில் வந்து போகிறார். குறைந்த காட்சிகளில் மிகக் குறைந்த உடையுடன் வந்து தந்த வேலையை நிறைவு செய்கிறார். கதபறயும் போளில் செய்த அதே வேடம் தான் இதில் மீனாவுக்கு. திரும்பவும் சிறப்பாகவே செய்திருக்கிறார் கண்ணழகி. படத்தில் பின்னி எடுக்கும் இன்னொரு கேரக்டர் வடிவேலு. வாவ்... வடிவேலுக்குள் எத்தனை பெரிய, அரிய நகைச்சுவைக் கலைஞர்..? பிரமிக்க வைக்கிறார். வாசுவின் படத்துக்கே உரிய ஏராளமான நட்சத்திர பட்டாளம் இதிலும் உண்டு. பிரபு, லிவிங்ஸ்டன், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், சந்தானபாரதி, விஜயகுமார் என திரை நிறைய ஏகப்பட்ட பேர். அவரவர் பாத்திரங்களில் நச்சென்று நடித்திருக்கிறார்கள். ஆனாலும் படத்தில் மகா வெட்டியாக வந்து போவது 'சின்னதம்பி' பிரபு. ( சந்திரமுகி செண்டிமெண்ட் போல..) அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும் பலம். பிரகாஷ் குமாரின் இசையும் குறைசொல்லும்படி இல்லை. பேரின்பப் பேச்சுக்காரன்..., போக்கிரி ராஜா... பாடல்கள் அருமை. நயன்தாரா தனியாகப் பாடும் அந்த மழைப் பாடல் படு செயற்கை. குசேலன்- கதை தரத்தில் குபேரன்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment