தொடங்கியது 'குசேலன்' திருவிழா; உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்!

தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் பலவும் திருவிழா கோலம் பூண்டுள்ளன... ரஜினியின் 'குசேலன்' இன்று வருகைபுரிவதை தரிசிக்க, ரசிகர்கள் திரண்டுள்ளனர். இது, ரஜினி படம் மட்டுமே அல்ல; ஆயினும் ரஜினி ரசிகர்களுக்கான படம்... 'கதபறயும்போள்'... மலையாளத்தில் கதையின் நாயகனாக ஸ்ரீனிவாசனும், முக்கிய கதாப்பாத்திரத்தில் மம்முட்டியும் நடித்த படத்தின் ரீமேக்தான் 'குசேலன்'. ஸ்ரீனிவாசன் கதாப்பாத்திரத்தில் பசுபதி; மம்முட்டி நடித்த ரோலில் ரஜினி. அங்கே ஸ்ரீனிவாசன் படம் என்றே பேசப்பட்டது; ஆனால், இங்கே... ரஜினி, ரஜினி மற்றும் ரஜினி! சென்னையில் மொத்தம் 21 திரையிரங்களில் வெளியாகியுள்ள 'குசேலன்' பட டிக்கெட்டுகள், முதல் பத்து நாட்களுக்கு ஹவுஸ்ஃபுல். கட்-அவுட், பாலாபிஷேகம், பட்டாசு சரவெடி என பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றனர், ரஜினியில் தீவிர ரசிகர்கள். 'முதல் நாள் முதல் காட்சி' கொண்டாட்டம் களைகட்டியிருக்கிறது.

பெங்களூரில் 'குசேலன்'

கர்நாடக மக்களிடம் ரஜினிகாந்த் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டதன் பலனாக, பெங்களூரில் 14 திரையரங்குகளில் இன்று குசேலன் வெளியாவதில் எவ்வித தடையும் இல்லாமல் போயுள்ளது. ஆனால் ரஜினியின் இந்த முடிவு, அவரது ரசிகர்கள் பலராலும் கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றன. எனினும், ரஜினி கேட்ட மன்னிப்பு, முதல் நாள் முதல் காட்சியில் பறந்து போகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை!

'குசேலன்' கதை!

கதபறயும்போளில் மம்முட்டி வெறும் எட்டு காட்சிகளில் மட்டுமே வருகிறார். தமிழில் நடிப்பது ரஜினி என்பதால், மூன்றாவது சீனிலிருந்து கடைசி காட்சி வரை வரும்படி கதையை மாற்றி அமைத்துள்ளார், பி. வாசு. கிராமத்து ஏழை சவரத் தொழிலாளி பாலனாக பசுபதி. அவரது மனைவி ஸ்ரீதேவியாக மீனா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். வறுமையான சூழலில், சூப்பர் ஸ்டார் அசோக்ராஜ் (ரஜினி) பாலனின் பால்ய நண்பன் என தெரிய வருகிறது. நண்பனிடம் உதவி கேட்கச் சொல்லி பாலனை சுற்றமும் நட்பும் வற்புறுத்துகிறது. பாலனின் தன்மானம் அதனை தடுக்கிறது. பாலன், அசோக்ராஜ் சந்திப்பு நிகழ்ந்ததா? பாலனின் வறுமை நீங்கியதா என்பதே கிளைமாக்ஸ்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...